“எழுக தமிழ் 2019” இடித்துரைக்கும் செய்தி- ஜெரா

“எழுக தமிழ் 2019” இடித்துரைக்கும் செய்தி- ஜெரா

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே ஆர்ப்பாட்டங்கள், நடைபயணங்கள், சத்தியாக்கிரகங்கள், பிரகடனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொங்குதமிழ், எழுக தமிழ் போன்றன அவ்வகைப் போராட்டங்களின் பிரம்மாண்ட வடிவங்கள்தான்.

முதல் வசனத்தில் குறிப்பிட்டவை உள்ளூரளவிலும், இரண்டாம் வரியில் குறிப்பிடப்பட்டவை சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெற்றவை. தமிழர்கள் தம் அரசியல், பண்பாட்டு, பொருளாதார இறைமைகள் குறித்த கூட்டபிப்பிராயத்தை அணிதிரண்டு சொல்லும் களமாக பொங்குதமிழ், எழுக தமிழ் ஆகியவை நோக்கப்பட்டன.

பொங்குதமிழ் புலிகள் பலமாக இருந்த தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட படியால் உள்ளக குழப்பங்கள் நடக்க வாய்ப்பிருக்கவில்லை. இராணுவமும், ஒட்டுக்குழுக்களும் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டன. எழுக தமிழுக்குப் பெரியளவில் (பொங்கு தமிழைப்போல) வெளியக அழுத்தங்கள், குழப்பங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

கண்காணிப்பு இருந்தது. ஆனால் இன்று முடிந்திருக்கும் எழுகதமிழ் 2019 அதிகளவில் உள்ளக குழப்பங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக முடிந்திருக்கிறது.

முதல் எழுக தமிழின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் ஆதரவு ஊடகங்களும் செய்த எதிர்ப்பரப்புரையின் வரிசையில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அதன் செயற்பாட்டாளர்களும், ஆதரவு ஊடகங்களும் இணைந்திருந்தன.

அரச தரப்பு இம்முறை மயான உறைநிலையில் அவதானித்துக் கொண்டிருந்தது. எழுக தமிழ் 2019 ஐ எதிர்த்த தரப்பினரால், பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள், விமர்சனங்களின் பின்னரான பிரகடனத் திருத்தங்கள், பேரவையில் இணைத் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் மீதான விமர்சனம், ஈ.பி.ஆர்.எல். எவ் மீதான விமர்சனம், இந்திய பின்னணியில் நடத்தப்படும் எழுக தமிழ், பேரவை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணிக்கான அணிதிரட்டலை எழுக தமிழாக செய்கிறது எனப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பேரவையின் போதாமைகள் உண்மையில் 2009க்குப் பின்னரான தமிழர் அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருந்தது. அது தனது பொறுப்பிலிருந்து விலகி வேறு திசையில் செல்லவே அப்பொறுப்பை ஏற்க வேண்டிய இடத்தில் தமிழ் சிவில் அமைப்புக்கள் இருந்தன. ஆனால் கனதி மிகுந்த அப்பொறுப்பை ஏற்கக்கூடியவகையில் தமிழ் சிவில் சமூகங்கள் செயலூக்கம் கொண்டவையாக இருக்கவில்லை.

ஏதோ ஒரு விதத்தில் கட்சிகளின் அரசியலை அனுசரித்தே செல்லவேண்டிய தேவையிருந்தது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்தின் பின்னரும், அது நடத்திய முதலாவது எழுக தமிழின் பின்னரும் சிவில் சமூகம் பலமடைந்துவருகின்றது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.

குறித்த சிவில் சமூக அமைப்பில் அதிகளவில், முக்கிய பொறுப்புக்களில் கட்சிகள் இருந்தமையினால், உள்வீட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டன. அவரை வெளியேற்ற வேண்டும், இவரை வெளியேற்றவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தொடங்கவே பேரவையும் பலவீனமடையத்தொடங்கியது.

இந்த இடத்தில் பேரவையை தக்கவைத்திருக்க வேண்டுமெனில் உடனடியாகவே கட்சிகளை அதிலிருந்துவெளியேற்றிவிட்டு, வடக்கு கிழக்கின் மாவட்ட அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொள்ளும் - கட்சி அரசியல் பின்னணியற்ற செயற்பாட்டாளர்களை இணைத்துப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.

சம காலத்தில் கட்சிகளின் பின்னணியற்ற அலல்து கட்சிகளால் கைவிடப்பட்ட நிலையில் சுயாதீனமான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்திருந்தமையும், ஆங்காங்கே சுயாதீன செயற்பாட்டாளர்கள் உருவாகியிருந்தமையையும் கவனிக்கவேண்டும்.

ஆனால் இவற்றில் கவனம்கொள்ளாது பேரவையினர் கட்சிகளை சமாளித்து மீளவும் உள்ளிழுக்கும் போராட்டத்தில் கவனமாக இருந்தனர். அதன் உச்சக்கட்டமாக பேரவையின் உயர்பதவியில் இருந்துகொண்டே முன்னாள் முதலமைச்சர் தனிக் கட்சி ஆரம்பித்ததும், அவரின் கட்சியினது தான் தமிழ் மக்கள் பேரவை B Team என்ற விமர்சனத்தையும் சந்தித்தது.

அந்த விமர்சனம்தான் எழுக தமிழ் 2019 முன்னாள் முதலமைச்சரின் கட்சிக்கான விளம்பரமாக நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் காரணமாகியது. இன்றுவரை பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து விலகாமலே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் செயற்பட்டுவருவதும் இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் காரணியாக இருக்கின்றது.


எனவே முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட பேரவையில் பொறுப்புக்களை ஏற்றிருக்கும் கட்சிகள், அதிலிருந்து விலகி சிவில் சமூகமொன்றின் எழுச்சிக்கு வழிவிடுவதுதான் இப்போதைக்கு சிறந்தது. கட்சி அரசியலை தனியாக – வேறுவழியில் செய்துகொள்வதே காலச்சூழலுக்குப் பொருத்தமானதாகும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களின் விளைவு, முதல் எழுக தமிழுக்குத் திரண்ட 10 ஆயிரம் பேரளவானவர்களை 3 ஆயிரம் பேர்களுக்குள் கொண்டுவந்துவிட்டிருக்கிறது. முன்னணி ஆதரவாளர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, எழுக தமிழ் 2019 இந்தியாவின் பின்னணியில் நடக்கிறது என்பதுதான். யாழ்ப்பாணத்தில் நடக்கும் சாமத்திய வீட்டுக் கொண்டாட்டம் வரைக்கும் நுழைந்திருக்கும் இந்தியாவினால், இந்த எழுக தமிழுக்குள் நுழையமுடியாது எனச் சொல்லவும் முடியாதுதான்.

பலாலி விமான நிலைய அபகரிப்பு தொடக்கம், யாழ். நகரின் அடையாளத்தையே – அதன் நிலவியல்பையே மாற்றும் வகையில் உருவாகும் இந்தியாவின் பண்பாட்டு மண்டபம் வரையான நுண்வடிவிலான அத்தனை அபகரிப்புக்களுக்கும் ஒரு கண்டன அறிக்கைதானும் வெளியிடாத முன்னணி இந்த விடயத்தில் மட்டும் இந்தியாவை எதிர்த்து நிற்பதையும் அவதானிக்க முடிகிறது.

2009க்குப் பின்னர் இந்தியா யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக் குறித்து மென்மையான கண்டனத்தையாவது முன்னணி பதிவுசெய்திருப்பின் இப்பதிவின் கொமண்ட்பகுதியில் சுட்டிக்காட்டவும். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்றன பேரவையில் அங்கம் வகித்தபோது, அவர்களுடன் இணைந்து முதலாவது எழுக தமிழ் நடத்தியபோது அமைதிகாத்த முன்னணி இம்முறை விமர்சிக்கத்தொடங்கியிருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை பூகோள அரசியல் பற்றிப் பேசும் முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற முன்னாள் ஆயுதக் குழுக்கள் பேரவைக்குள் வரும்போதும், அவர்களுடன் இணைந்து எழுக தமிழை நடத்தியபோதும் இதற்குள் இந்திய பின்னணி உண்டு என்ற விமர்சனங்களை முன்வைக்கவில்லை.

குறைந்தபட்சம் குறித்த முன்னாள் ஆயுத குழுக்களுடன் ஒன்றாக மேடையேறுவதைக் கூட தவிர்த்திருக்கவில்லை என்பதையும் அவதானித்திருக்கிறோம்.

2016 தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, அந்த உருவாக்கமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விழுங்கிவிடும் என நான் அவரிடம் தெரிவித்ததை மறந்திருக்கமாட்டார் என நம்புகின்றேன். ஒரு கூட்டமைப்பில் இணைந்து செயற்படப்போகிறோம் எனில், அதற்குள் அதிகாரத்தைப் பொறுப்பிலெடுக்க போராடுதலே சரியான தலைமைத்துவத்திற்கு உதவும் காரணி. பேரவையின் தீர்மானிக்கும் சக்தியாக முன்னணி மாறியிருந்தால், அவர்கள் குறிப்பிடுவது போல இந்திய தலையீடு இருந்திருப்பின் அதற்கு எதிரான காய் நகர்த்தல்களைக் கூட செய்திருக்கலாம்.

வெளியில் நின்று விமர்சித்தலென்பது, நாளுக்கு நாள் விமர்சிப்பதற்கான பரப்பை அதிகரிக்குமே தவிர, புதிய விடயங்களில் கவனம்செலுத்த வழிவிடாது. இதுவரை காலமும், கூட்டமைப்பை மட்டுமே விமர்சித்து வந்த முன்னணியினருக்கு இந்த எழுக தமிழோடு பேரவை, தமிழ் மக்கள் கூட்டணி, ஆயுதக்குழுக்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கிடைத்திருக்கின்றனர்.

சரி, உள்ளேயிருந்து போராட முடியாவிட்டால், உடனடியாகவே வெளியேறி, தமது கொள்கையை மக்களிடம் கொண்டுபோவதற்காக போராடுதல்தான் சிறப்பானது. எழுக தமிழ் 2019 அறிவிக்கப்பட்ட பின்னர் முன்னணி அதற்கு எதிராக மேற்கொண்ட விமர்சனங்களை அவதானித்த ஆதரவாளர்களில் கனிசமானோர் ஆதரவு நிலையிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

இவ்விரண்டு தரப்பையும் விட சுமந்திரன் எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்திருப்பதையும் உரையாடல்களின் கேட்கமுடிந்தது. தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் தேர்தல் அரசியல் மீது வெறுப்பலை உருவாகிவருகிறது. இது இனிவரும் தேர்தல்களில் பெரியபாதிப்பை ஏற்படுத்தும். எது என்னவோ, இவ்வளவு அரசியலுக்கு மத்தியிலும் இன்றைய எழுக தமிழுக்காகத் திரண்டவர்கள் கடுமையான போரின் பாதிப்பை எதிர்கொண்ட வறுமையாளர்கள்.

பிள்ளைகளை, கணவன்மாரை இராணுவத்திடம் கையளித்துவிட்டுத் இந்தப் பொழுதிலும் ஏதாவதொரு தெருமூலையில் நோய்க்கும் பிணிக்கும் மத்தியில் நின்று போராடிக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் கண்ணீரின் மீது அரசியல் செய்வதைக் கைவிடுங்கள். நல்லூர் முன்றலிருந்து அனல் கொதிக்கும் வெயிலிலில் காணாமலாக்கப்பட்ட தம் பிள்ளைகளின் படங்களைத் தாங்கி, முற்றவெளி வரையான 12 மைல்களை நடந்தே கடப்பது இலகுவான காரியமல்ல.

அனேகர் போல அவர்களாலும் இன்றைய தினம் விடுமுறையை வீட்டில் இருந்து அமைதியாகக் கொண்டாடியிருக்க முடியும். ஆனால் அது எதையும் பொருட்டாக எடுக்காது ஓரிடத்தில் அணிதிரள்கிறார்கள், நீண்டதூரம் நடக்கிறார்கள் எனில் அதற்குரிய மரியாதை கொடுக்கப்படவேண்டும். அரங்கிற்கு பின்னாலும், நிகழ்வு நிறைவுற்ற பின்னரும் இந்தா பார் சனமே வரேல்ல. விக்கியர் தோற்றிட்டார் என்று ஏளனம் செய்வதெல்லாம் அந்த அரசியல்வாதியை அவமதிப்பதாக அமையாது.

அந்த அவமானங்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டுமல்ல. அவ்வளவு அவமானங்களும் இந்தக் கண்ணீர்த்தாய்களுக்கும் சேர்த்தே வாரி வழங்குகிறீர்கள் என்பதை உணருங்கள். அந்த இடத்தில் 10 பேர் பதாகைளுடன் நின்றாலும் அது மரியாதைக்குரியது.

ஏனெனில் தமிழர்களின் விடுதலைப் பயணம் இது மாதிரியாக சிறுகச் சிறுக கட்டி சிதைக்கப்பட்டதுதான். அந்த உணர்வை தக்கவைக்கவாது இந்த மாதிரியான அணிதிரட்டல்கள் உதவும். பஸ் ஏன் ஓடேல்ல?

ஏன் இன்றைக்குப் பள்ளிக்கூடம் இல்ல?
ஏன் கடைகள் திறக்கேல்ல?
என்ற கேள்வியை கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் நமது அரசியலை கற்கிறது என்பதை உணருங்கள்.  நாகரீகமான அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்ப மனதளவில் தயாராகுங்கள்.

-ஊடகவியலாளர் , ஜெரா-
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com