ஆறு கட்சிகளின் கூட்டுக் கலந்துரையாடலில் நடப்பது என்ன?


யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடுவதாக கூறிக்கொள்ளும் ஆறு கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்கள். எனினும், இன்றைய சந்திப்பில் தீர்க்கமான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
 
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கப் போவதாக கூறிக்கொண்டு பல்கலைகழக மாணவர்கள் “திடுதிப்“ என ஒரு முயற்சியை ஆரம்பித்தனர். ஏற்கனவே பொதுவேட்பாளர் முயற்சி நடைபெற்று, அது தோல்வியடைந்த சமயத்தில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

அண்மை காலமாக பல்கலைகழக மாணவர்களின் அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் வலுவான புலம்பெயர் சக்திகளின் கரங்கள் இருந்தமையினால், பொது வேட்பாளர் மற்றும் பொது இணக்கப்பாடு முயற்சியிலும் அந்த சக்திகள் இருக்கலாமென்ற அபிப்பிராயங்களும் இருந்தன.

எனினும், தற்போது அவசியமான ஒரு விவகாரத்தை பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர். அதிலிருந்த குறைபாடுகளை பல தரப்பினரும் சுட்டிக்காட்டிய போதும், அதை சரி செய்யாமல், அந்த முயற்சிகள் தொடர்கிறது. தமிழ் மக்களை பொதுநிலைப்பாடு எடுக்க வைப்பதெனில், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்க வேண்டும்.

எனினும், கிட்டத்தட்ட 40 வீதமான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சமத்துவம் சமூக நீதிக்கான கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் உள்ளிட்ட கட்சிகளை இந்த விடயத்தில் இணைக்கவில்லை. பொது நிலைப்பாடு என்பது அரைவாசி மக்களின் நிலைப்பாடு அல்ல என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் புரிந்திருக்கவில்லை.

இது தொடர்பாக, தமிழ்பக்கத்துடன் பேசிய பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர்களில் ஒருவர்- ஈ.பி.டி.பி தனது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டதால் அவர்களுடன் பேசவில்லை என்றார். எனினும், ஆறு கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறு கட்சிகளும் வழங்கிய பரிந்துரைகளிற்கமைய பல்கலைகழக மாணவர்கள் வரைபொன்றை தயாரித்துள்ளனர். இன்று மாலை 5மணிக்கு நடைபெறும் கலந்துரையாடலில் இந்த வரைபு கட்சிகளின் தலைவர்களிடம் வழங்கப்படும். இன்றைய சந்திப்பில் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

இந்த வரைபில், அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள், நிலம் உள்ளிட்ட விவகாரங்கள், மீள் கட்டுமானம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் அபகரிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் அங்கீகரிக்காத பட்சத்தில், பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை எடுப்போம் என்பதையும் குறிப்பிட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறி வருகிறது.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டிற்கு எதிரானவை. எனவே, பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை வரைபில் சேர்க்க அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். பகிஷ்கரிப்பு போன்ற இறுதிக்கட்ட நிலைப்பாட்டை இப்பொழுதே அறிவித்தால், அதன் பின் என்ன செய்வதென்ற கேள்வியை அந்த கட்சிகள் எழுப்புகின்றன.

அடுத்த கட்டத்தை பின்னர் பார்க்கலாம், இப்போது கோரிக்கைகளை முன்வைப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பல்கலைகழக மாணவர்கள் கொண்டு வராத பட்சத்தில், முன்னணி இதில் கையெழுத்திடாது. இதேவேளை, முன்னணியை அந்த நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவதும் இலகுவானதல்ல.

இதனால் இன்று இரண்டு விதமான தீர்மானம் எட்டப்படவே சாத்தியமுள்ளது. ஆறு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திடுவதானால், தமிழ் தரப்பின் கோரிக்கைகள் இவையென ஒரு பட்டியல் மாத்திரம் தயாராகும். அதை நிறைவேற்றாவிட்டால், என்ன நடக்குமென குறிப்பிடப்படாவிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடாது.

தீர்மானங்கள் ஏற்கப்படா விட்டால் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் என்ற வார்த்தையை மட்டும் சேர்க்கலாமென முதலாவது கலந்துரையாடலில் சி.சிறிதரன் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியான மாற்று வழிகள் கையாளப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனினும், பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து விட்டு, வேறு நிலைப்பாடுகளிற்கு முன்னணி செல்வதற்கு வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com