இத்தேர்தல் முறையின் கீழ் தமிழ் மக்கள் தமது முதலாவது வாக்கை தமது தேசிய திடசித்தத்தை வெளிப்படுத்தவும் தமது நிலைப்பாட்டையும் தமது ஆணையையும் உள்நாட்டு - வெளிநாட்டு அரங்கில் வெளிப்படுத்தவும் ஏற்றவகையில் பயன்படுத்தலாம். "அரசியல் என்பது காணப்படக்கூடிய வாய்ப்புக்களை கையாள்வது பற்றிய ஒரு வித்தை"என்ற வகையில் எதிரியால் சுழட்டி விடப்படும் சக்கரத்தை எமக்கு சாதகமாக உருட்டி விடக்கூடிய பக்கங்கள் உண்டாயின் அவற்றைப் பயன்படுத்த வேண்டியது சாதுரியம் மிக்க அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும்.
ஈழத்தமிழன் இழந்த வாய்ப்பும் தேவைப்படும் புதிய அணுகுமுறையும். மு. திருநாவுக்கரசு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை கொண்ட அரசியல் அமைப்பை 1978 ஆம் ஆண்டு உருவாக்கிய போது துணை ஜனாதிபதி முறைமை என்ற ஒன்று அதில் திட்டமிட்டு தவிர்க்கப் பட்டிருந்தது.
ஒரு துணை ஜனாதிபதி என்று ஒன்று இருந்தால் அது ஒரு தமிழனுக்கு அல்லது ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கென வகுத்தொதுக்கப்பட வேண்டும் என்பதால், பேரினவாத ஆதிக்க நோக்கிலிருந்து அது தவிர்க்கப்பட்டது.
துணை ஜனாதிபதி முறைமையற்ற அரசியல் அமைப்பை ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் உருவாக்கிய போது துணை ஜனாதிபதி முறைமை வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் முன்வைக்கவில்லை.
விதிவிலக்காக பிரான்ஸிலும் துணை ஜனாதிபதி இல்லை. அங்கு ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படுமிடத்து செனற் சபைத் தலைவரால் அந்த இடம் இயல்பாக நிரப்பப்படும்.
தனது மனைவி சந்திரமதியை அரிச்சந்திரன் விற்பதற்கு விலை கூவியபோது "" இது உலகம் அறியாத புதுமை ; கேளுமைய்யா , விலை கேளுமையா"" என்று கூவிவிற்ற புதுமையைவிடவும் பெரிய உலகளாவிய புதுமை இலங்கை அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி முறைமை இல்லாது உருவாக்கப்பட்ட விடயமாகும்.
சிங்கள முற்போக்காளர்களோ, சிங்களப் புத்திஜீவிகளோ, சிங்கள ஊடகவியலாளர்களோ, சிங்கள மனித உரிமையாளர்களோ மற்றும் ஏனைய மனித உரிமையாளர்களோ, தாராண்மை ஜனநாயகம் பற்றி பேசும் பொய்யான குட்டி ஜனநாயகவாதிகளோ மற்றும் சிங்கள பௌத்த மத தலைவர்களோ இந்த அசிங்கத்தை கண்டுகொள்ளத் தயாராக இல்லாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் ஒரு போதும் சமரசத்துக்கும் இடமின்றி பெரிதும் தலையெடுத்து உள்ளது என்பதே உண்மை.
எனவே துணை ஜனாதிபதி முறைமையற்ற ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கும் அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட சிங்கள பௌத்த அரசியல் முறைமையின் கீழும் , அதன் கீழ்த் தோன்றிய ஜனாதிபதி முறைமையின் கீழும் , அதற்கான தேர்தல் மீதும் தமிழ் மக்கள் ஒரு போதும் நம்பிக்கை வைத்துச் செயல்பட முடியாது என்பதுதான் அரசியல் வரலாற்று உண்மை. ஆனால்"" அரசியல் என்பது காணப்படக்கூடிய வாய்ப்புக்களை கையாள்வது பற்றிய ஒரு வித்தை ""என்ற வகையில் எதிரியால் சுழட்டி விடப்படும் சக்கரத்தை எமக்கு சாதகமாக உருட்டி விடக்கூடிய பக்கங்கள் உண்டாயின் அவற்றைப் பயன்படுத்த வேண்டியது சாதுரியம் மிக்க அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும்.
இந்தவகையில் தேர்தலின் போது எதிரிகளுக்கு இடையே ஏற்படும் போட்டிகளின் மத்தியில் எதிரிகளுக்கு இடையேயான முரண்பாட்டை பயன்படுத்தக்கூடிய தந்திரத்தின் பொருட்டு இத்தகைய ஜனாதிபதி தேர்தல்களை கையாள முடியும். அடுத்து தமிழ் மக்கள் தமக்கான ஆணையை உலகிற்கு பறைசாற்ற ஏற்றவகையில் இத்தகைய தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
அதாவது எதிரியின் ஏற்பாட்டில், எதிரியின் செலவில், எதிரியால் தரப்படும் ஒரு வாய்ப்பாக இத்தேர்தலை கையிலெடுத்து அதன் மூலம் தமது சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தையும் நமது நிலைப்பாட்டையும் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் நிலைநாட்டக் கூடிய வகையில் இத்தேர்தலைப் பயன்படுத்த இயலும்.
இலங்கையில் நிகழும் ஜனாதிபதி தேர்தல் முறையில் ஒரு வாக்காளருக்கு மூன்று விருப்பத் தேர்வு வாக்குகள் இருக்கின்ற நிலையில் தமிழர் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவற்க்கேற்ற வாய்ப்புகளும் அதற்கான பரப்பளவும் மிகப் பெரிதாக உண்டு.
இத்தேர்தல் முறையின் கீழ் தமிழ் மக்கள் தமது முதலாவது வாக்கை தமது தேசிய திடசித்தத்தை வெளிப்படுத்தவும் தமது நிலைப்பாட்டையும் தமது ஆணையையும் உள்நாட்டு - வெளிநாட்டு அரங்கில் வெளிப்படுத்தவும் ஏற்றவகையில் பயன்படுத்தலாம்.
இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தேர்வு வாக்குகளை தமக்கு இருக்கக்கூடிய பேரம் பேசும் சக்தியை கையாளக் கூடிய வகையில் பயன்படுத்தலாம். ஆனால் இத்தேர்தல் முறையில் காணப்படக்கூடிய இத்தகைய பன்முகப்பட்ட வாய்ப்புகளைப் பற்றி தமிழ் தரப்பு ஒருபோதும் சிந்திப்பதில்லை.
தமது முதலாவது வாக்கை தமிழ் மக்கள் தமது தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு அளிப்பதானது கைமேல் உள்ள முதலாவது நல்ல வாய்ப்பாகும். அப்படி அனைவரும் ஒன்றுபட்டு அல்லது ஏறக்குறைய பலர் ஒன்றுபட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தக்கூடிய ஓர் அரிய வாய்ப்பைத் தமிழ் தரப்பானது தவறவிட்டுவிட்டது.
"இருப்பதை வைத்துக்கொண்டே எதையும் செய்யலாம்; அடுத்து காணப்படக்கூடிய உள்ளதற்குள் நல்லது எதுவோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்ற அரசியல் கூற்றுக்கிணங்க ஏற்கனவே தன்னிச்சையாக ஒரு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள திரு. சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக நிலைப்படுத்த செய்வதற்கேற்ற மாற்று வழிகளைப் பின்பற்றலாம்.
ஆனால் அதற்கான அரசியல் முதிர்ச்சியையும் செழுமையான மனப்பாங்கையும் காட்ட வல்லதாக தமிழ் மக்கள் தரப்பிலான அரசியல் சூழல் காணப்படவில்லை. அப்படியாயின் பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை, சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம் ,உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்ற ஜனநாயக வழிமுறையிலான அடுத்தடுத்த கட்ட த் தேர்வுகளே களத்தில் இருக்கமுடியும்.
மகாத்மா காந்தியின் சாத்வீக வழியிலான போராட்டமானது தென்னாபிரிக்காவில் முதலில் சட்டமறுப்பு போராட்டத்தை ஆரம்பித்ததோடு உதயமானது. அதாவது இன ஒதுக்கலின் குறியீடாக கறுப்பர்களுக்கும் ஆசியர்களுக்குமென வெள்ளையின ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட "பாஸ்"முறையினையும் அதற்கான சட்டங்களையும் சாத்வீக வழியிலான தனது போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மகாத்மா காந்தி ஆரம்பித்தார்.
இனத்துவேசத்தின் குறியீடான அந்தப் " பாஸை" தீயிட்டுக் கொளுத்தும் போராட்ட இயக்கத்தை காந்தி ஆரம்பித்தார். அவ்வாறு அந்தப் "பாஸை" தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தின் போது பபொலீசாரால் அந்தச் சாத்வீகப் போராளிகள் தாக்கப்பட்ட நிலையில் இறுதியாக காந்தியின் மண்டை பொலிசாரால் அடித்து உடைக்கப்பட்ட நிலையிலுங்கூட காந்தி "பாஸை" தீயிட்டுக் கொளுத்தும் தன் போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் அந்தப் "பாஸை" தீயிலிட்டுக் கொளுத்துவதில் வெற்றி பெற்றார்.
அடி உதைக்கும் சித்திரவதைக்கும் சிறைச்சாலைகளை தனது வீடாக ஏற்றுக்கொள்ளவதற்கும், உயிரைப் பணையம் வைபப்பதள்கும், தனது உடல் -பொருள் - ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதற்கும் அவர் தயாரானார். இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அளப்பெரும் வீரமும் ஒப்பாரும் மிக்காருமற்ற அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது.
இந்த வகையில் மரணத்திற்கான ஆயுதமற்ற படையின் முதலாவது போர் வீரனாய் காந்தி தன்னை ஆக்கிக் கொண்டார். உயிரை பணையம் வைத்து, சட்டமறுப்பு, ஒத்துழையாமை, பகிஷ்கரிப்பு சத்தியாக்கிரகம், சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற சாத்வீக படிமுறைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவல்ல தலைவர்களோ அமைப்புகளோ உள்ளனவா என்ற கேள்விகளுக்குத் தலைவர்கள்ததான் பதிலளிக்க வேண்டும்.
அதற்கான அறிகுறிகள் நிச்சயம் தெரியவில்லை. மக்கள் ஆதரவோடு ஆனால் தலைவர்கள் மேற்படி அர்ப்பணிப்புள்ள போராட்டத்தில் களம் இறங்குவார்களேயானால் அத்தகைய தலைவர்களை எதிரியால் இலகுவில் கொல்லமுடியாது.
கூடியபட்சம் அவர்கள் சிறைச்சாலைகளைத்தான் நிரப்ப வேண்டிவரும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சினை உலகப் பிரபலம் அடைந்து இருக்கும் நிலையில் , இதற்கான சர்வதேசச் சூழல் தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ளது.
ஈழமண்ணில் சாத்வீகப் போராட்டத்தை காந்தி வழியில் அறிமுகப்படுத்திய தந்தை செல்வா 1962 ஆம் ஆண்டு அவர் முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டம் தோல்வி அடைந்ததோடு தன் சத்தியாகிரகம் மற்றும் பரந்த அளவிலான சாத்வீகப் போராட்ட முறைகளை எல்லாம் அவர் ஏறக்குறைய அத்தோடு கைவிட்டுவிட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த திரு. பண்டிருட்டு இராமச்சந்திரன் அவர்களை 2016ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கவிஞர் காசி ஆனந்தன், திரு பரமமூர்த்தி என்பவர்களுடன் நானும் இணைந்து சந்தித்தோம். அன்று சுமாராக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எனது தாயார் காலமாகி இருந்தார். ஆயினும் திட்டமிட்டவாறு சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் எனக்கு உரியமுறையில் அனுதாபம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாம் பேச எடுத்துக் கொண்ட விடயங்களை கவிஞர் காசியானந்தன் தொடர்ந்து முன்னெடுத்தார்.
அந்த உரையாடலின் போது ஒரு கட்டத்தில் தந்தை செல்வாவிற்கும் பெரியார் ஈவேரா அவர்களுக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு நிகழ்ந்த சந்திப்பு பற்றி திரு. இராமச்சந்திரன் அவர்கள் பேசலானார். தந்தை செல்வா , திரு அ.அமிர்தலிங்கம், திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் ஆகிய மூவரும் பெரியாரை சந்தித்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார்.
தந்தை செல்வா தமது சாத்வீகப் போராட்டத்தை பற்றி விவரித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் பெரியார் அவரிடம் பின்வருமாறு கேள்வி எழுப்பினார் என்று திரு . இராமச்சந்திரன் கூறினார். "இதுவரை காலமும் நீங்கள் முன்னெடுத்த சாத்வீகப் போராட்டத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்? " என்பதே அந்த வினாவாக அமைந்தது.
தந்தை செல்வாவிடம் பதில் இருக்கவில்லை. சாகத் தயாரில்லாத அளவிற்கான சாத்வீகப் போராட்டத்தையே நீங்கள் முன் எடுத்தீர்கள் என்ற உண்மையை , தந்தை செல்வாவிற்குப் புகட்டும் வகையிலேயே பெரியாரின் அந்தக் கேள்வி அமைந்திருந்ததெனத் தெரிகிறது. தந்தை செல்வாவின் புதல்வர்களாகவும் வாரிசுகளாகவும் விளங்கும் இன்றைய தமிழ் தலைவர்கள் தந்தை செல்வா 1962ம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்தை கைவிட்ட இடத்திலிருந்து இன்று தமது போராட்டத்தை ஆரம்பிப்பார்களா என்ற கேள்வி இங்கு இமயமலையென எழுந்திருக்கின்றது.
இந்தக் கேள்வி நேரடியாக தந்தை செல்வாவின் பிரகடனப்படுத்தப்பட்ட வாரிசுகளுக்கு மட்டும் பொருதுவதாக அமையாது ஜனநாயக வழி மற்றும் சாத்வீகப் போராட்டங்களை பிரகடனப்படுத்தும் அனைத்து தமிழ்த் தலைவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தத் தயாரில்லாத நிலையில், தலைவர்கள் எனப்படுவோர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக எதிரிக்கு எதிராக ஒரு குண்டூசியைத்தானும் பயன்படுத்தாது இன்றைய தேர்தற் காலகட்ட சூழலில் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு எனத் தலைநகரங்களில் தமிழ் தலைவர்கள் மக்களளை இருத்தாது ஆனால் மக்கள் ஆதரவுடன் தாம் தம்மை முன்நிறுத்திக் களம் இறங்குவார்களேயானால் அது தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உள்நாட்டு- வெளிநாட்டு - சர்வதேசரீதியான புதிய பரிமாணங்களை அளிக்கும்.