தியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது! மூத்த போராளி திரு.தேவர்

தியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது! மூத்த போராளி திரு.தேவர்

தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள்  தமிழீழம் என்று மலர்ப் போகின்றது என்று ஏக்கக் கனவோடு வானத்திலே காத்திருக்கின்றார்கள்! நாம் என்ன செய்யப் போகின்றோம்???

தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாளில், மூத்த போராளி திரு.தேவர் அவர்களின் நினைவுப் பகிர்வின் போதே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். 1987 இல் நடைபெற்ற உண்ணா நோன்பு பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்....

உலகமே அமைதியானது. நல்லூர் வீதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் பெரும் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தது.

1987 செப்டம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48மணி. திலீபன் உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் சிவகுமார் திலிபனை அழுதவாறு திலீபனின் மறைவை உறுதிப்படுத்துகின்றார்.


தியாகதீபம் திலீபன் அந்தக் கணத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டான். அந்தப் பேரமைதியைக் கிழித்துக்கொண்டு அனைவரும் கதறியழத் தொடங்கினர். எங்கும் அழுகையொலி.

அந்தப் பன்னிரு நாட்களும் திலீபன் உண்ணா நோன்பிருந்த அந்த மேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த திலிபனின் தந்தையார் முதன்முதலாக மேடையில் ஏறி திலீபன் உடல்மீது விழுந்து கதறி அழத்தொடங்கினார். 

 உடனடியாக திலீபனின் மரணச் செய்தி இந்திய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த தேசியத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.

திலீபனின் மறைவுச் செய்தி கிடைத்தவுடன் பேச்சு வார்த்தையை இடையில் நிறுத்திவிட்டு தேசியத் தலைவர் திரும்பியிருந்தார். இந்த வேளையில் திலீபன் உண்ணா நோன்பினை ஆரம்பிப்பதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன்....

 1987 செப்டம்பர் 14ஆம் நாள் காலை 'மன்மதன் இல்லம்' என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபனும், அவரோடு 90க்குப் பின் சில வருடங்கள் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட ராஜனும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்கள்.

1987 ஆகஸ்ட்ஸ15ஆம் நாள் தமிழ்நாட்டில் இருந்து இந்திய விமானத்தில் வந்திறங்கிய காசியண்ணாவும், நானும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம்.

தலைவர் அவர்களது அலுவலகப் பணிகள் எம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. திலீபனின் வருகையை தலைவருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து திலீபன் உள்ளே அழைக்கப்பட்டார். காசியண்ணா மற்றும் எங்களோடு ராஜன் பேசிக்கொண்டிருந்தார்.

 1987 ஜுலை 29ஆம் நாள் இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து, 30ஆம் திகதி காலை முதல் இந்திய விமானங்கள் பலாலியில் வந்து தரையிறங்கத் தொடங்கின. விமானங்களில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் கொண்டுவந்து குவிக்கப்பட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் நாம் விரும்பாத பல நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கின. ஆயுத ஒப்படைப்பு என்ற பெயரில் புலிகள் தங்களதும், தமிழீழ மக்களதும் பாதுகாப்புக்கென வைத்திருந்த ஆயுதங்களை நயவஞ்சகமாக பெற்றுக் கொண்டது இந்திய இராணுவம்.

இந்தியாவை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த அதேவேளை இந்திய உளவுப்பிரிவு RAW Eprlf, Telo, Eprlf, Endlf போன்ற அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.

இந்தியா கொடுத்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அந்த அமைப்புக்கள் தாக்கத் தொடங்கின. அதே கால கட்டத்தில் தமிழீழத்தின் எல்லைப் புறங்களில் புதிது, புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பொலிஸ் நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படாமல் தமிழ் மக்களுக்கு விரோதமாக நடவடிக்கை கள் இடம்பெற்றதனால் இந்திய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழர் பகுதிகளில் இடம்பெற்றன.

இந்திய அரசின் ஓர வஞ்சனையான, அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காந்தீய வழியில் ஒரு உண்ணா விரதத்தை தான் மேற்கொள்ளப் போவதாக அரசியல் துறையைச் சேர்ந்த போராளிகளிடம் தெரிவித்த திலீபன், அதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவே தேசியத் தலைவரின் சந்திப்புக்காக வந்திருந்தார்.

தேசியத் தலைவரின் அறைக்குள் சென்றிருந்த திலீபன் இரண்டு மணிநேர இடைவெளியின் பின் சிரித்த முகத்தோடு வெளியே வந்தார்.

 "நான் உண்ணா விரதம் இருப்பதற்கு தலைவர் அனுமதி வழங்கிவிட்டார்" என ராஜனிடமும் எம்மிடமும் தெரிவித்துவிட்டு, மகிழ்ச்சி ரோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மீண்டும் திலீபன் தலைவரின் விசேட அழைப்பின் பேரில் அன்றிரவும் மன்மதன் இல்லத்திற்கு வந்திருந்தார். மன்மதன் இல்லம் வந்திருந்த திலீபன் அன்று நள்ளிரவு வரை தலைவரோடும் மற்றையவர்களோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அன்றைய இரவுணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து, தலைவர் அவர்களும் அவரது பாதுகாவலர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தலைவர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன் என்னை அழைத்து, "அண்ணா நாளைக்கு காலையில வேளையோட வெளிக்கிட்டுப் போங்கோ.நீங்கள் திலீபனுக்கு பக்கத்திலேயே இருக்க வேணும்.நான் இரவு நேரங்களிலதான் அங்கை வருவன்.கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ" என்று மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றார்.

மறுநாட் காலை நான் நேரத்துடனேயே நல்லூர் வீதிக்குச் சென்று விட்டேன். பத்திரிகைச் செய்தியைப் பார்த்துவிட்டுப் போலும், மக்கள் சிறிதளவு வந்து கூடியிருந்தனர். சிறந்த முறையில் மேடை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நல்லூர் கோவிலின் வீதியில் வடகிழக்கு மூலையில் இந்திரன் வாகனத் திருத்தகத்திற்கு முன்பாக அது அமைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எனது கண்கள் அங்குமிங்குமாக சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. தலைமுடி வெளுத்த வயதான தாயார் ஒருவர் அர்ச்சனை செய்துவிட்டு கொண்டு வந்திருந்த பொருட்களோடு யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

சிறிதுநேரத்தில் 'கந்தன் கருணை' இல்லத்தில் இருந்து திலீபன் மற்றும் போராளிகளைச் சுமந்தவாறு ஒரு வாகனம் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. முன் ஆசனத்தில் இருந்து திலீபனும், சொர்ணமும், இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து அன்ரன் மாஸ்டர், Solt முரளி, காசி ஆனந்தன், ராஜன், வாஞ்சிநாதனும் இன்னும் சிலரும் இறங்கி வந்தனர்.

அவர்கள் மேடைக்கு சமீபமாக வந்து சேர்வதற்கு முன்பதாக அர்ச்சனைப் பொருட்களோடு காத்து நின்ற அந்த வயோதிபத் தாய், வந்தவர்களை மறித்து விழித்திரையில் கண்ணீரோடு அர்ச்சனை சரையில் இருந்து விபூதியை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசி ஆசி வழங்கினார். தமிழ்த் தாயே நேரில் வந்து திலீபனை வாழ்த்தியது போன்ற உணர்வை அது என் நெஞ்சில் ஏற்படுத்தியது.

காலை 9.45 மணியளவில் உண்ணாவிரத மேடையில் திலீபனை அமர வைத்தோம். அருகில் அமைக்கப்பட்டிருந்தது மேடையில் பிரசாத்தின் தலைமையில் உண்ணாவிரதம் எதற்காக நடத்தப்படுகின்றது என்பதனை விளக்கும் கூட்டமும் நடைபெற்றது.

முதலாம் நாள் இரண்டாம் நாள் என் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தேசியத்தலைவருக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்வின் போது அருகிருந்த மேடையில் தேவர் தலைமையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

நான்காவது நாள் திலீபன் ஆற்றிய உரை என்றுமே எம்மால் மறக்க முடியாததாகும். அவரது உரை இப்படி அமைந்திருந்தது.

 "அன்பார்ந்த தமிழீழ மக்களே! 
விளக்கு அணையுமுன் பிரகாசமாக எரியுமாம். அதுபோல நானும் இன்று உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள். ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.

மறைந்த போராளிகள் 650 பேர்களுடன் சேர்ந்து651ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டி விடும். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். எனது அவயங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழ முடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் கொள்கைக்காக உயிர் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால்  எவ்வித தீங்கும் வந்துவிடாது.

 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.

திலீபனுக்கு ஆதரவாக திருமதி நல்லையா, செல்வி சிவா துரையப்பா,செல்வி குகசாந்தினி ஆகிய மூவர் சாகும்வரையான உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தனர். அவர்களுக்காக திலீபன் மேடைக்கு கிழக்குப் புறமாக சிறிய மேடை ஒன்றும் அமைக்கப்பட்டது. வல்வையில் திலீபனுக்கு ஆதரவாக திரு.கருணானந்தராஜா உட்பட ஐவர் உண்ணா நோன்பினை ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பில் போராளி மதனும், முல்லைத்தீவில் போராளி திருச்செல்வமும் உண்ணா நோன்பினை ஆரம்பித்திருந்தார்கள்.

திலீபன் உண்ணாவிரதம் பற்றிய விளக்கக் கூட்டம் கோளில் தமிழகத்தில் இருந்து சென்றிருந்த ஐயா.பழ.நெடுமாறன் அவர்களும் மற்றும் காசி ஆனந்தன், யோகி அவர்களும் உரையாற்றினார்கள்.

இந்திய அதிகாரி தீக்சிட் நினைத்திருந்தால் திலீபனைக் காப்பாற்றியிருக்க முடியும். அவனது பிடிவாதப் போக்கும், திமிர்த்தனமுமே திலீபனைச் சாகடித்தது.

நான் இறந்தால் எனது உடல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என முன்பே குறிப்பிட்டிருந்தார். திலீபனின் பிறந்த மண்ணில் இருந்து அவரது புகழுடம்பு ஊர்வலமாக சுதுமலை வரை எடுத்துச் செல்லப்பட்டு யாழ் மருத்துவ பீடத்தின் பொறுப்பாளரிடம் திலீபனின் உடல் மற்றும் தேசியத் தலைவர் கையொப்பத்துடன் கூடிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

கேர்ணல் சங்கர் மற்றும், தேவர் அண்ணா ஆகியோர் கடிதம் அடங்கிய கோப்பினை கையளித்தனர்.

தியாகதீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்று மலர்ப் போகின்றது என்று ஏக்கக் கனவோடு வானத்திலே காத்திருக்கின்றார்கள்! நாம் என்ன செய்யப் போகின்றோம்?Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com