பேய்களில் வலுக்குன்றிய பேய்க்கு வாக்களிக்கலாமா!- தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை.

சனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை தொடர்பில் சிவில் சமூக அமையம் அறிவிப்பினை விடுத்துள்ளது. அதில் மீண்டுமொரு சனாதிபதித் தேர்தலை சந்திக்கிறோம். மீண்டுமொரு முறை தெரிவுகளற்ற தேர்தலாக இது அமைகிறது.

மீண்டும் ஒரு முறை இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதில் யார் சிறந்தவர் என்ற போட்டியில் ஈடுபடுவதனை காணுகின்றோம்.

2015 சனாதிபதித் தேர்தலுக்கு வெளியிட்ட அறிக்கையில் நாம் பின்வருமாறு கூறியிருந்தோம்: 'ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பானது வரலாற்று ரீதியாகப் பொய்யானது என எண்பிக்கப்பட்டுள்ளது.

தெற்கின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தமிழர் விரோத அரசியலைத் தமது கருத்தியல்; மற்றும் தொழிற்பாட்டு அரசியலாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் ஒரு குறைந்தபட்ச நியாயமான நிலைப்பாடுதானும் இல்லை.

உதாரணமாக சிங்கள தேசத்தின் இரு பிரதான கட்சியினருமே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாலான தீர்வொன்றைப் பற்றி இன்று வரை கலந்துரையாடக் கூட தயாரில்லாதவர்கள்; சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், சிங்கள பௌத்த கட்சிகளின் இந்த வேறுபாடில்லாத் தன்மையை நாம் காலம் காலமாக தெற்குச் சிங்கள பௌத்த அரசியலின் பொதுவான குணாம்சமாக அனுபவ வாயிலாக அறிந்ததே.

பொது எதிரணியின் வேட்பாளரும் கூட அரசியற் தீர்வு, தமிழர்களுக்கெதிராக நடாத்தப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமக்கும் பதவியிலிருக்கும் சனாதிபதிக்குமிடையே எந்த கருத்து வேறுப்பாடும் இல்லை என்பதைப் பல்வேறு தடவைகள் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தி வருகின்றார்'.

'தமிழர் விடயத்தில் நீதியாக நடந்து கொள்வேன் என்ற நிலைப்பாடு தேர்தற் காலத்தில் சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு தடையாக இருக்குமென்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின் சிங்கள மக்களுடைய ஆதரவைத் தமிழர் நலன் சார் விடயங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழர் நலன்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடு ஒன்றைத் தேர்தற் காலத்தில் எடுக்க முடியாது என்று கூறும் சிங்களத் தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அப்படியான நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது.

இத் தேர்தலானது சிங்கள மக்களை மாத்திரம் பிரதானப்படுத்திய, அவர்களது எதிர்காலம் தொடர்பான ஒரு தேர்தல் மாத்திரம் என்பதையே இரண்டு பிரதான வேட்பாளர்களும் முன்னிலைப்படுத்துகின்றார்கள்'.

'இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக நிலைப்பாடெடுத்து அவர்களது வாக்குகளைக் கோரி நிற்கவில்லை. மாறாகத் தமிழர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதனை மறுதலிக்கின்றனர், தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

எனவே இத்தேர்தல் தொடர்பில் ஓர் கூட்டு நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை. பிரதான வேட்பாளர் எவருக்கும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேச விசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும்'. மேற்போன்ற வாசகங்களின் உண்மைத் தன்மையை நாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதர்சனமாக அனுபவித்துள்ளோம்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் மக்கள் நினைவில் இருத்தி வாக்களிப்பில் பங்குபற்றுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்!

1. இரு பிரதான வேட்பாளர்களுமே தமிழர் விடயங்களில் அரசியல் தீர்வு பிரச்சனை சார்ந்தோ பொறுப்புக் கூறல் சார்ந்தோ அல்லது இராணுவ மயமாக்கல் தொடர்பிலோ போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள் தொடர்பிலோ காத்திரமான நிலைப்பாடுகளை எடுக்க தவறியுள்ளனர்.

2. இரண்டு வேட்பாளர்களுமே தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமாகப் பேசுவதைக் கூடத் தவிர்த்துள்ளனர். பேசுவது தமது வாக்கு வங்கியை வலுக் குறைக்கும் என நம்புகின்றனர். அவ்வாறு பேசினால் கூட இரட்டைத் தன்மையோடு பேசுகிறார்கள் - தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையும் சொல்கிறார்கள்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் வெளியிடப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை பிரிவினைவாதமாக சித்தரித்த தென்னிலங்கை சக்திகளின் செயற்பாடானது வேட்பாளர்களை நோக்கி தமிழ்த் தரப்புக்கள் கோரிக்கைகளை வைப்பது கூட தவறு என்ற சனநாயக அபத்தத்திற்குள் இந்த தீவை தள்ளியுள்ளது. இது ஓர் புதிய கீழ் நிலை.

தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக் குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்து பேசுவது 'பெரிய தீமைக்கு' வழி கோலி விடும் என்றும் தென்னிலங்கை தாராண்மைவாத, முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் சனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றது.

3. ஆகவே குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டுமென நாம் பரிந்துரைக்க முடியாத நிலையில் உள்ளோம். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை நாம் தவறானதென கருதுகின்றோம்.

4. எனினும் உடனடித் தீமையை தரவல்லவர் என நாம் அனுபவம் வாயிலாக உணர்ந்த வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அவசியமும் தேவையும் தமக்குள்ளதாக தமிழ் மக்கள் உணர்வது இயல்பானதே. அதற்காக மற்றைய வேட்பாளரால் தீமை ஏற்படாது என்றில்லை.

மற்றைய வேட்பாளரால் 'உடனடித்' தீமை ஏற்படாது என நாம் ஊகிக்கத் தான் முடியும். இதையும் எமது மக்கள் உணராமல் இல்லை. 5. எனினும் பின்வரும் விடயம் தொடர்பில் விழிப்பாக இருந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு நாம் மக்களைக் கோருகின்றோம்:

உடனடித் தீமைக்கும் வலுக் குறைந்த தீமைக்கும் இடையிலான போட்டியாக தேர்தல் அரசியலை காலா காலத்திற்கு வைத்திருந்து இந்த தெரிவற்ற அரசயலை எம்மீது திணிக்க தென்னிலங்கை அரசியல் ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சிக்கும்.

2010 சனாதிபதித் தேர்தலில் நடந்ததும் இது தான். 2015 தேர்தலிலும் நடந்தது இதுவே. ஓவ்வொரு தேர்தலும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான தெரிவாக காட்டப்பட்டு சாவை சற்று பின் தள்ளக் கூடிய தரப்பிற்கு வாக்குகள் கோரப்படும். போருக்குப் பின்னரான தமிழர் அரசியலை ஓர் பிழைப்புவாத அரசியலாக வைத்திருக்கும் முயற்சியில் சிங்கள பௌத்த அரசயல் அதிகாரம் வெற்றி கண்டுள்ளது என்பது எமது அரசியல் குறைவுக்கு சான்று.

தொடர்ந்து வரும் தேர்தல்களில் வேட்பாளர்களில் 'பேய்களில் வலுக் குன்றிய பேய்க்கு' வாக்களிப்பதால் எமது பிரச்சனை தீரும் என நம்புவது முட்டாள்த் தனம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாக்களிப்போம்.

எமது அரசியலை சுவாசிக்க காற்றிருந்தால் போதும் என்ற பிழைப்புவாதத்திற்குள் சிறை வைக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

நாம் தேர்தல்களுக்கு அப்பால் அரசியல் பேசவும், செய்யவும் அணிதிரளவும் பழக வேண்டும். எமக்கான தீர்வுகளை நாமே ஒரு தேசமாக தேடி பெற வேண்டும். அதுவே எமக்கு விடிவைத் தரும் அதன் இணைப் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com