இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்படட உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்....
நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள்,மற்றும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான நேற்று நாங்கள் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம்.
நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை, தமிழர்களை அழித்தவர்களுக்கும், சிங்கள அடிப்படைவாதிகளுக்கும், தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள். ஒன்றுபட்ட ஒருமித்த நாட்டுக்குள் ஏக்கியராச்சிய தீர்வையே சஜித் பிரேமதாஷவின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது.
மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் என்பது பொய், சிங்களவர்களே சிங்களவர்களை ஆட்சிபுரிகின்ற நாட்டில், சிங்கள மாகாணங்களுக்கு எதற்கு அதிகாரம், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனக் காட்ட மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழ் வேட்பாளருக்கே வாக்களியுங்கள். இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள், தமிழ் வேட்பாளர்களுக்குச் சிங்கள மக்கள் வாக்களிக்காத போது, தமிழர்கள் மட்டும் ஏன் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அவர்கள் செய்த இன அழிப்பையும், போர்க் குற்றங்களையும் சர்வ தேசத்திற்குக் காட்டி, எமக்கான சுதந்திரத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவோம் என தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் தெரிவிடுத்துள்ளார்.