உங்கள் கல்லறை மீதும்! கனவுகள் மீதும்! சொல்லும் உறுதியுடன் தொடர்வோம் எமது பயணம் எனச் சொல்லி வெளியே வருவோம்!


குற்றமிழைத்தவர்களாகக் குறுகி, வெற்றுக் கைகளுடன் போவது எத்தனை வெட்கம்?
சுடர் ஏற்றித் திரும்பும் போது தான் அவர்கள் வாய் திறப்பார்கள்!
சுட்டெரிக்கப் போகிறது அவர்களின் சுடு கேள்வி!
எங்கே தமிழீழம்?
என்னாச்சு தமிழீழம்?
எதிரொலிக்கப் போகும் அசரீரியிற்கு எங்களிடம் என்ன பதில் உண்டு?
சொரிந்த மேகக் கண்ணீரால் நிலம் ஊறிச் சிதம்பிக்கிடக்கிறது!
இப்போது மழையில்லை ஆயினும், எப்போதும் உடைப்பு எடுக்கலாம் என்பதான மப்பும், மந்தாரமுமான வானமும்!
வயிற்ருலையோடு புகும் குளிர் காற்றுக் கூதல் தரவில்லை எமக்கு!
மாறாக நெருப்பாய் தகிக்கிறது தேகம்!
பிள்ளைகளின் முகம் தெரியும் எனும் நம்பிக்கையில்!
மணிக்கதவம் தாள் திறக்கும் பொழுதிற்காக!
கல்லறைகளுக்கு முன்னே காத்திருக்கிறோம்!

துயிலும் இல்லப் பிரகாரம் எங்கும் திரண்டிருக்கிறது தெய்வங்களின் சுற்றம்!
பயிர்களைக் காணவும், பேசவும் என்று, விளைந்து கிடைக்கும் விடுதலை வயலில் விதைத்தவர் கூடியுள்ளோம்!

கையில் பூவுடனும், சுடருடனும், நீண்டு கிடக்கிறது கிரிகைக்கான வரிசை!
கபாடம் திறந்ததும் கண் திறப்பார்களே!
குழியில் இருந்து வெளியே வருவார்களே!
புன்னகைப்பார்களே!
பின்னர் பேசுவார்கள்!
கொண்டுவந்தீர்களா என்று கேட்பார்களே!
சென்றவருடம் வந்து திரும்பியபோது!
அடுத்த வருடம் வரும்போது அதனுடன் வருவோம் என்றல்லவா சொல்லித் திரும்பினோம்! இப்போது என்ன சொல்லப்போகிறோம்?
இந்த வருடமும் வரிசைகட்டி விளக்கேற்றி! வாச மலர் தூவி! அந்தப் பாடலையும் பாடுவதற்கான சம்பிரதாயக் கிரிகைகளுக்காகவா இந்தக் கியூ?!

குற்றமிழைத்தவர்களாகக் குறுகி, வெற்றுக் கைகளுடன் போவது எத்தனை வெட்கம்?
சுடர் ஏற்றித் திரும்பும் போது தான் அவர்கள் வாய் திறப்பார்கள்!
சுட்டெரிக்கப் போகிறது அவர்களின் சுடு கேள்வி!
எங்கே தமிழீழம்?
என்னாச்சு தமிழீழம்?
எதிரொலிக்கப் போகும் அசரீரியிற்கு எங்களிடம் என்ன பதில் உண்டு?

மாவீரர் நாள்!
சம்பிரதாயங்களுக்குள் இறுகிய சடங்கு நாள் அல்ல!
திருவண்ணாமலை சோதி பெருநாள் அல்ல!
இத்தனை பேரையுமா இழந்தோம் என்று இரங்கி அழும் நாலுமல்ல!
இன்னும் சொல்வதானால்,,,
இது அவர்களுக்கான நாளுமல்ல! எங்களுக்கான நாள்!
துயிலும் இல்ல வாசல் கடக்கும் ஒவ்வெரு தடவையும் உள்ளே ஏதோ ஊதிப் பெருக்கிறதே! அதற்கான நாள்!
கல்லறைகளில் வெய்யில் விளக்காணும் போது, ஓடிப் போய் கூரை விரிக்கச் சொல்கிறதே, அதற்கான நாள்!
எத்தனை பிள்ளைகளை எத்தனை, எத்தனை விதமாகக் கொடுத்தோம்! நரம்புகளில் நஞ்சூறியதாய்! மேனி எங்கும் கந்தகம் பூசியதாய்!
கூட்டியள்ளிவந்த சதைக் குவியல்களாக! வகை மாதிரிக்கு எத்தனை வகையில் கொடுத்தோம்? இன்று மௌனத்தில் உறைந்து கிடக்கிறது பிள்ளைகளின் தொட்டில்ப் பரப்பு!

நேரம் நொடிகளாகக் கரைய சுற்றம் விளக்கேற்றத் தொடங்குகிறது!
மகனே!
மக்களே!
சூழலில் வழிகிறது பிரிவின் கனதி!
கருவறை தாங்கிய உறவல்லவா!
அது பிள்ளைகளின் திருமுகம் தேடுகிறது!

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! நெஞ்சுருக்கி உள்ளே நெருப்பேத்திவிடுகின்ற அந்தப் பாடலும் தொடங்கிறது!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே!
இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே!

இனித்தான் கல்லறைகள் கதவுகள் திறக்கும்!
இனித்தான் விழி மலர்த்தி வெளியே அவர்கள் வருவார்கள்!
அம்மா....!
அப்பா.......! எனத் தொடங்கி......
தோழரே....!
தோழியரே....! என நீண்டு.......! வழக்கத்தில் உள்ள அத்தனை உறவும் சொல்லி அசரீரி போல அவர்கள் அழைப்பது கேட்க்கும்!

விழி மூடி விதிர், விதிர்த்து நிற்பவர் முன்னே அவர்கள் வருவார்கள்! வருவார்கள்!
வந்து தொடுவார்கள்!
தொடுவார்கள்!
கட்டியணைப்பார்கள்! பழையன இரைமீட்டிச் சிரிப்பார்கள்!

எங்கே தமிழீழம்?
என்னாச்சுத் தமிழீழம்? திரும்பும் போதுதான் கேட்ப்பார்கள் இந்தமுறையும்! பதிலற்றவர்களாகப் பந்தம் ஏற்றப்போவது எத்தனை பாவம்?!
எத்தனை குற்றம்?!
காட்சிக்கு வைக்கப்பட்டவை அல்ல இந்தக் கல்லறைகள்!
இவை சாட்சிக்கு வைக்கப்பட்டவை என்பதைக் கணக்கிலெடுக்கவும்!
தாகம் சுமந்தவரின் வாசலில் நின்று சத்தியம் செய்யும் போது!
உண்மை மனிதராய் ஒளிரவேண்டும்!
அழகான கவிதைகளும், பாடல்களும், அனல்மூட்டும் பேச் சுக்களுமல்ல அவர்கள் வேண்டிநிற்பது!

அழுது, அழுது, விதைத்த அழகு மேனிகளின் மீது உறுதி எடுத்ததை நினைவில் கொள்வோம்!

உயிராய் வழியனுப்பி!
சடலமாய் வெளியில் எடுத்த காலத்தை நினைவில் கொள்வோம்!
தீராக் கனவுகளுடன் திரிந்த காலத்தை இன்று தொலைத்தா விட்டோம்?
சகல ஊத்தைகளையும் உரஞ்சிக் கழுவி!
உண்மை மனிதர்களாகக் கல்லறைகளுக்கு முன்னே இனி நிற்போம்!

அவர்கள் முகம் பார்த்து முறுவல் செய்வோம்!
உங்கள் கனவுகளை நேன்சில் புதைத்தே உறுதி சொல்வதாய் சொல்வோம்!
தாய் மீதும்!
தமிழ் மீதும்!
தலைவன் மீதும்!
உங்கள் கல்லறை மீதும்!
கனவுகள் மீதும்! சொல்லும் உறுதியுடன் தொடர்வோம் எமது பயணம் எனச் சொல்லி வெளியே வருவோம்!

சுமை குறைந்தது போலவும்!
நமக்கு நாமே புதியவர் போலவும் தெரிகிறதா!
ஆம் அது தான்!
இது தான் வழி!
இனித் தான் பயணம்!

-புதுவை இரத்தினதுரை

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com