அமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினரின் பக்கம் வருமா? வர வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும். இந்தியா தான் நினைத்த அனைத்தையும் செய்துமுடித்துக்கொள்ளுமளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது.
இனி இந்தியா நினைப்பதுதான் வடக்கு - கிழக்கில் செல்லுபடியாகும் சட்டம். 2015 ஆட்சி மாற்றத்துடன் அமெரிக்கா சிறுபான்மையினரைக் கையாள்வதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. சீனாவைப் போல பெரும்பான்மையினரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தாம் நினைப்பதை செய்துகொண்டு போகலாம் என்பதை உணர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டனர்.
இலங்கை அரசியஇயக்கும் பிரதான சக்தி பௌத்தப் பேரினவாதம் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கு இயைவான அரசியல் சூழலொன்றை தாம் உருவாக்கிக்கொடுக்க உழைக்கிறார்கள். இதைச் செய்துதானே இலங்கையில் சீனா இடம் பிடித்திருக்கிறது.
சீனாவுக்கு இலங்கையில் வாழும் சிறுபான்மையினரது அரசியல் பொருளாதார உரிமைகள் குறித்து ஏதாவது கரிசனை உள்ளதா? அதை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறதா? இல்லை. ஆனால் இலங்கை விடயத்தில் வென்றிருக்கிறது. நிலைத்திருக்கிறது. அதே வழியில் அமெரிக்கா வரத் தொடங்கி விட்டது.
தேர்தல் அரசியலுக்கு சிறுபான்மையினரது வாக்குகள் தேவைப்பட்டால், அதனை இனாமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கான அரசியல் புறச்சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. தனியே இனவாதத்தைப் பேசி தூய பெரும் பான்மைவாத ஆட்சியை நிறுத்துவதில் தடைகள் ஏதும் வரின், மீண்டும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கே இந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்படும்.
தூய பெரும்பான்மை வாதம் மீது உருவாக்கப்பட்டுள்ள அச்சம், அப்படியொரு தரப்பினருக்கு எதிரான மன நிலையிலேயே சிறுபான்மை மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். அது தவிர்க்கவும் முடியாது.
வடக்கு, கிழக்கில் வாழும் எந்தத் தாயும் இனி தனது மகன் காணாமல்
ஆக்கப்படுவதை, கொலை செய்யப்படுவதை விரும்பமாட்டார். எனவே பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான மனநிலையில் இருந்து சிறுபான்மை மக்களின் வெளியில் கொண்டுவர முடியாத ஒரு அச்சசூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அதற்கு முன்னைய ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற கொடூர குற்றங்களை செய்தவர்கள் இனங் காணப்பட்ட போதிலும், அவர்கள் தண்டனைகள் ஏதுமின்றி பொதுவெளியில் சுதந்திரமாக இயங்க விடப்பட்டமைக்கு பயச்சூழலை அப்படியே தக்கவைக்கும் நோக்கமொன்றும் இருந்தது.
எனவே சிறுபான்மயினருக்கு எதிரான குற்றங்களுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்பதை உணரும் பெரும்பான்மை மக்களின் வாழ்வொழுக்கமாக மாற்றியிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில், தெற்கில் இருக்கும் இரண்டு பேய்களில் வலுக்குறைந்த பேய்க்கு வாக்களிக்கும் போக்கு மிக இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே சிறுபான்மை மக்கள் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி, வலுக்குறைந்த பேயை ஆதரித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டு நிலையில் சிக்க வைக்கப் பட்டிருக்கின்றனர். எனவே அமெரிக்காவினால் சிறுபான்மை மக்களைக் கையாளவே இனித் தேவையில்லை. அவர்கள் தம் இயல்பான போக்கிலேயே அமெரிக்காவுக்குத் தேவைப்படும் அரசியலைச் செய்வர்.
அமெரி்க்கா இப்போதைக்கு தம் வழிக்கு கொண்டு வரப்பட வேண்டிய தரப்பினர் பெரும்பான்மையினர் தான். அவர்களைத் திருப்திப்படுத்த எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்காக அடுத்தடுத்து ஏப்ரல் சம்பவங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளார்.