தமிழ் மக்கள் தீர்மானிக்கட்டும்

தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பது தமிழர் நலன் சார்ந்தவர்களின் கருத்து.

அந்தக் கருத்தில் நிறைந்த உண்மைகளும் நியாயப்பாடுகளும் உண்டு.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் ஒற் றுமை என்பது இதுவரை சாத்தியப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட ஒற்றுமைப்பட முடியாமல் போயிற்று.கூட்டமைப்பில் இருந்து சில அரசியல் கட்சிகள் வெளியேறுகின்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியின் முகவரியுடன் அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் கூட்டமைப்பு இயங்க வேண்டுமென்பதாக இருந்தது.இதனால் கூட்டமைப்பு பலவீனப்படுகின்ற நிலைமைக்கு வருவது தவிர்க்க முடியாததாயிற்று.

இத்தகையதோர் சூழ்நிலையில், மாற்றுத் தலைமையின் அவசியம் உணரப்பட்டது. தமிழ் மக்களின் நலன்களை; அவர்களின் உரிமைகளை; இனப்பிரச்சினைக்கான தீர்வை கூட்டமைப்புக் கவனித்துக் கொள்ளும் என்று நாம் பேசாதிருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும் என்று தமிழ் மக்கள் நினைத்தனர்.

இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார் விடயங்களில் கருசனை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்ப்பற்றாளர்கள், சமயத் தலைவர்கள் எனப் பல தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக தமிழ்மக்கள் பேரவை உதயமாகியது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலை வர்களில் ஒருவராக வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.இது தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் பலரையும் ஈர்ப்புச் செய்தது.

பேரவையின் நடவடிக்கைகள் மிகப்பெரும் விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியபோது,
தமிழர்களுக்கான தலைமையை நீதியரசர் விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை களத்திலும் புலத்திலும் எழுந்தன.

இந்நிலைமை முக்கிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாயிற்று. எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று படுவது என்ற விடயத்தில் உடன்பாடு எட்டப்படுவதில் சிக்கல்களும் குழப்பங்களும் இருக்கவே செய்கின்றன.

அதாவது தமிழர்களின் உரிமை என்ற விடயத்தை மையப்படுத்திக்கூட தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபடுவது கடினம் என்பதால்,அவற்றை ஒற்றுமைப்படுத்துவது பட்டமரத்துக்கு நீர் பாய்ச்சுவதாகவே இருக்கும்.

ஆகையால் எந்த தமிழ் அரசியல் கட்சியை தமிழ் மக்கள் தமது அரசியல் தலைமையாக ஏற்கிறார்களோ அவர்களை அங்கீகரிப்பது என்ற முடிவுக்கு வருவதுதான் இப்போதிருக்கின்ற ஒரே வழி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுதான் யதார்த்தமான உண்மை.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com