தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

 தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன் விளைவை இன்று ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் அனுபவித்து வருகிறது.

எனவே இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலாவது தமிழரசுக் கட்சி தனிப்பட்ட முடிவை எடுக்காமல் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி அதில் எட்டப்படும் முடிவுகளுக்கமைய தேர்தலை முகங்கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு வரவேண்டும்.

எனவே மதத் தலைவர்களும், துறைசார்ந்த நிபுணர்களும், பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து அல்லலுறும் தமிழ்த் தேசிய இனத்தின் நலன் சார்ந்து ஒருமித்த முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 28.09.2019 அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…..

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எமது தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவும், 2015ஆம் ஆண்டு தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவு.

இரண்டு தேர்தல்களிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில் எத்தகைய நிபந்தனையையும் விதிக்காமல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் முடிவு எட்டப்பட்டது. ஆனால் நாம், நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டாம் என்று தெரிவித்தோம்.

இருப்பினும் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சி உதாசீனம் செய்தது. முதல் இரண்டு தேர்தல்களிலும் மகிந்தராஜபக்ச வென்று விடக்கூடாது என்ற பிரச்சாரத்தை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் விடயத்தைக் கோட்டை விட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரி வென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்த திரு.இரா.சம்பந்தன் இன்று தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையான முடிவுகள் எதனையும் மேற்கொள்ளாமல், தமிழ்த் தேசிய இனத்தின் நலன் சார்ந்து சிந்திக்கும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு பொது முடிவினை எட்டுவதற்கு முன்வர வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நின்று முடிவெடுத்தால் அது சிங்களத் தரப்பினருக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்ற கருத்து சில தமிழரசுக் கட்சியினரால் தெரிவிக்கப்படுகிறது. எமது உரிமைகளை நாம் பின் கதவு வழியாகப் பெற்றுக்கொள்ள முடியாது.

யாருக்கும் தெரியாமல் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் எமது உரிமைகளைக் கொடுப்பார்கள் என்று சொல்வதே எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல். எனவே அனைத்து மதத் தலைவர்களுடனும், துறைசார் நிபுணர்களுடனும், அனைத்து பொது அமைப்புக்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எட்டப்படும் முடிவிற்கமையவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேண்டும் என்று மதத் தலைவர்களும், துறைசார் வல்லுனர்களும், பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ் தரப்பினர் அரனைவரும் கூடி எடுக்கும் முடிவினை அனைத்து நாடுகளின் இராஜ தந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com