"நாங்கள் ஆற்றை பிள்ளைகள்" "அண்ணை" - எம் தேசத்தின் அடையாளம்! - சினம்கொள்

ஈழச் சினிமா மீதான பார்வையும் சினம் கொள் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட வெளியீடும்!

சினம் கொள்! - ஈழத் திரையில் ஓர் மைல் கல்! 

ஈழத்தில் முழு நீழத் தமிழ்த்திரைப்படம் என்பது பல காலமாக ஓர் சவாலான விடயமாக இருந்தமைக்கு பணப் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல. ஈழத் தமிழரின் பேச்சு வழக்கு திரையில் சுவாரசியமற்றதாக இருப்பதும் ஓர் காரணம் என பொதுவாக்க் கூறப்பட்டது.
தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஊறிக் கிடந்த எமக்கு அந்தப் பேச்சு வழக்கைத் தான் சினிமாவாகப் பார்க்க முடியும் என்பது போன்ற மனநிலை இருந்ததும் தவறான ஒன்றல்ல.

எமது வாழ்வியலைப் பேச வைப்பதற்காக சில தென்னிந்திய சினிமா இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள் தான். ஆனால் அவை வெறும் கேலிகளாகப் பார்க்குமளவிலான பேசுபொருளாகிப் போகின. உதாரணமாக கமலின் தெனாலியில் கமல் பேசும் அந்த மொழியைக் கேட்ட போது பெருமளவில்ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அது போலவே ஜீவாவின் இராமேஸ்வரம் மற்றும் சூர்யாவின் நந்தா படங்களும் ; எம் மொழி நடையிலோ அதன் பேச்சுவழக்கிலோ ஓர் சுவாரசியம்இருக்கவில்லை.
எமது நாட்டின் அறிவிப்பாளரான அப்துல் ஹமீத் அவர்களால்
பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக்க் கூறப்பட்டாலும் அது திரையில் சுவாரசியத்தைத் தருவதற்குப் பதிலாக திரைக்கு  வெளியே கேலிக்குரிய பேச்சு வழக்காகவே பார்க்கப்பட்டது. இன்று வரை “எனக்கு எதைக் கண்டாலும் பயம்” என்னும் வசனங்கள் கேலியாக அதுவே எமது மொழிநடையாகவே பார்க்கப்படுகின்றது. அண்மையில் விஜய் ரீவியின் பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஈழத் தமிழ்ப் பெண் லொஸ்லியாவுடனான கமலின் ஆரம்ப உரையாடல் கூட கேலியாகப் பேசப்பட்டது.

ஈழத்தின் மனவலிமையை, போராடும் தன்னம்பிக்கையை உலகத்திற்கு காட்டுமுகமாக ஈழத்திரைப்படம் இந்திய சினிமாவில் காட்டப்பட வேண்டும் என்பதற்காக   பல இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக ஈழத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாலும் யாராலும்  அப்படி ஓர் படத்தை எடுத்துவிட முடியவில்லை. உதாரணமாக சீமான் விடுதலைப் புலிகளின்  தலைவரைச் சந்தித்த போது ஓர் ஈழப் படம் தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அதேவேளை கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக்கு மாறாக சில விடயங்கள் காட்டப்பட்டுள்ளதாக இயக்குனர் மணிரத்தினம் மீது விமர்சனங்களும் இருக்கின்றன.

ஈழத்தமிழரில் அதி பலம் வாய்ந்த லைக்கா தயாரிப்பு நிறுவனம்  தென்னிந்தியச் சினிமாவின் பிரமாண்ட முதலீட்டாளர்களாக இருக்கின்ற போதிலும் , வியாபார ரீதியில் வெற்றியடைய முடியுமா என்கின்ற பெரிய சந்தேகத்துடன்,  முதலீடு அற்ற திரையுலகமாகவே ஈழச்சினிமா என்பது தேங்கிக் கிடந்தது. ஐபிசித் தமிழின்   அனுசரணையுடன் ஈழத்து குறும்படங்கள் பேசு பொருளாக்கப்பட்ட போதும் ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் என்பது தொலை தூரத்திலேயே நின்றது.

இவ்வாறாக ஈழத் தமிழரின் படத்தை சுவாரசியமாக அதே வேளை அவர்களின் பண்புகளும் பழக்க வழக்கங்களும் மாறாமல்  பார்க்க முடியுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தான் “சினம் கொள்” திரைப்படம் கனடா வாழ் ஈழத்தமிழரான ரஞ்சித் ஜோசபின் இயக்கத்தில் அண்மையில் திரையிடப்பட்டது.  எம் இனத்தின் சார்பாக "எங்கள்படத்தை , வலியை நாம் தான் எடுக்க வேண்டும்" என்ற உண்மையை உரத்துச் சொல்லி உருவமாக்கியிருக்கும் ஓர் ஈழத் திரைப்படம் தான் “சினம் கொள்”.

எந்த எதிர் பார்ப்புமில்லாமல், சத்தமில்லாமல் வந்திருந்தாலும் சினம் கொள் பல விமர்சனங்களையும் ஓர் இனம்புரியாத உணர்வையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கின்றது.

அமுதன் - கறுப்பாய் களையாய் எம் மண்ணின் வாசனையோடு கட்டுமஸ்தாய்; தமிழ்ப் பெட்டைகள் ரசிக்கும் எங்கடை பொடியனாய்; வீரமும் ரௌத்திரமும் நிறைந்த முன்னாள் போராளி - சினம் கொள் திரைப்படத்தின் கதாநாயகன்! அமுதன் கையிலிருந்த அந்தக் கடிகாரமும் கண்களில் இருந்த கனலும் தான் எம் ஈழச்சினிமாவின் தொடக்கம்.

அமுதன் இன்று  இந்தியத் திரையில் நட்சத்திரமாய் மின்னத் தொடங்கியிருக்கிறார். இலங்கையில் வாழும் அமுதன் என்னும் அரவிந்தன் அண்மையில் வெளிவந்த மிக மிக அவசரம் என்னும் இந்தியத் தமிழ் திரைப்படத்தில் இலங்கைத் தமிழராக நடித்திருந்தார்.

ஆனந்தி என்னும்  நர்வினி அத்தனை அழகாய் தமிழ் கதாநாயகி. - நோர்வேயில் வசிக்கும் விளம்பர மொடல் அழகி. அண்மையில் சில விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

இயக்குனர்  ரஞ்சித் - தமிழ் மீதும் தமிழரின் வாழ்வின் மீதும் அதிகம் அக்கறை கொண்ட ஓர் ஈழத் தமிழன்.    படத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த கதாநாயகன்அமுதனின் உடல் இன்றைய கேப்பாப்புலவையும் ,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடும் தன் இனத்தையும் பார்த்தவுடன் சினம் கொண்டு விறைத்த போதே இயக்குனர் தான் யார் என்பதைப் புரிய வைத்துவிட்டார்.

எழில் கொஞ்சும் எம் தேசத்தின் எம்மில் பலர் பார்த்திருக்காத கௌதாரி முனையும், கடல் காட்சிகளும் ஈழச் சினிமாவுக்கு புதிய வரவுகள்.

"துரோகங்கள் எமக்குப் புதுசா" 
"உரியவர்கள் வரட்டும் குடுக்கிறோம்"

 "அது உங்களதல்ல - உங்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டது". 

பல வசனங்கள் ஈழத் தமிழரின் இன்றைய வாழ்க்கை நிலையைத் தொட்டு நிற்பதால் இலகுவாக மனதில் பொருந்திவிடுகின்றது.

சிங்கள மொழியின் மேலாதிக்கப் பயன்பாடும்,  எம் தமிழ் மன்னர்களின் வரலாறும், முயன்று மாற்றப்படும் மண்வாசனையும் ஆக சினம் கொள்ள வேண்டியதன் காரணங்களை அடுக்கிச் செல்கின்றது - சினம் கொள்!

ஆயுத மௌனிப்பும், அவருக்கு கொடுத்த வாக்குக்காக.....
"நான் அப்படிச் செய்வனோ அண்ணை" 
"நாங்கள் ஆற்றை பிள்ளைகள்"
"அண்ணை" - எம் தேசத்தின் அடையாளம்! 
இயக்குனர் ரஞ்சித்தின் ஈழம் மீதான பார்வையும் அதன் அதன் அடையாளம் என்னும் வரலாறும் தெளிவாகவே புரிகின்றது. தீபச் செல்வனின் வரிகளின் தாக்கமும் , அழுத்தமும் ஈழச்சினிமாவுக்கு புதிய வசனகர்த்தாவை அளித்திருக்கின்றது என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.

மிக அழுத்தமான இயக்கம். பாடல்கள் மனதைத் தொட்டு நெஞ்சைப் பிசைந்தன. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பது ஒரு ஆரம்பத்தின் கற்பினையாக எடுத்துக் கொள்ளலாம்.

அரசாங்கத்தையும் இன்றைய சூழலையும் மேலோட்டமாக க் காட்டியிருக்கின்றார் என்ற விமர்சனம் இருந்தாலும் பல விடயங்களை இயங்குனர் வெளிப்படையாக காட்டியிருப்பது என்பது இனி வரும் காலங்களில் அவரது படத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம் என்னும் ஊகத்தையே தருகின்றது.

எம் தேசத்தின் அவலத்தையும், கேட்க நாதியற்றவர்களாய் தகித்துக் கொண்டிருக்கும் எம் இனத்தின் கோபத்தையும் அமுதன் கண்களால் தன் இயக்கத்தில் உரசிப்பார்த்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் இந்த முயற்சியை தட்டிக் கொடுத்து எமக்கென்று ஓர் தளத்தை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்துச்  சினிமா ரசிகனதும் கடமையாகும். அந்த வகையில் ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு பல எதிர்பார்ப்புக்களோடும், கனவுகளோடும் முன்னோடியாக வந்திருக்கும் சினம் கொள் சினிமாவுக்கான உங்கள் ஆதரவையும், ஈழத்தின் வாழ்வியல் மீதான உங்கள் அக்கறையையும் காட்ட வேண்டிய தருணத்தில். ...!!!!

சினம் கொள் திரைப்படம் மீண்டும் பிரித்தானியாவின் முன்னணித் திரையரங்குகளில் பெப்ரவரி 23 இலிருந்து ....!

#சினம் #கொள் - ஈழத் திரையில் ஓர் மைல் கல்! 

றோஷினி ரமேஷ் 
பிரித்தானியா.

For tickets please follow the link : 

https://www.eventbrite.co.uk/e/sinamkol-movie-tickets-93636690863
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com