முல்லைத்தீவு – ஒதியமலை பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஒதியமலைப் படுகொலைகள்– 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! முல்லைத்தீவு – ஒதியமலை பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு இதே நாளில், படுகொலை இடம்பெற்ற ஒதியமலை வாசிகசாலை முன்றலில், இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 1984 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் இரண்டாம் நாள். வழமை போன்று விடிந்த அதிகாலையில் வரலாற்றுப் பெருந்துயரம் நிகழப்போவதை அறியாது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது முல்லைத்தீவின் ஓதியமலைக் கிராமம்.

அண்ணளவாக முப்பது இலங்கைப் படையினர் ஒதியமலைக் கிராமத்தில் ஆடிய வெறியாட்டத்தில் 27 அப்பாவித் தமிழ் ஆண்கள் துடிதுடிக்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை இராணுவம் தம்முடன் கூட்டிச்சென்ற ஐந்து ஆண்களும் இன்றுவரை விடுதிரும்பவில்லை. 

பேரினவாத சிங்களப்படைகள் தமிழர் நிலங்களில் ஆடிய வெறியாட்டங்களில் இவ் ஒதியமலைப்படுகொலையும் ஒன்று. தமிழினம் இன்றைய நாளில் இப்படுகொலையினை மிகத்துயருடன் நினைவுகூர்ந்து நிற்கிறது.

ஒதியமலை படுகொலை - 02.12.1984
நவம்பர் 02,2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளும் அவர்கள் குடும்பங்களும் இராணுவப் பாதுகாப்புடன் சிங்கள அரசு குடியேற்றி வந்தது. அந்த வகையில் கென்பாம், டொலர்பாம் போன்ற இடங்களைத் தொடர்ந்து ஒதியமலைப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.
1984ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இருபத்தொன்பதாம் திகதியிலிருந்து மார்கழி இரண்டாம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. மார்கழி மாதம் முதலாம் திகதி பதவியாவிலிருந்து ஒதியமலை கட்டுக்கரை ஊடாக வந்த இராணுவத்தினர் ஓதியமலைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். மக்கள் அதிகாலை வீட்டின் கதவுகளைத் திறந்தபோது பச்சை நிற உடைகளுடனும் ஆயுதங்களுடனும் இராணுவத்தினர் நின்றனர். "நாங்கள் அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தினுள் கூட்டம் வைக்கப் போகிறோம் ஆம்பிளைகள் மட்டும் வாங்கோ" என சரளமாகத் தமிழில் கூறி முப்பதிற்கும் மேற்பட்ட ஆண்களை இராணுவத்தினர் கைது செய்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று அவர்களின் கைகளை பின்னாற் கட்டி சித்திரவதை செய்து சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இராணுவம் சென்றபின் அங்கு சென்று பார்த்தபோது கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தேழு பேர் மிகவும் கோரமாக கொல்லப்பட்டு மண்டபத்தினுள் கிடந்தார்கள்.
இறந்தவர்களில் அனேகர் திருமணமாகிக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்கள். பலர் முதியவர்கள், சிலர் கிளிநொச்சி மாவட்டம் பளை, பலியிலிருந்து வயல் வேலைக்காக ஒதியமலை வந்தவர்கள். வேறு சிலர் அயல் கிராமமான பட்டிக்குடியிருப்பிலிருந்து உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வந்தவர்களாவார்கள். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தினை தொடர்ந்து ஒதியமலைக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தார்கள்.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நா.கநத்சாமி இப் படுகொலை தொடர்பாக கூறுகையில்:
“அன்றைய தினம் காலை 6.30 மணியளவிலே எமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் எமது கிராமத்தை நான்கு பக்கத்தாலும் சுற்றிவளைத்து, எமது கிராம மக்களில் கண்ணிற் பட்டவர்களையெல்லாம் பிடித்து ஓரிடமாக்கி அவர்களது மேலங்கியைக் கழற்றி அதனைக் கொண்டு அவர்களது கைகளைப் பின்பக்கமாகக் கட்டி ஒதியமலைக் குளக்கட்டருகே கொண்டு வந்தனர். அந்த நேரத்திலே அவ்வீதியாற் சென்ற செல்வராசா என்பவரது உழவு இயந்திரத்தை மறித்து அதிலிருந்தவர்களையும் பிடித்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தின் பின் அலறல் சத்தமும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டது. அத்துடன், பிடித்தவர்களில் வயோதிபர்களாகப் பார்த்து கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, கணபதிப்பிள்ளை ஆகியோரைத் தங்களது பாதுகாப்பிற்காக அவர்களுடைய பண்ணைக்கு எனது உறவினர் ஒருவரின் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
இராணுவம் வந்ததை அறிந்து காட்டுக்குச் சென்றிருந்த நான் பின்னர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தினுள் ஓடிச்சென்று பார்த்தபோது மூன்று நான்கு பேராக நிறுத்தி வைத்து இருபத்தி ஏழு பேரையும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருப்பதைக் கண்டேன். நான் பார்த்த பொழுது குற்றுயிருடன் இருந்த சிலரும் தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டுக் கொண்டு இறந்ததையும் கண்டேன். பின்னர் அவர்களில் கால் வேறு, தலை வேறாக இருந்தவர்களை சீராக கட்டடத்தின் இரு மருங்கும் அடுக்கி விட்டு அங்கிருந்து கால்நடையாக முல்லைத்தீவு நோக்கி ஓடினோம். அந்த நேரம் இராணுவக் கெடுபிடிகள், ஊரடங்கு உத்தரவுகள் அதையும் மீறி பெரிய முயற்சியெடுத்து அரசாங்க அதிபர், காவற்றுறை அதிகாரிகள், நீதியாளர்கள், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்கள் என அனைவரையும் அழைத்து வந்து நடந்த சம்பவத்தைக் காட்டினோம்.
இறந்தவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது கண்கள், காதுகள், மூளைகள் வெளியிலே வந்த கோரக்காட்சியைப் பார்த்து அவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பின்னர் முழுக் கிராமத்தினரும் சேர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு முன்பாக பெரிய மரங்கள் போட்டு அதன் மேல் அவர்களை அடுக்கித் தீ மூட்டினோம். அதன் பின்பு இறந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சமயம் முல்லைத்தீவிலிருந்தும் சிலோன் தியேட்டர், டொலர்பாம், கென்பாம்களிலிருந்தும் இராணுவத்தினர் ஒதியமலை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டு எல்லோரும் பாதுகாப்பிற்காக நெடுங்கேணி நோக்கி வந்தோம்.”
02.12.1984 அன்று ஓதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.
01. நாகமணி சின்னையா (வயது 50)
02. நாகரத்தினம் கேதீஸ்வரன் (வயது 23)
03. நல்லையா நவரட்ணம் (வயது 17)
04. கந்தையா கனகையா
05. கந்தையா பொன்னம்பலம் (வயது 45)
06. கந்தையா சிவசிதம்பரம் (வயது 35)
07. கிருஸ்ணபிள்ளை இராசலிங்கம் (வயது 29)
08. கறுப்பையா தங்கராசா (வயது 18)
09. கணபதிப்பிள்ளை சின்னையா (வயது 35)
10. கணபதிப்பிள்ளை சிவபாதம் (வயது 28)
11. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 51)
12. தாமோதரம்பிள்ளை சதாசிவம் (வயது 46)
13. தம்பிஐயா காசிப்பிள்ளை (வயது 45)
14. தம்பிஐயா வேலுப்பிள்ளை (வயது 38)
15. தம்பிஐயா சுப்பிரமணியம் (வயது 26)
16. தம்பிஐயா சிவஞானம் (வயது 23)
17. அழகையா ஜெககாதன் (வயது 17)
18. கோவிந்தர் கணபதிப்பிள்ளை (வயது 55)
19. பொன்னம்பலம் தேவராசா (வயது 25)
20. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (வயது 36)
21. சுப்பையா கெங்காதரன் (வயது 26)
22. சின்னையா இராசேந்திரம் (வயது 21)
23. சிதம்பரப்பிள்ளை இராசையா (வயது 27)
24. சங்கரப்பிள்ளை சபாரத்தினம் (வயது 40)
25. சங்கரப்பிள்ளை சண்முகசுந்தரம் (வயது 25)
26. சண்முகராசா இரவிச்சந்திரன் (வயது 16)
27. வீரகத்தி தில்லைநடராசா (வயது 25)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 - 2001 நூல்.Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com