தமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை


யுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க்கப்படும் ஒருவரைத் தமது தலைவராகவும் தெரிவு செய்யும் நிலையில் சிங்கள தேசம் இருக்கையில், தமிழர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் பேணப்படும் என்ற உத்தரவாதம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

இத்தகைய பின்னணிகளைக் கருத்திற்கொண்டு, இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும். ஆதலால், இனியாவது தமிழீழ தேசத்தின் நியாயமான கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு தமிழ் மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர்களுக்குரிய இறைமையோடு வாழக்கூடிய நிரந்தரமான தீர்வாகிய தமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். என தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் ஊடாக, உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2019.அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடி விதையான மானமறவர்கள் அனைவரையும் ஒருங்கே நினைவேந்தி நெஞ்சுருகி வணங்கும் நாள்.

சிங்கள தேசத்துடன் மட்டுமன்றி, பிராந்திய – உலக வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்த வரலாற்றுத்தடத்தில், எமது புவியியற் சூழல், ஆட்பலம், படைப்பலம், அரசுகளின் ஆதரவு என்று எதுவுமே சாதகமில்லாச் சூழலில் எம் மாவீரர்கள் வியத்தகு சாதனை படைத்தார்கள். பெரும்பலத்துடனிருந்த எதிரிகளோடு பொருதி புதுவரலாறு படைத்த எமது விடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளே எமது மாவீரர்கள்.

உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறது.

உரிமைக்காகப் போராடும் அனைவருக்குமான நம்பிக்கையொளியாகவும், உந்துதலாகவும், எழுச்சி வடிவமாகவும் விளங்கும் வீரமறவர்களை நினைவுகொள்ளும் இந்நாள், தமிழர்களின் எழுச்சி நாளாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக்குக் கொண்டுசென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்கு உரியவர்கள்.

தனித்துவமான தேசிய இனமாக இறைமையோடும், சுதந்திரத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் தமிழினம் இலங்கைத்தீவின் மீதான ஐரோப்பிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அன்னியரின் ஆளுகைக்குள் போகத் தொடங்கியது.

இலங்கைத்தீவு முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொணர்ந்து ஆட்சிசெய்த பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இயல்பாகவே ஆட்சியதிகாரம் சிங்கள-பௌத்த பேரினவாதிகள் கையில் போய்ச்சேர்ந்தது. சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்குமென விடப்பட்டுச் சென்ற சில அரசியல் யாப்புக் கூறுகளும் நாளடைவில் படிப்படியாக சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியத்தால் உருமாற்றம் செய்யப்பட்டன.

“இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள- பௌத்தர்களுக்க” என்ற மகாவம்ச மனோநிலையில் ஊறித்திளைத்த பேரினவாதம், தமிழர்களை அடிமைப்படுத்துவதையும், மொழியழிப்பு, நிலப்பறிப்பு, கல்வியுரிமை மறுப்பு, பொருளாதாரச் சுரண்டல் என பல வழிகளில் தமிழினத்தின் மேம்பட்ட வாழ்வியலைச் சிதைக்கத் தொடங்கியது. இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப் போயின. தமிழர் தலைமைகளோடு அவ்வப்போது சிங்களத் தலைமைகள் மேற்கொண்ட பேச்சுக்களும், உடன்படிக்கைகளும் சிங்கள ஆட்சியாளர்களால் கிழித்தும், எரித்தும் போடப்பட்டன. அரச நிர்வாகம், அரசியலமைப்புச் சட்டம், நீதி நிர்வாகம் என எதுவுமே பாதுகாக்க முடியாத நிலையிலும், எதிர்ப்புப் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் மீதான அடக்கு முறைகள் அதியுச்ச நிலையை அடைந்ததாலும் எமது மக்கள் வேறு தெரிவின்றி ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள்.

உலகின் பல பாகங்களில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

பல்வேறு வகைகளில் போராடி விடுதலை பெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர். தமிழர் தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்தவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை கூட, வேறெந்தத் தெரிவுகளுமற்ற நிலையில் எமது மக்கள் தேர்ந்தெடுத்த ஆயுதப் போராட்ட வழிமுறையே தமிழினத்தைப் பாதுகாத்து நின்றது என்ற உண்மையை வலியுறுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவின் இனச்சிக்கலையும் தமிழர்களுக்கான பாதுகாப்பான நிரந்தரத் தீர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் மகாவம்ச மன நிலையையும் அது எவ்வாறு அனைத்துமட்டத்திலும் வேரோடிப் பரவியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களுக்கு எதிராக வன்மம் பாராட்டுவதே சிங்களமக்களின் வாக்குகளைப் பெற எளிதான வழியென்பதைச் சிங்கள தேசம் கடந்த எழுபது ஆண்டுகளாகக் கைக்கொண்டு வருகின்றது.

இன்றும் அதிலிருந்து சிங்கள தேசத்தின் அரசியல் விடுபடவில்லை. உலக நாடுகளினின் துணையுடனும், தமிழ்மக்களின் துணையுடனும் கொண்டுவரப்பட்ட கடந்த நல்லாட்சி நாடகத்தில் தமிழ்மக்களுத்தான் இழப்பு என்பதில் ஐயப்பட ஏதுமில்லை. பௌத்த – சிங்கள பேரினவாதம் வழமை போன்று நுணுக்கமான முறைகளில் தமிழ் மக்களின் நிலங்கள், உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சிமாற்ற மாயையில் உலகையும், தமிழ் மக்களையும் ஆழ்த்தி தன்மீதான அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டது பேரினவாத பூதம். சிறிலங்கா அரச அதிபர் தேர்தல்களில் பிராந்திய நலன்களுக்கான துருப்புச் சீட்டுகளாக, தமிழ்மக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட இலங்கைத் தீவில் இரு தேசங்கள் இருப்பதையே பெறு பேறுகள் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றன.

ஆனாலும் சமநிலையற்ற பெரும்பான்மை – சிறுபான்மை என்ற விகிதாசாரமானது ஒருபோதும் தமிழ் மக்களின் விருப்புக்கு இசைவான முடிவைத் தீர்மானிக்க முடியாதென்பதே இன்றைய அரசியல் யதார்த்தம். இப்படிப்பினையைக் கருத்திற்கொண்டு விடுதலைக்காகவும், சமவுரிமைக்காகவும் போராடுகின்றவர்கள் இந்தப் பெருந்தேசிய அரசியலுக்குள் கரைந்துவிடாமலிருப்பதே விடுதலை அரசியலை உயிர்ப்புடன் பேணுவதற்கு உதவும்.

அன்பான மக்களே,

வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத எந்த இனமும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில்லை. எதிரிகளின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அழியுண்டு பரிதாபத்துக்குரிய இனமாய் அலைந்த துன்பியல் வரலாறுகள் ஒருபுறமும், அடங்கமறுத்த ஓர்மமும், விலைபோகாத வீரமும், எதிரியின் வஞ்சகங்களுக்கு வளைந்து கொடாத நிதானமும் பெற்றுத்தந்த வெற்றிகள் அடங்கிய மாண்புமிகு வரலாறு மறுபுறமும் எம்முன் இருக்கின்றது.

எத்தனையோ இடர்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து மீண்டெழுந்த போராட்டம் எங்களுடையது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில், அடிமையாகவும் அடிவாங்கும் நிலையிலிருந்தும் கிளர்ந்து திரும்பித் தாக்கும் நிலைக்கு வளர்ந்தோம். பின்னர் எமது அரசியல் தலைவிதியை மட்டுமல்ல, இலங்கைத்தீவின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக நாமே இருந்தோம். எமது மக்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பாலும் மாவீரர்களின் தியாகத்தாலும் இடர்களிலிருந்து மீண்டுவந்த சாதனைகளும் வெற்றிகளும் எமக்கான வரலாறே.

எமக்கான விடுதலைப் பயணத்தில் நாமே தீர்மானிக்கும் சக்தியாகத் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். எமது எதிரிகள் எழுதிவைத்திருக்கும் வழிவரைபடத்தின் வழியே தமிழ் மக்களை அழைத்துச் சென்று அவர்களின் விடுதலை வேட்கையை முடக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களைப் புறந்தள்ளி தெளிவான தமிழ் தேசியப் பற்றுதியுடனும், கொள்கையுடனும் பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து மக்கள் பேரியக்கமாகப் பரிணாமம் பெற்று எமது விடுதலை அரசியலைத் தமிழ் மக்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

எமது போராட்டப் பாதையில் எவ்வகைச் சவால்களையும் எதிர்த்து நின்று சாதிக்க முடியுமென்ற எமது கடந்தகால போராட்ட வரலாறே எம்மை வழி நடத்தும் உந்து சக்தியாக அமையும்.

எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பை உலகின் முன் உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

நிகழ்காலத்திலுங் கூட இனங்களின் விடுதலைப் போராட்டங்களும், இனவழிப்புக்கு எதிரான நீதி வேண்டிய போராட்டங்களும், செயற்பாடுகளும் பூமிப்பந்தில் நிகழ்ந்த வண்ணமேதான் உள்ளன.

மியன்மார் அரசாங்கம் மீதான இனவழிப்பு விசாரணைகள் தொடங்கியுள்ளமை மிக அண்மைய எடுத்துக்காட்டு.

இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும். 

எமது தாயகம் எப்போதும் போல அடக்கு முறைகளையும் இன்னல்களையும் சுமந்தவண்ணமே உள்ளது. வல்லாட்சி, நல்லாட்சி என்ற வித்தியாசங்கள் ஏதுமின்றி தொடர்ச்சியாக எமது நிலப்பகுதிகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரச் சுரண்டல்கள் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன.

பௌத்த மயமாக்கலுாடாக மண்பறிப்பை மேற்கொள்வதும் எமது தாயகப் பகுதிகள் எங்கும் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. நீதிவேண்டியும் உரிமைகளுக்காகவும் செயற்பட்டுவரும் மக்கள் குறிவைக்கப்பட்டு, கைது செய்யப்படுவதும், காணாமல் ஆக்கப்படுவதும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும், அவர்களின் குரல்கள் அடக்கப்படுகின்றன.

படிப்படியாக எமது கலை பண்பாடுகளும் சமூக விழுமியங்களும் அழிக்கப்படுவதோடு, சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் போதைப்பொருள் பயன்பாடுகளும், வன்முறைக் கலாசாரமும் திட்டமிட்டுப் பெருகவிடப்படுகின்றன. உரிமைகள் மட்டுமல்லாது அபிவிருத்தி ரீதியிலும் தொடர்ந்தும் எமது தாயகம் பழிவாங்கப்படுகின்றது.

இந்நிலையில், அரச அடக்கு முறைகளுக்கெதிரான எமது மக்களின் போராட்டங்களும், எதிர்ப்பலைகளும் தொடர்ந்தும் முனைப்புப் பெற்று வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தொடர் போராட்டங்கள், மண்மீட்புப் போராட்டங்கள், மகாவலி என்ற பெயரிலான நிலப்பறிப்புத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் என எமது மக்களின் செயற்பாட்டுத்தளம் விரிந்துள்ளது.

அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களையும் தமது அரசியல் அபிலாசைகளையும் பல்வேறு வழிகளிலும் எமது மக்கள் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறார்கள். இருந்தபோதும், பன்னாட்டுச் சமூகம் பாரா முகமாகவே இருந்து வருகின்றது.

எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு நீதிவழங்கவோ, அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ இன்று வரை ஆக்க பூர்வமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாமல், அடக்கு முறையாளர் கைகளிலேயே ஒடுக்கப்படும் மக்களின் நீதியும் கையளித்து விடப் பட்டிருக்கின்றது. உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட போதும் சரி, அதன் பின்னரும் சரி, சர்வதேசம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்காமல் இருப்பது தமிழ்மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கால நீடிப்பு, ஆட்சி மாற்றம், பொய்யான வாக்குறுதிகள் என அனைத்து வழிகளிலும் ஏமாற்றி எக்காளமிடும் சிங்கள-பௌத்த பேரினவாத பூதத்தின் முன் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகம் மௌனிகளாக இருக்கக் கூடாதென்பதும் தமிழினத்தின் நீதிக்கான குரலினைச் செவிமடுக்க வேண்டுமென்பதே எமது அவா.

வரலாறு முழுவதும் தமிழின வெறுப்பின் மீது கட்டமைக்கப் பட்ட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த சிங்கள தேசத்திடம் தமிழ் மக்கள் எவ்வாறு தமது பாதுகாப்பையும் உரிமையையும் எதிர்பார்க்க முடியும்?

இன்னமும் யுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க்கப்படும் ஒருவரைத் தமது தலைவராகவும் தெரிவு செய்யும் நிலையில் சிங்கள தேசம் இருக்கையில், தமிழர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் பேணப்படும் என்ற உத்தரவாதம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

இத்தகைய பின்னணிகளைக் கருத்திற்கொண்டு, இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும். ஆதலால், இனியாவது தமிழீழ தேசத்தின் நியாயமான கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு தமிழ் மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர்களுக்குரிய இறைமையோடு வாழக்கூடிய நிரந்தரமான தீர்வாகிய தமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

அன்பான தமிழக உறவுகளே,

எமது போராட்டம் குழந்தையாகத் தவழத் தொடங்கியபோதே அதை உச்சிமோந்து பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள் நீங்கள். எமது வெற்றிகளில் திளைத்தும் இழப்புகளில் துவண்டும் உணர்வோட்டமாக எமது விடுதலைப் பயணத்தில் உடன் வந்தவர்கள் நீங்கள். இனவழிப்பின் உச்சக்கட்டத்தில் உணர்வு கொந்தளித்து போராட்டக்களத்தை நெருப்பாக்கியவர்கள் நீங்கள். எமக்குரிய நீதிக்கான பயணத்தில் தோளோடு தோள்நின்று இன்றும் உழைத்து வருகின்ற அரிய தோழர்களைத் தந்திருக்கும் தமிழகத்திற்கு நாம் என்றும் எமது அன்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள். உங்களின் தொடர்ச்சியான ஆதரவும், எமது விடுதலை அவாவை இந்தியத் துணைக் கண்டமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டிய உங்கள் பணியும் என்றும் எமக்குத் துணைநிற்கும்.

அன்பான புலம் பெயர் உறவுகளே,

எமது விடுதலைப் போராட்ட நியாயத்தையும் எமது மக்கள் படும் அவலத்தையும் உலக முன்றலில் வெளிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு. தாயகத்து மக்களின் பாதுகாப்பும் பலமும் பெருமளவு உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. பல்தேசிய இனங்களின் ஆதரவை எமது விடுதலைக்கான பயணத்தை நோக்கித் திருப்ப வேண்டிய பாரிய பொறுப்பையும், சமரசமற்ற வகையில் எமது இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையையும் புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் – குறிப்பாக இளைய சமுதாயத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருக்கிறது.

தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் பணி இந்நேரத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அரசியற் களத்தில் எமது விடுதலை வேட்கையையும் அதன்மீதான நியாயத்தன்மையையும் எடுத்துரைத்து முனைப்போடு செயற்பட வேண்டிய காலமிது.

மேலும் எமது போராட்டச்சக்கரத்தின் அச்சாணிகளாய்த் திகழ்ந்த எமது தாயக மக்கள் போருக்குப் பின்னர் சுமந்துவரும் சுமைகளைப் பகிர்ந்துகொள்வது புலம்பெயர்ந்த தமிழர் ஒவ்வொருவரினதும் கடமை என்பதை நீங்கள் நன்குணர்வீர்கள். தாயக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அன்பான தமிழீழ மக்களே,

சிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து, தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உரிமையை சிதறடிக்கக்கூடிய திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டு பத்தாண்டுகள் கடந்த இந்நிலையிலும் கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை.

தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

யாப்பு மாற்றம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை வைத்து சில ஆண்டுகளைக் கபடத்தனமாகக் கடத்திவந்திருக்கிறது. அடக்கு முறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

இலங்கைத்தீவில் தமிழரும், சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை மேலும் வலுவடைந்துள்ளது. தற்போது நிகழ்ந்துள்ள அதிகார மாற்றமும், அதற்கு சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் அளித்த ஆணையும் இச்செய்தியை மேலும் வலுப்படுத்தியே நிற்கின்றது.

”நாம் ஓர் இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.

எவ்வகை இடர் வரினும் தமிழீழத் தனியரசு என்ற இலக்கு நோக்கிய எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கி, இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகளான மாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் ஒருநாள் எமது இலக்கை அடைவோமென்று உறுதியெடுத்துக் கொள்வோம்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, ஈழத்தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில் எமது இனவிடுதலைக்காக அயராது உழைக்க நாமனைவரும் உறுதியெடுத்துக் கொள்வோம்.

”நாம் ஓர் இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்” என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றின் வழிநின்று தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com