இந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே - செ.கஜேந்திரன்
இலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தினை சுட்டிக் காட்டியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தின் போது இந்தியா உதவியதற்கான காரணம், அவரை தங்களின் கைகளுக்குள் வைத்துகொள்ள முடியுமென்ற நோக்கிலேயே ஆகும். ஆனால் அந்த விடயத்தில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
மீண்டும் அதே தவறை செய்ய இந்தியா முற்படுகின்றது. இந்திய அரசின் தவறான அணுகுமுறையும், இராஜதந்திர குறைபாடுமே அதன் தென் பகுதியான இலங்கைக்குள் சீன தரப்பை அனுமதித்தமைக்கான காரணமாகும்.
இதிலிருந்து இந்தியா பாடங்களை கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இலங்கை பௌத்த பேரினவாதம் இந்தியாவுக்கு ஒருபோதும் விஸ்வாசமாக இருக்கப் போவதில்லை. இந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்கள் மாத்திரமேயாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.