தமிழ்க் கடசித் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், தமிழினம் அழிந்துபோவதை தடுக்க முடியாது-மு.திருநாவுக்கரசு

தமிழ்க் கடசித் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், தமிழினம் அழிந்துபோவதை தடுக்க முடியாது-மு.திருநாவுக்கரசு

2015 தேர்தல் பின்னணியின் தொடர்ச்சியான இன்றைய தேர்தல் அரசியலை காணப்படும் கோட்பாட்டு ரீதியாக விளக்கி நடைமுறைக்குப் பொருத்தமாக முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து மேற்குலகின் கொள்கை இலங்கை தொடர்பாக அதிர்ச்சிகரமான மாற்றத்திற்கு உள்ளானது. சீன சார்பு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் யுத்தத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கையில் சீனா வேரூன்றி அதைத் தளமாகக் கொண்டு இந்து சமுத்திரத்தில் சீனாவின் கை ஓங்கக்கூடியதற்கான அடிப்படை காணப்பட்டது.

சீனா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் அரசியற் பொருளாதாரக் கொள்கையாக நவதாராளவாதம் காணப்பட்ட போதிலும் அந்த நவதாராளவாத ஆதிக்கத்தின் பொருட்டு அரசுகளுக்கிடையே போட்டியிருக்கவே செய்தது. எந்தவொரு அரசும் விதிவிலக்கின்றி, இன்று உலகில் உள்ள அனைத்து அரசுகளின் பொருளாதாரக் கொள்கையாக நவதாராளவாதக் கொள்கை (Neoliberalism) காணப்படுகிறது.

2000ஆம் ஆண்டின் முதலாவது பத்தாண்டில் கியூபா போன்ற ஓரிரு நாடுகளில் இக்கொள்கை காணப்படாவிட்டாலும் இன்று அனைத்து நாடுகளிலும் இக்கொள்கையே காணப்படுகிறது. நவதாராளவாதம் (Neoliberalism), யதார்த்தவாதம் (Realism), நவயதார்த்தவாதம் (Neorealism), கட்டியெழுப்பல்வாதம் (Constructivism) ஆகிய நான்கையும் ஒன்றிணைத்து கூடவே அவற்றுடன் கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், தகவல் வலைப்பின்னல், குடி அகல்வு – குடியேற்றம்;, பூகோள நோக்குச் சிந்தனைமுறை என்பவற்றையெல்லாம் ஒன்றிணைத்த, சுயாதீனத் தன்மை (Independence) அற்ற, பரஸ்பரம் சார்புத் தன்மை (Interdependence) கொண்ட உலக அரசியல் பொருளாதார, கலாச்சார, சமூக உளவியல் தன்மை கொண்ட, ஒரே பூகோளப் போக்கை உருவாக்குவதற்கான பெயரே உலகமயமாக்கல் (Globalisation) என்பதாகும்.

அதாவது உலகமயமாக்கல் என்ற ஒன்றின் பகுதிகளாகவே மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. இந்நிலையில் ஆசிய வல்லரசான சீனாவின் இந்துசமுத்திர பிரவேசம் அதற்கு ஆசியாவைக் கடந்து உலக வல்லரசுப் போட்டியில் ஈடுபடுவதற்கான பெரும் தளத்தைக் கொடுத்தது. இதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் சகித்துக்கொள்ளத் தயாரில்லை. இந்நிலையில் இலங்கையில் சீனா வேரூன்ற ஏதுவான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் சீனாவின் வளர்ச்சிக்கான ஓர் ஏதுவை அகற்றலாம் என்றும், அதன்பின்பு ராஜபக்சவை வீழ்த்துவதன் மூலம் சீனாவை பின்தள்ளலாம் என்றும் மேற்குலகம் சிந்திக்கத் தொடங்கியது.

“பிரபாகரனை ராஜபக்ச பார்த்துக் கொள்ளட்டும் ; பின்பு ராஜபக்ஷவை நாங்கள் பார்த்துக் கொள்வோம்“ என்று மேற்குலக ராசதந்திரி ஒருவர் கூறியதாக பேசப்படும் கருத்து இங்கு நோக்கத்தக்கது. சமாதானத்தை நோக்கிய ரணில் - பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரபா - ஹக்கீம் புரிந்தணர்வு ஒப்பந்தம் என்பன தோல்வியில் முடிந்து யுத்தம் வெடித்தது. தனக்கு ஆதரவான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா ராஜபக்ஷவிற்கு இராணுவ, அரசியல், பொருளாதாரம் மற்றம் இராசந்திர தளங்கள் அனைத்திலும் முழுஅளவில் உதவியது.

அதேவேளை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் மகிந்தவின் யுத்தத்திற்கு ஆதரவு அளித்தது. இதில் இந்தியாவின் தேவையும் இத்தகைய தளத்தைக் கொண்டிருந்த அதேவேளை, அவற்றுடன் கூடவே பிராந்திய புவிசார் நலன் மற்றும் ராஜிவ் காந்தி கொலைவழக்கை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பவற்றிற்காக மகிந்த ராஜபக்சவின் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளித்தது. மொத்தத்தில் முழு உலகமும் ஒரு புள்ளியில் புவிசார் அரசியல் நோக்கம், புகோள அரசியல் நலன் சார்ந்த நோக்கம், நவதாராளவாத பொருளாதார நோக்கம் என்பனவற்றின் அடிப்படையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தன.

இத்தகைய ஆதரவுச் சூழலில் யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தத்தில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை இந்த உலகில் உள்ள பெரிய நாடுகள் அனைத்தும் தெரிந்த வண்ணம் இருந்தன. இப்படுகொலைகள் எதுவும் தெரியாது என்று ஏதாவது ஒரு பெரிய நாடு சொல்லுமென்றால், அது அண்டவெளியில் பறக்கும் அந்நாடுகளினது செயற்கை கோள்களும் அவர்களது விஞ்ஞான தொழில்நுட்பங்களும் மற்றும் புலனாய்வு நிறுவனங்களும் பொய்த்துவிட்டன, தோல்வியடைந்துவிட்டன என்று அவை பறைசாற்றுவதற்குச் சமனாகும். உதாரணமாக, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் கல்மடுக்குளம் உடைக்கப்பட்ட போது அது செயற்கைக்கோள் வழியாக இந்த உலகிற்கு துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டது.

கல்மடுக் குளம் உடைபட்டதை செயற்கைக்கோள் வழியாக படம்பிடித்த நாடுகளால் படுகொலைக்கு உள்ளான மக்கள் பற்றிய விபரங்களை படம்பிடிக்காது விட்டிருக்க முடியாது. எப்படியோ உலகின் பெருநாடுகள் அனைத்தும் இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அதனை அறிந்து வைத்திருந்தன என்பதில் சந்தேகமில்லை. மேற்படி கூறப்பட்ட இந்துசமுத்திரம் சார்ந்த, புவிசார் அரசியல் நலன் உட்பட அனைத்து நாடுகளின் நலன்களின் பொருட்டும் உலக நாடுகள் அனைத்தும் ஒருதுருவமாக இணைந்து நின்று யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலனின் பொருட்டு முழு அளவிலான இராணுவ பரிமாணம் கொண்ட, ஈவிரக்கமற்ற Realism கோட்பாடு முழு அளவில் மேற்படி முக்கிய அனைத்து பெரிய நாடுகளினதும் நோக்கு நிலையில் பிரயோகமானது. எல்லா விதமான சரி- பிழைகளுக்கும் அப்பால் அப்பாவி ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் பலியாக புவிசார் யதார்த்தத்துடன் இணைந்த மேற்படி Realism கோட்பாடு உதவியது.

யுத்தம் முடிந்து புலிகள் வீழ்த்தப்பட்டதும் அடுத்து மகிந்த ராஜபக்ஷவை வீழ்த்தி சீனாவைப் புறந்தள்ளுவதற்கான நோக்கில் Realism கோட்பாடு இரண்டாவது கட்ட பிரயோகத்தை பெறத் தொடங்கியது. இந்த இரண்டாம் கட்டப் பிரயோகத்தின் போது Realism கோட்பாட்டில் காணப்பட்ட இராணுவப் பரிமாணம் அவசியமற்றதாக இருந்த நிலையில் புவிசார் அரசியலோடு இணைந்த உள்நாட்டு, அண்டைநாட்டு, சர்வதேச அரசியல் யதார்த்தத்தை முழு அளவில் மேற்குலம் பிரயோகித்தது.

இதன்படி மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட இனப்படுகொலையை “போர்க்குற்றம்” “மனித உரிமை மீறல்” என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதன்மைப்படுத்தி மேற்குலகமும் மற்றும் ஊடகங்களும் செயற்படத் தொடங்கின. அதேவேளை சிங்கள அரசியலில் காணப்பட்ட உள்நாட்டு அரசியல் யதார்த்தத்தையும், யுத்த அழிவுக்கு உள்ளான தமிழ்மக்களின் ராஜபக்ச மீதான கோபக்கனல் யதார்த்தத்தையும், இவை சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு உளவியல்களையும் பயன்படுத்தும் Realism கோட்பாட்டின் அரசியல் பரிமாணம், சீன சார்பு மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு பிரயோகம் பெறத் தொடங்கியது.

மகிந்தவிற்கு எதிரான மேற்குலகின் மேற்படி குரல் தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அதனை நடைமுறையில் அனுபவித்த மேற்குலகம் ஈழத்தமிழர்களின் வாக்குக்களை முதலீடாகக் கொண்டு மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்தது. இதன்படி இறுதியில் மகிந்த மேற்படி சுநயடளைஅ கோட்பாட்டின் இன்னொரு பரிமாண பிரயோகத்தால் வீழ்த்தப்பட்டார். இதில் மேற்குலகுடன், கூடவே இந்தியாவிற்கும் பங்கிருந்ததாக மகிந்த ராஜபக்ச சகோதரர்கள் வெளிப்படையாகவே கூறினர்.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது புவிசார் அரசியல் நோக்கில் புலிகளை வீழ்த்த, பெரிதும் இராணுவப் பரிமாணம் கொண்ட சுநயடளைஅ கோட்பாடு பிரயோகிக்கப்பட்டது போல, அடுத்து மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு இராணுவப் பரிமாணம் அல்லாத அரசியல் பரிமாண சுநயடளைஅ கோட்பாடு பிரயோகிக்கப்பட்டது.

இங்கு வேதனையுள்ள விடயம் என்னவென்றால் சுநயடளைஅ கோட்பாட்டின் முதலாவது பிரயோகத்தில் தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டார்கள். அதன் இரண்டாவது பிரயோகத்தில் அதே மக்களை பயன்படுத்தி அவர்கள் அரசியல் ரீதியாக கதியற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதாவது ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோரை கண்டுபிடித்தல், கைதிகள் விடுதலை, தமிழ் மக்களின் உரிமைக்கான நீதியான அரசியல் தீர்வு என்ற வாக்குறுதிகளின் பின்னணியில் தமிழ் மக்களின் வாக்குக்கள் பெறப்பட்டு மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதில் சுநயடளைஅ கோட்பாடு வெற்றியீட்டியது.

ஆனால் அந்த வெற்றியின் பின்பு மேற்படி விடயங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. அரசியல் தீர்வு என்பது மட்டும் தொங்குநிலையில் நிலுவையில் உள்ளது. பதிவில் உள்ளபடி 17000க்கும் மேற்பட்ட “காணாமல் போனோரில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2016 சனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் தினத்தன்று அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டார். ஆனால் எப்படி அவர்கள் உயிரோடு இல்லாது போகச் செய்யப்பட்டார்கள் ? இதற்கு யார் பொறுப்பு ? எப்போது, எங்கு இவை நிகழ்ந்தன? என்பதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அவற்றை நிராகரித்து “காணாமல் போனோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என்பது மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கூறப்பட்டவாறு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண்டறிய முற்பட்டால் அரச மற்றும் இராணுவ குற்றவாளிகளின் பட்டியலானது வெளிவர முடியும். இதனை அரசாங்கம் செய்ய தயாரில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் இந்த “நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்தல்“ என்ற கொள்கையின் கீழ் Realism கோட்பாடு பிரயோகம் பெறுகிறது. ஆதலால் அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதோ ஒருவகையில் ஆதரவாக நின்றே மேற்குலக நாடுகள் செயல்படுகின்றன.

அதேவேளை Realism கோட்பாட்டின் இன்னொரு அம்சமான காயங்களை ஆற்றுதல், யுத்த அழிவில் இருந்து மீட்டல், மீள் கட்டமைப்பு செய்தல் என்ற அடிப்படைகளில்; நிதி மற்றும் நிவாரணம், சாதகமான அரசியல் ஏற்பாடுகள் மற்றும் ஆதரவு அமைப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் பிரயோகம் பெறுகின்றன. யுத்தத்தின் பின்னான செயற்பாடுகளில், சீனச் சார்பு ராஜபக்ஷவை வீழ்த்துதல் என்ற நோக்கில் Realism கோட்பாடு முதலாம் கட்ட பிரயோகத்தைப் பெற்றது. அடுத்து பதவிக்கு வந்த புதிய அரசாங்கத்தை பாதுகாத்தல் என்பதில் Realism கோட்பாடு இரண்டாம் கட்ட பிரயோகத்தைப் பெற்றது. இவை இரண்டும் இன்றைய அரசியலில் பிரயோகிக்கப்படும் இன்னொரு கோட்பாடான கட்டியெழுப்பல்வாதம்;(Constructivism) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடலாக அமைந்தன.

Constructivism என்பது, குறித்த மக்கள் கூட்டத்தின் அல்லது அதற்கான சுழலில் காணப்படுகின்ற வரலாற்று ரீதியானதும் சமூக ரீதியானதுமான யதார்த்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தமக்குச் சாதகமானவற்றை நிறைவேற்றக் கூடிய ஒரு நிர்மாணிப்புக் கோட்பாடாகும். இக்கோட்பாட்டில் நிதியும், நிவாரணமும், தகவல் ஆதிக்கமும் முக்கிய பங்காற்றுகின்றன. இப் பின்னணியிற்தான்; நிலுவையில் உள்ள தமிழ் மக்களுக்கான “அரசியல் தீர்வு” என்பது தொங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்படி பதவியில் இருக்கும் “நல்லாட்சி அரசாங்கத்தை” பாதுகாப்பது என்ற திட்டவட்டமான கொள்கையின் கீழ்தான் “அரசியல் தீர்வு” என்பது அணுகப்படும். இதற்கான தீர்வு புதிய அரசியல் யாப்பில் வரையப்படும் என்று கூறப்படுகிறது. இந்தவகையில் இந்த புதிய அரசியல் யாப்பின் கீழ் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு ஏற்பாடானது மீண்டும் புவிசார் அரசியல் மற்றும் புகோள அரசியல் நலன்களுக்குள் சிக்குண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக டொனமூர் யாப்பில் இருந்து அதன்பின் உருவான சோல்பரி யாப்பு, சிறிமாவோ - கொல்வின் யாப்பு, ஜே.ஆர். யாப்பு என்பனவெல்லாம் எப்படி மேற்கூறப்பட்டவாறு புவிசார் அரசியல் சிக்கலின் வெளிப்பாடாக காணப்பட்டு அதன்படி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டனவோ, அப்படியே உத்தேசிக்கப்படும் சிறிசேன -ரணில் யாப்பும் புவிசார் அரசியற் சிக்கலின் வெளிப்பாடாக அமைகிறது.

இத்தகைய புவிசார் அரசியல் நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தமக்கான அரசியல் தீர்வை புதிய உத்தேச யாப்பில் தேடுவதை சிங்களத் தலைவர்கள் தமது அரசியல் இராசதந்திர மெருகால் பெருமளவு சாத்தியமற்றதாக்கி உள்ளனர். (மேற்படி கட்டுரைப் பகுதி ஆசிரியர் 2016ஆம் ஆண்டு எழுதிய இலங்கை புதிய உத்தேச அரசியல் யாப்பு என்ற நூலில் இருந்து) 2015 ஆம் ஆண்டுத் தேர்தலையும் அதைத் தொடர்ந்த 5 ஆண்டு அரசியலையும் கையாண்டதில் தமிழ் தரப்பு வெற்றிகளைப் பெறத் தவறியதுடன் சிங்கள இனவாதத்துக்கு தேவையான போதியளவு வெற்றிகளை தேடிக்கொடுத்து தமிழ் இனத்தின் அழிவுக்கும் வழி தேடியுள்ளது.

2015ஆம் ஆண்டு சர்வதேச சூழல் இலங்கை அரசியலில் இப்போதும் அப்படியே நிலவுகிறது ஆனால் 2015ஆம் ஆண்டுத் தேர்தலின் போது சற்று கவனத்தை தவறவிட்ட சீனா அதன் படிப்பினையின் பின்னணியில் அதிக விழிப்புடனும் முன் எச்சரிக்கை உடனும் செயற்பட்டு ராஜபக்சகளை பதவிக்கு கொண்டுவரும் முயற்சியில் முனைப்புடன் உள்ளது.இந்நிலையில் மேற்குலகிற்கு இந்தியாவுக்கும் குறைந்தபட்ச ஆறுதல் அளிக்ககூடிய சக்தியாக ஐதேக உள்ளது. இப் பின்னணியில் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக பலம் பொருந்திய மாற்று தலைமையை உருவாக்க தவறினால் அடுத்து வரக்கூடிய 2025ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசியல் பலம் அற்றவர்களாய் இன அழிப்பு முற்றிலும் நிறைவேறிய நிலையே காணப்படும் இதை தவிர்க்க வேண்டும் என்றால் திருவாளர்கள் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியில் இருந்து வேலி தாண்டி வரக்கூடிய குறைந்த பட்சா வெள்ளாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பலமான கூட்டு தலைமையை உருவாக்க வேண்டும்.

இதற்கான தகுதியையும் ஆற்றலையும் பரந்த மனப்பாங்கையும் மேற்படி தலைவர்கள் காட்டத் தவறினால், தமிழ் இனம் அழிந்து போவதை தவிர வேறெதுவும் மிஞ்சாது. 

(மு.திருநாவுக்கரசு அவர்களின் இலங்கை புதிய உத்தேச அரசியல் யாப்பு என்ற நூலில் இருந்து கற்கப்பட வேண்டியவை)
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com