பிரான்சு நாட்டின் Choisy-le-Roi நகரசபையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தும் தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரியும் தீர்மானம் நிறைவேற்றம்!!!!


பிரான்சு நாட்டின்  Choisy-le-Roi நகரசபையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தும் தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரியும் தீர்மானம் நிறைவேற்றம்!!!!

பிரான்சின் பாரிசு நகரை அண்டியிருக்கும் தமிழர்கள் அதிகம் வாழும் Choisy-le-Roi எனும்  நகரிலே 22.01.2020 அன்று செவ்வாய்க்கிழமை ஈழத்தமிழருக்கு ஆதரவாக  நகரசபைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 'தமிழருக்காக 4 மணிநேரம்' என்ற தலைப்பில் கடந்த 14.12.2019 அன்று
அந் நகரசபையின் அனைத்துலகத் தொடர்பாளர் திருமதி Florence Lercervoisiser அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பில் அங்கு பல காலங்களாக இயங்கிவரும் Choisy-Le-Roi வின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின்  ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதிலே அங்கு வாழும் பிரெஞ்சு மக்களுக்கு ஈழத்தமிழர் நிலை குறித்து விளக்கவும், மேலும் நகரசபை எவ்வாறு எமது பிரச்சனையை அணுகலாம் என்கிற நோக்கிலும் அச் சந்திப்பு நடந்திருந்தது. அந்த அரங்க மேடையில் வைத்தே தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் திருமதி நிசா பீரிஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நகரசபை உறுப்பினர் திரு Laurent Ziegelmeyer உடனடியாகவே ஒரு மாதத்திற்குள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்மானத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அவரது உறுதிமொழிக்கிணங்க குறுகிய காலத்திலேயே இத்தீர்மானம் தீர்க்கமாக வடிவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நகரசபையின் சர்வதேச விவகார ஆலோசகர் திரு Laurent Ziegelmeyer அவர்கள் ஈழத்திலே தமிழர்களின் அவல நிலை குறித்து ஆலோசகைக்குழுவின் கவனத்தை ஈர்த்துப் பேசி 2018 லே நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலை வரையிலான தமிழருக்கு எதிரான அவலங்களை சுட்டிக்காட்டி இத்தீர்மானத்தை முன்மொழிந்தார். பின் இத்தீர்மானத்திட்டம் ஆலோசனைக் குழுவின் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதில் பங்கெடுத்த நகரசபை உறுப்பினர் 'நாம் வாழும் உலகச் சூழல் மிகவும் பயங்கரமாக மாறி வருகிறது. எமது பிள்ளைகளின் வருங்கால நிலை குறித்து கவலை கொள்ள வைக்கின்றது. தூரத்திலே நடந்தாலும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அக்கிரமங்களை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்' என்று கூறியிருந்தார். கம்யூனிசிட் மற்றும் குடியரசுக் கட்சியினரால் இத்தீர்மானம் முன்மொழிந்திருக்கப்பட்டினும் கட்சி பேதம் பாராது அனைத்துத் தரப்பும் ஒரு மனதாக எந்தவொரு சலசலப்புமின்றி ஈழத் தமிழருக்கு ஆதரவாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர் என்பதும் பிரான்ச் வாழ் ஈழத்தமிழருக்கு மேலும் ஒரு சிறப்பூட்டும் விடயமாக இருக்கின்றது.

வாக்குகளையடுத்து Choisy-le-Roi நகரபிதா திரு Didier Guillaume அவர்கள் பேசுகையில் 1990ம் ஆண்டு வெளிவந்த பிரஞ்சு பாடகி Pauline Ester ன் 'உலகம் பைத்தியமாகி விட்டது' (Le monde est fou) என்ற பாடல் வரிகளை ஈழத்தமிழர்கள் நிலை தனக்கு நினைவு படுத்துவதாகக் கூறியிருந்தார். 'உண்மையிலேயே உலக மக்களை ஆழும் வர்க்கமே மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணம். எனவே ஆட்சியில் உள்ள நாங்கள் நினைத்தால் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தலாம்' என்று கூறி இத்தீர்மானத்தை கைச்சாத்திட்டு வைத்தார்.

'Mayors for Peace' என்றழைக்கப்படும் சர்வதேச நகரபிதாக்களின் ஒன்றியத்தில் தான் பல காலமாக சேவை புரிந்து அதனூடாக அமைதிக்கான சர்வதேச நாளை பிரகடனப்படுத்துவதற்கு முன்முயற்சி எடுத்திருந்ததையும் நினைவுபடுத்தியிருந்தார் நகரபிதா.

இவ்வாறாக இத்தீர்மானம் உணர்வு பூர்வமாக Choisy-le-Roi நகரசபையில் 22.01.2020 இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் சாராம்சம் பின் வருமாறு:

'தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை கருத்தில் கொண்டு,
செப்டம்பர் 2015 இல் ஜெனீவாவில் நடந்த மனிதவள மேம்பாட்டு அமர்வின் போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் 30-1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டது என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் இந்த 34-1, 40-1 தீர்மானங்களை செயல்படுத்தவில்லை, தோல்வியுற்றது மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு சமமான அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்கத் தயாராக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் மீண்டும் தமிழருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க வருவதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதனையும் மனதில் கொண்டு,

- செப்டம்பர் 2018 இல் பிரஞ்சுக் குடியரசுத் தலைவருக்கு Choisy-le-Roi நகரபிதா அனுப்பிய கடிதத்தைக் கருத்தில் கொண்டு,

- சர்வதேச உத்தரவாதங்களின் கீழ் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி சர்வதேச சட்டத்திற்கு மரியாதை அளிப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதை ஆதரிக்கவும் பிரான்சு நாட்டு அதிபரிடம் கோரியும்,

 - ஏப்ரல் 2011 ல் ஐ.நா. நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஏற்பாடு செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை முன்நிறுத்துவதற்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும்,

- இலங்கையின் வடக்கு கிழக்கில் சுயநிர்ணய வாக்கெடுப்பை ஏற்பாடு செய்ய சர்வதேச சமூகத்திற்குக் கோரியும்

- ஐக்கிய நாடுகள் சபையில், தமிழ் மக்களுக்கு கருத்து சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமென்றும்,

- ஐரோப்பிய ஒன்றியத்திலே, தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டியும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமாக தமிழர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றாரகள்;.

 - இலங்கையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் இனப்படுகொலையை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக சுட்டிக்காட்டுதல்;

- மேற்கூறிய கோரிக்கைகளைப் பெறுவதற்காகவும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அகதிகள் திரும்புவதற்கான உரிமையைப் பெறுவதற்காகவும் தமிழ் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் துணை நிற்க வேண்டும்

எனவும் பிரஞ்சு அரசாங்கத்திடம் கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றார்கள்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com