இந்திய எதிர்ப்பையும் தமிழின எதிர்ப்பையும் பறைசாற்றும் ருவான்வெலிசாய பதவியேற்பு வைபவம்- மு.திருநாவுக்கரசு

இந்தியாவிலிருந்து படையெடுப்பாளனாய் இலங்கைக்கு வந்த சோழனான எல்லாளன் கிமு 205 ஆம் ஆண்டு சிங்கள பௌத்த அரசான அனுராதபுர அரசை கைப்பற்றி அதன் மன்னனாய் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும் பின்பு கிமு 161 ஆம் ஆண்டு சிங்கள-பௌத்தனான துட்டகாமினி மன்னன் எல்லாளனைத் தோற்கடித்து யுத்தகளத்தில் கொன்றபின் அனுராதபுரத்தின் மன்னனாக துட்டகாமினி முடிசூடினான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.

இந்திய எதிர்ப்பு வாதம், தமிழின எதிர்ப்பு வாதம் என்பனவற்றுடன் கூடிய காப்பிய நாயகனாய் மன்னன் துட்டகாமினியை புகழ்ந்தேற்றுவதன் வாயிலாக சிங்கள பௌத்த பேரினவாதம் மகாவம்சத்தில் கட்டமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

மகாநாம தேரரால் எழுதப்பட்ட மகாவம்ச மூலநூலில் இது இனவாதமாக சித்தரிக்கப்பட்டதா, இல்லையா அல்லது பிற்காலத்தில் மேற்பட்ட இடைச் செருகலா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கப்பால் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பௌத்த மஹா சங்கத்தினரதும், சிங்கள அரசியல் தலைவர்களினதும், பரந்துபட்ட சிங்கள -பௌத்த மக்களினதும் மனப்பாங்கை, விருப்பு வெறுப்புகளை, எண்ண உணர்வுகளை வடிவமைத்த தத்துவ நூலாயும், வரலாற்றியல் ஆவணமாயும் மொத்தத்தில் சிங்கள பௌத்தர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஒரு கருத்துருவமாயும் இது அமைந்துள்ளது என்ற நடைமுறை சார்ந்த பக்கம் இங்கு முக்கியமானது.

இத்தகைய மகாவம்ச மனப்பாங்கின் எண்ண ஓட்டத்தில் இருந்துதான் கோத்தாபய ராஜபக்ச பௌத்த மதத்தினாலும் துட்டகாமினியின் பெயராலும் புனித பீடமாய் ஆக்கப்பட்டுள்ள ருவான்வெலிசாய புனிதா பீடத்தில் இந்திய எதிர்ப்பினதும் தமிழின எதிர்ப்பினதும் குறியீடாயும் அதன் நவீன கதாநாயகன் நானே என்ற வகையிலுமான செய்தியை சிங்கள பௌத்த மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் உள்நோக்கத்தோடு மேற்படி ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

பண்டைய வரலாற்றின் அடிப்படையில் நவீன இலங்கையின் வரலாற்றை சிங்கள-பௌத்த இன மேலாதிக்க அரசியலுக் கேற்றதாய் வடிவமைக் கப்பட்டுள்ள நிலையில் இந்திய எதிர்ப்பு வாதமும், தமிழின எதிர்ப்பு வாதமும் பின்வரும் ஒழுங்கில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது.

சோழ நாட்டிலிருந்து வந்ததாக கூறப்படும் எல்லாளனின் கதையுடன் கூடவே கிபி 993 ஆம் ஆண்டு சோழப் பேரரசு அனுராதபுரத்தை கைப்பற்றி அங்கு விளங்கிய சிங்கள பௌத்த அரசின் தலைநகரை அழியவிட்டு அங்கிருந்து தெற்கு நோக்கி பொலநறுவைக்கு நடத்தியதாகவும் பின்பு, தொடர்ந்து தென்
இந்தியாவில் இருந்து வந்த மாகானின் படையெடுப்பு போன்ற படையெடுப்புகளினால் சிங்கள- பௌத்த இராச்சியத்தின் தலைநகரம் மேலும், மேலும் தெற்கு நோக்கி தம்பதெனியா குருநாகல் கண்டி கொழும்பு என காலத்திற்கு காலம் மாற்றப்பட வேண்டிய நிலை உருவாக்கியதாக சிங்கள பௌத் மக்கள் மத்தியில் வரலாறு போதிக்கப்பட்டு வருகிறது.

எனவே சிங்கள பௌத்த ஆட்சியை மீட்க்க இலங்கையின் தென் பகுதியான ருகுணு இராச்சியத்திலிருந்து துட்டகாமினி படை எடுத்துவந்து தமிழ் மன்னனான எல்லாளனை வீழ்த்தி சிங்கள பௌத்த அரசை கி-மு 161 ஆம் ஆண்டு மீட்டது போல,, அவ்வாறே பின்பு தென் பகுதியான ருகுணு இராசியிலிருந்து சிங்கள பௌத்த மன்னன் விஜயபாகு கிபி 1070 ஆம் ஆண்டு சோழப் பேரரசை தோற்கடித்து சிங்கள பௌத்த அரசை மீட்பது போல, ருகுணு இராச்சியம் விளங்கிய அம்பாந் தோட்டையில் இருந்து ராஜபக்சக்கள் எழுந்து வந்து 2009ஆம் ஆண்டு வடக்கில் புலிகளைத் தோற்கடித்து சிங்கள பௌத்த அரசை விடுவித்ததுடன், அந்த யுத்தத்தில் சிங்கள பௌத்த யுத்த கதாநாயகனாக விளங்கிய கோட்டபாய ராஜபக்ச வட மத்தியில் தமது பழைய சிங்கள பௌத்த தலைநகரில் முடிசூடிய ஒரு வரலாற்றுக் காட்சியை இங்கு மீள் வடிவபடுத்தியுள்ளனர்.

நவீன வரலாற்றில், அதுவும் நவீன பல்லின தேசிய கலாச்சார உலக வரலாற்றில் பண்டைய மன்னர்கால வரலாற்றின் பெயரால் பல்லின தேசிய கலாச்சாரத்துக்கு எதிரான பேரினவாத இனப் படுகொலை அரசியல் கலாச்சாரத்தை இந்திய தமிழின எதிர்ப்பு வாதத்துடன் கூட்டு இணைத்து இங்கு அரங்கேற்றும் ஒரு துயரம் காணப்படுகிறது.

இனி அரங்கேறவுள்ள தமிழின அழிப்புக்கும், முழு இலங்கைத் தீவையும் சிங்கள பௌத்த மயமாக்கல் செய்வதற்குமான மேலாதிக்க ஆட்சிக்கான கட்டிடங்களாக இவை அமைந்துள்ளன. இது இலங்கையில் இன அழிப்பை உருவாக்கவல்லது மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பெரும் குந்தகமாகவும் தீங்காகவும் அமையவுள்ளது.

முழு இலங்கைத்தீவு அடங்கலான ஈழத் தமிழரின் 3000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட பெருங்கற் பண்பாட்டை மறைத்தும், அழித்தும் அந்தப் பண் பாட்டிலிருந்து தொடர் வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் தேசிய இனத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு ஏற்றவகையில் பிற்கால மன்னர் வம்ச போட்டி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழின அழிப்புக்கு தேவையான சிங்கள பௌத்த வரலாற்றியலை வடிவமைத்து தமது மேலாதிக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

நவீன வரலாற்று வளர்ச்சிக்கு முரணான இத்தகைய பிள்ளையான இனப்படுகொலைக்கு ஏதுவான வரலாற்றியல் முன்னெடுக்கப்படும் நிலையில் இலங்கையில் ஒருபோதும் சமாதானமும் மனித சமத்துவமும் நிலவே முடியாது. இந்த வகையில் சாராம்சத்தில் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது இந்தியாவுக்கு எதிரான சிங்கள பௌத்த மேலாதிக்க பிரச்சனையாகும். ஆதலால் இந்தியாவுக்கு எதிரான, அவர்கள் கூறும் இந்திய ஆதிக்கத்துக்கு எதிரான தமது யுத்தத்தை சிங்கள பௌத்தர்கள் ஈழத் தமிழர்கள் மீது புரிகிறார்கள்.

இங்கு இந்தியாவுக்கு எதிரான சிங்கள பௌத்தர்களின் யுத்தத்தில் களப்பலியாவது அப்பாவி ஈழத் தமிழ் மக்களே. ஆதலால் ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பின்றி இலங்கையில் அமைதியும் நிலவ முடியாது, இந்தப் பிராந்தியத்திற்கு சமாதானமும் கிட்டமுடியாது. அத்தகைய ஒரு பேராபத்தை நோக்கி இலங்கை அரசு ஓர் உக்கிதிர பயணம் தொடங்கி விட்டது என்பதை ருவான்வெலிசாய பதவி பிரமாண வைபவம் கட்டியம் கூறி நிற்கின்றது. 

இந்திய முன்னணி பத்திரிகையாளரான நிதின் கோகலே என்பவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அளித்த ஒரு செவ்வியில் பின்வருமாறு கூறிய விடயங்கள் அனைத்தும் பெரிதும் கவனத்திற்குரியவை.

இலங்கை ஒரு பக்கம் சாராத நாடு ""neutral country"", என்று கூறினார். மேலும் கூறுகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட 99 ஆண்டு கால ஒப்பந்தம் தவறானது ஒன்று ""a mistake"" என்றும் கூறியுள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு அபிவிரித்திதான் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய மூத்த அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் கோத்தாபயவின் மேற்படி கருத்தை இலங்கை அரசின் முன்னைய வரலாற்று அனுபவங்களுக்கூடாக முன்னெச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சீன அரசுடன் செய்து கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தை தவறானது என்று கூறும் கோத்தாபயவின் வார்த்தைகளுக்குப் பின்னால் மிகவும் ஆழமான ராஜதந்திர இலக்குகள் உண்டு. இந்த ஒப்பந்தத்தை அவர்கள் மாற்றி எழுதுவார்களா, இல்லையா என்பது வேறுவிடயம்.

ஆனாலும் எழுதப்படாத சீனா -- ராஜபக்சக்களுக்கு இடையேயான ஆத்மார்த்த உறவு நடைமுறையில் அதிக பயன்உள்ளதும், பாதுகாப்பானதும், புத்திசாலித்தனமானதும் இந்தியாவை கையாள இலகுவானதுமாகும். மேலும் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவியேற்ற பின்பு பின்வருமாறு கூறினார்.

இலங்கை ஒரு ""பக்கம் சாரா நாடு "" என்றும் "" போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் சபையிடம் இலங்கை ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் "" என்றும் அதேபோல கடந்த அரசாங்கங்கத்தின் காலத்தில் ""இரு தரப்பு ""மற்றும் ""சர்வதேச ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்"" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது விடயத்தில் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்துடனான உடன்படிக்கைகளிலிருந்து பின் வாங்குவதற்கான எத்தனம் இதில் பிரதானமானது.

ஒருவேளை எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில், தாம் புதிய அரசு இப்போதான் பதவியேற்று உள்ளதாகவும் அதேவேளை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய நாடாளுமன்றம் கூடிய பின்புதான் அது பற்றி தீர்மானிக்கலாம் என்றும் கூறி செப்டம்பர் மாதம் வரை அவர்களால் தந்திரமாக பிரச்சினையில் இருந்து பின்வாங்கவும் முடியும்.

மேலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு ""பொருளாதார அபிவிருத்தி தான் "" என்று கூறுவதன் உட்பொருள் சிங்கள பௌத்த மயமாக்கல் என்பதுதான். தமிழ் மக்கள் கோருவது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசு மேற்கொள்ளக்கூடிய சிங்கள மயமாக்கல் அல்ல. தமிழ் மக்களின் கரங்களில் அபிவிரித்திக்கான அரசியல் அதிகாரம் இருக்குமேயானால் அவர்கள் தமக பண்பாட்டுக்கும் தமது புவியியற் சூழலுக்கும் பொருத்தமாக சிறப்பான அபிவிருத்தியை அவர்களால் மேற்கொள்ள முடியும்.

எனவே அபிவிருத்தியின் வடிவிலான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை தமிழ் மக்கள் கோரவில்லை மாறாக தமக்கான துரித அபிவிருத்திகளை மேற்கொள்ளவல்லை அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரத்தைநத்தான் அவர்கள் வேண்டிநிற்கின்றார்கள்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com