கேர்ணல் சங்கர் அவர்கள் பற்றி- மூத்த போராளி திரு.தேவர் அண்ணா

கேர்ணல் சங்கர் அவர்கள் பற்றி- மூத்த போராளி திரு.தேவர் அண்ணா

1983இல் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப் படுகொலையைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும், கொழும்பில் அரச பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுமாக தமிழ் இளைஞர்கள் பலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழீழ இலட்சியத்தை தங்கள் நெஞ்சங்களில் வரித்துக் கொண்டு களமாட முன்வந்தனர்.


அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் இருந்து தங்கள் உயிர்களுக்குப் பாதுகாப்புத் தேடி ஆயிர மாயிரமாக ஈழத்தமிழ் மக்கள் கடல் கடந்து தமிழகம் நோக்கி வந்து சேர்ந்தனர்.

1983 ஆகஸ்ட் 15ஆம் நாள் டெல்ஹி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், இலங்கையில் திட்ட மிட்ட இனப் படுகொலை நடப்பதை இந்தியா பார்த்துக் கொண்டு சும்மாயிராது" என எச்சரிக்கை விடுத்தார்.

அத்தோடு நின்று விடாமல் விடுதலைப் புலிகள் உட்பட்ட போராளி அமைப்புக்களுக்கு ஆயுதப் பயிற்சிகளும் வழங்க இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சி முன் வந்தது. இந்திய உளவு நிறுவனமான RAW அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

அது பற்றிய பேச்சு வார்த்தைகளுக்காக தேசியத் தலைவர் அவர்களும், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் தமிழகம் வந்து சேர்ந்திருந்தனர். சென்னை, புதுச்சேரி, மதுரை போன்ற இடங்களில் ஈழத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட புதிய போராளிகள் தங்க வைக்கப்பட்டனர்.

அந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் அப்போது மதுரையில் தங்கியிருந்த தலைவரைச் சந்திப்பதற்காக பாண்டிச் சேரியில் இருந்து நான் புறப்பட்டுச் சென்றேன். புதுவையில் இருந்து விழுப்புரம் சென்ற நான், அங்கிருந்து மதுரை செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிக்கொண்டேன்.

இரண்டு பேர் அமரும் ஆசனம் ஒன்றில் ஜன்னல் ஓரமாக ஒருவர் அமர்ந்திருந்தார். நான் சென்று அவர் அருகில் அமர்ந்து கொண்டேன். முழுமையாக முகச்சவரம் செய்து மீசை இன்றி சிங்களவர் ஒருவர் போன்று இருந்தது அவர் தோற்றம். அவரது கையில் இலங்கையில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று இருந்தது.

சிறிது நேரம் கழித்து நான் அவரோடு சிங்கள மொழியில் பேசத் தலைப்பட்டேன். நான் தமிழர் என்பதைப் புரிந்து கொண்ட அவர் என்னோடு தமிழில் பேசினார். எங்கள் இருவர்க்கும் இடையில் அறிமுகப்படலம் முடிந்தபோது நாம் இருவரும் நெருக்கமானவர்கள் ஆகிவிட்டோம்.

நான் வல்வையைச் சேர்ந்தவன் என்பதனால் என்மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். நானும் வல்வையைச் சேர்ந்தவர் என்றும் நீண்ட காலமாக வவுனியாவிலேயே வாழ்வதாகவும் கூறினார். கலவரம் பற்றி உரையாடிய போது அவரின் நெஞ்சத்தில் தமிழீழ இலட்சியம் கனன்று கொண்டிருந்ததை அன்றே நான் உணர்ந்துகொண்டேன்.

நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர்களைச் சந்திப்பதற்காகவே தான் தமிழகம் வந்திருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

அப்படி யாரையாவது நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார். முதன் முதலாக அறிமுகமானது ஒருவரிடம் நான் எப்படி எனது பின்புலத்தைப் பற்றி தெரிவிக்க முடியும்?
இயக்கத்தோடு தொடர்பு வைத்துள்ள ஊரவர்கள் சிலரைத் தெரியும் என்றும் அவர்கள் மூலமாக ஏதாவது செய்வதற்கு முயற்சி செய்வதாகவும் அவரிடம் கூறினேன்.

அவரும் மதுரைக்குச் செல்வதாக கூறினார். "மதுரையில் எங்கு தங்குவீர்கள்?" என் நான் அவரிடம் கேட்டேன். அங்கு அரசடி என்ற இடத்தில் கிறீஸ்தவ மதகுரு ஒருவரோடு தாக்குவதாக தெரிவித்த அவர், தனது பெயர் விபரங்களோடு மதுரையில் நான் தங்கப் போகும் முகவரியையும் என்னிடம் தந்தார்.

மதுரையில் நாம் இருவரும் சிரித்துகொண்டோம். தலைவரைச் சந்தித்தவுடன் நான் செய்த முதல் வேலை அந்த தகவலை அவரிடம் தெரிவித்ததே!

அவர் முன்பே நாட்டில் எங்களுடன் தொடர்பில் இருந்திருக்கின்றார், அவரது தம்பி ஒருவரும் முன்பே இயக்கத்தில் இணைந்து கொண்டிருக்கின்றார். 1981 இல் லெப்டினன்ட் சித்தார்த்தன் மூலம் இயக்கத்துடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர். இடையில் தொடர்புகள் விடுபட்டு மீண்டும் அதனைப் புதுப்பிக்கும் நோக்கோடு தமிழகம் வந்து சேர்த்திருந்தார்.

என்னிடமிருந்து தகவலைப் பெற்றுக்கொண்ட தலைவர் அவர்கள் முரளியை அனுப்பி அவரைத் தொடர்பு கொள்கின்றார். முரளி இயக்கத்தில் இணைந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து பாலா அண்ணரோடு தமிழகம் வந்திருந்தார். பின் நாட்களில் விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பிற்குப் பொறுப்பாக இருந்தவர்.

கேர்ணல் சங்கர் இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்த நாளில் இருந்து எதிரிகளின் தாக்குதலில் வீரச்சாவடையும்வரை தலைவருக்கு உற்ற தோழனாக துணைவனாக நின்று செயற்பட்டவர்.

மணலாற்றுக் காட்டில் தலைவர் வாழ்ந்த காலத்திலும் சங்கரது பங்களிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. திசையில் கருவியின் உதவியோடு அவர் பெற்றிராத இடங்களே இல்லை எனலாம்.

கானகத்தில் இருந்து வெளியே வந்த பின்பு வல்லவை ஊரிக்காட்டில் 'கடல்புறா' என்ற முகாமை உருவாக்கி கடற்புலிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். சிறிலங்காவில் மிகப்பெரிய கப்பல் ஒன்றை முதன் முதலாக காந்தரூபன், வினோத், கொலின்ஸ் என்ற கரும்புலிகளை உருவாக்கி அந்த கப்பலை நிர்மூலமாக்கியதில் சங்கரின் பங்கு அளப்பரியது.

விமானப் பொறியியல் கல்வியை முடித்துக் கொண்டுள்ள அவர். அந்த அறிவின் துணையோடு விடுதலைப் புலிகளுக்காக வான்படையை உருவாக்கினார்.

மூத்த போராளிகளோடு மாத்திரமன்றி இளைய போராளிகளோடும் அன்பாக அவர்களை அரவணைத்து அறிவுரைகள் கூறி அவர்களை வளர்த்தெடுத்து வந்தார்.

சங்கரின் மற்றுமோர் சகோதரர் கப்டன் கரன். புலேந்திரன், குமரப்பா ஆகியோருடன் கடலில் வந்து கொண்டிருந்த போது சிங்கள கடற் படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்பு. பலாத்காரமாக கொழும்புக்கு கொண்டு செல்ல முயன்ற போது சயனைட் சாப்பிட்டு வீரச்சாவு அடைந்தவர்.

திருமணம் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் சங்கர் தலைவரின் வேண்டு கோளினை ஏற்று கர்ணனின் துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுத்தவர்.

26.09.2001 அன்று காலை 10.45 மணியளவில் ஒட்டுசுட்டானுக்கு சமீபமாக சிறீலங்காவின் ஊடுருவல் படையணியின் கண்ணிவெடித் தாக்குதலில் கேர்ணல் சங்கர் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.

தியாக தீபம் திலீபன் மற்றும் கேர்ணல் சங்கர் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்களின் இலட்சியக் கனவை நம் நெஞ்சங்களில் சுமந்து பயணிப்போம். 

நன்றி -தேவர் அண்ணா
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com