நாடாளுமன்றத் தேர்தல் மாயாஜால இலட்சியமா? குறைந்தபட்சக் கூட்டு முன்னணியா?

நாடாளுமன்றத் தேர்தல் மாயாஜால இலட்சியமா? குறைந்தபட்சக் கூட்டு முன்னணியா? 

பதவி, பணம் , சொத்து, அதிகாரசுகம் இவைகள் அனைத்தும் நடனமாடும் மேடைக்குப் பெயர் தேர்தற்களம். பதவி, பணம், சொத்து , அதிகாரசுகம் என்ற இந்த அபிலாசைகளுக்கு பூசப்பட்டிருக்கும் அழகிய முலாம்தான் இலட்சியம்.

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இலட்சியம் என்றால் தியாகிகளும் காப்பிய நாயகர்களும் கண்முன் தோன்றுவார்கள். தமிழ் மக்களின் உரிமைக்காக பெரும் உயிர் தியாகம் புரிந்த தியாகிகளின் காலம் மாறி, தமிழ் மக்களின் உரிமைகளை விற்றுச் சொத்து -- சுக அலைகளில் மிதக்கவல்ல தமிழ் தலைவர்கள் மேலோங்கியுள்ள காலமிது . ஆனால் இவர்கள் அதிகம் இலட்சியத்தைப் பற்றியே பேசுவார்கள். அந்த இலட்சியம் என்ற கலசத்தால் சொத்துச் சுகங்களைக் கோலியள்ளித் தங்கள் பணப் பெட்டகங்களை நிரப்புவார்கள். அத்துடன் தமக்கு கிடைக்கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தித் தமது அடுத்த - அடுத்த சந்ததிகளுக்கும் அதனை பாதுகாப்பார்கள். தியாகிகள் பிறந்த மண்ணே!

இத்தகைய தங்கவேட்டை காரர்கள் மீது முன்னெச்சரிக்கையாய் இருங்கள் என்று வரலாற்றன்னை கண்ணீரோடும், கம்பலையோடும் , அக்கறையோடும் அறிவுறுத்தத் தவறவில்லை. நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான திகதி பிரகடனப்படுத்தப் பட்டாயிற்று. தமிழ்த் தலைவர்கள் பெரும் இலட்சியப் பிரகடனங்களோடு களமிறங்கப் போகிறார்கள். அனைத்து விதமான இலட்சிய வேட்கைகளுக்கும், புனிதப் பிரகடனங்களுக்கும், ஏமாற்று நாடகங்களுக்கும், மனோரம்மியமான மாயாஜால வித்தைகளுக்கும் அப்பால் களநிலை அரசியல் யதார்த்தம் எப்படி இருக்கின்றது , எப்படி இருக்கப் போகிறது என்பதை முதலில் நோக்க வேண்டியது அவசியம்.

நடப்பு அரசியல் எதார்த்தத்தை எடைபோட பின்வரும் ஐந்து அம்சங்களும் அடிப்படையானவை.

1*  உலகப் பொது உண்மை (Universal truth) , 
2*  பூகோளம் தழுவிய பார்வை ( Global outlook) , 
3* சர்வதேச நோக்கு (International perspective) , 
4* தேசிய நலன் (National interest ), 
5* களநிலை யதார்த்தம் ( Ground reality). இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இசைவாக்கம் செய்யவல்லதான ஒரு புள்ளிதான் சரியான தீர்மானம் எடுப்பதற்கான நடைமுறை சார்ந்த வழியாகும்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழர் தமது நலன் சார்ந்து எந்தொரு சட்ட மூலத்தையும் முன்மொழிந்து நிறைவேற்றியது கிடையாது. இது இலங்கையின் அரசியல் வரலாற்றுக் கலாச்சாரத்தை தெளிவுற பறையறைந்து நிற்கின்றது.

தற்போதைய நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சம் தமிழர்கள் 22 ஆசனங்களைத்தான் பெறமுடியும். இது மொத்தம் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையில் சுமாராக பத்தில் ஒரு ( 10/1) பங்குதான். இந்தப் பத்தில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பேரினவாத நாடாளுமன்றத்தில் ஒருபோதும் தமிழர்களால் எந்தொரு தீர்மானத்தையும் தமது நலன் சார்ந்து உருவாக்க முடியாது.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அந்த நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கரை ஆண்டுகளாக தெளிவாக முண்டு கொடுத்த போதிலும் , தமிழரின் தயவால் ஜனாதிபதி தெளிவான போதிலும், தமிழரின் ஆதரவில் நல்லாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தங்கியிருந்த போதிலும், தமிழ் மக்களின் நலன்களுக்கான எந்தொரு சட்டத்தையும் உரிமையையும் அந்த ""நல்லாட்சி அரசாங்க "" காலத்தில் உருவாக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

இதற்கு முன்பும் 1949 ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டு வரை திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி பிரதமராக இருந்த டி.எஸ்.செனநாயக்க, அடுத்த பிரதமராக இருந்த டட்லி செனாநாயக்க அவரை அடுத்து பிரதமராக இருந்த சேர்.ஜோன் கொத்தலாவல ஆகிய மூன்று ஐ.தே.க.அரசாங்கங்களுடனும் அமைச்சரவையில் பங்கு வகித்து கூட்டுச் சேர்ந்திருந்த காலத்திலும் சிங்கள அரசாங்கம் தமிழருக்கு சாதகமான சட்டங்கள் எதையும் கொண்டுவராது மாறாக பாதகமான சட்டங்களையும் சிங்களக் குடியேற்றம் போன்ற பாதகமான நடைமுறையையும் கொண்டிருந்தது.

இதன்பின் 1965 ஆம் ஆண்டு டட்லி செனாநாயக்க அரசாங்கத்தில் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியும் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்ந்து "தேசிய அரசாங்கம்" அமைத்திருந்த போதிலும் குறைந்தபட்சம் அரை வேக்காடான மாவட்ட சபைகள் அமைக்கும் மசோதாவை ஐ.தே.க.வினர் நாடாளுமன்றத்தில் கொண்டுவர மறுத்து இறுதியில் அது ஒரு வெறும் வெள்ளை அறிக்கையாய் நாடாளுமன்ற மேசையில் கரைந்து போனது. இறுதியாக திரு.ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு

"நல்லாட்சி அரசாங்கத்திற்கு" முண்டு கொடுத்தவாறு 2016ஆம் ஆண்டு தீபாவளியை அரசியல் தீர்வை கொண்ட புதிய அரசியல் யாப்பின் கீழ் கொண்டாடுவோம் என்று 2015 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று திரு .சம்பந்தன் சூளுரைத்தார்.

அவ்வாறு கூறிய உண்மைகளுக்கு புறம்பாக புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் இன்னும் நாடாளமன்ற மேசையில் இருப்பதாக நான்கரை ஆண்டுகள் முடிந்த பின்பும், கூடவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் தருணத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் திரு எம்.ஏ.சுமந்திரன் மக்கள் மத்தியில் கூறத் தொடங்கினார். மேற்படி சுதந்திரத்தின் பின்பு , பொன்னம்பலம் பங்குவகித்த 3 அரசாங்கங்களின் காலத்திலும், செல்வநாயகம் , பொன்னம்பலம் கூட்டுச் சேர்ந்திருந்த டட்லி செனநாயக்காவின் தேசிய அரசாங்க காலத்திலும், இறுதியாக சம்பந்தன் கூட்டுச் சேர்ந்திருந்த "நல்லாட்சி அரசாங்க" காலத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளை எட்டவல்ல சட்டங்களை நாடாளுமன்றங்களில் புதிதாக இயற்ற முடியவில்லை.

மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குகந்த "நல்லாட்சி அரசாங்கத்தோடு" இணைந்து செயற்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஆர்.சம்பந்தன் கூறியிருந்த போதிலும், அத்தகைய மேற்கு நாடுகளின் நல்லெண்ணங்களையும் மறுத்து தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் யாப்புத் திருத்தங்களை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் தவறியது என்ற உண்மையை மேலும் அடிக்கோடிட்டு நோக்க வேண்டியது அவசியம்.

இந்திய அரசு சம்பந்தப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்தில் நாடாளுமன்ற விவகாரங்களை தமக்கு சாதகமாகவும் சூழ்ச்சி கரகமாகவும் கையிண்டு இந்தியாவை புறந்தள்ளி வடக்கு-கிழக்கை பிரிப்பதில் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள நீதித்துறையும் வெற்றி பெற்றிருப்பதைக் காணலாம்.

அப்படியே "நல்லாட்சி அரசாங்க" காலத்திலும் மேற்குலகத்தின் கண்களைக் கட்டிவிட்டு அரசியல் யாப்பு திருத்தம் என்கின்ற விவகாரத்தைக் கடந்து , அதைப் பொய்யாக்கிவிட்ட நாடகத்தையும் காணலாம். மேற்குலகை முன்னிறுத்தி தமிழருக்கு செப்படி வித்தை காட்டிவிட்டு, கூடவே மேற்குலககின் கண்களையும் கட்டியவாறு போர்க்குற்றம் மீதான சர்வதேச கலப்பு விசாரணை, அரசியல் தீர்வு என்பவற்றையெல்லாம் ஐ.நா மனித உரிமைகள் அவையின் முன் இலங்கை அரசாங்கம் தூள் தூளாய்க் கிழித்தெறிந்து விட்டது.

அப்படி என்றால் ஒரு திட்ட வட்டமான முடிவுக்கு நாம் வரமுடியும். அதாவது உள்நாட்டு ரீதியாக நாடாளுமன்றத்தின் வாயிலாகவோ, அன்றி வேறு சமாதான ரீதியாகவோ , அல்லது வெளிநாட்டு ரீதியான சமாதானரீதியான அனுசரணை மூலமாகவோ ஈழத் தமிழரது இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசோடு தீர்வுகாண முடியாது என்பதுதான். குறைந்தபட்சம் சுதந்திரத்தின் பின்பான காலத்தில் இருந்து இன்று வரையான முக்கால் நூற்றாண்டு கால நடைமுறையானது மேற்படி உண்மையைத்தான் அப்பட்டமாக நிரூபித்து நிற்கின்றது.

இப்பின்னணியில் நாடளுமன்றம் செல்லக் கூடிய தமிழ் உறுப்பினர்களினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்ற உண்மை முதலாவதாக புலனாகிறது. நாடாளுமன்றத்தில் பொன்னம்பலம், செல்வநாயகம், வன்னியசிங்கம் , அமிர்தலிங்கம் ஆகிய சட்ட விற்பன்னர்களும், ஜாம்பவான்களும் பேசியிராத பேச்சையா இப்போது வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசப் போகிறார்கள் ?! 

அப்படியாயின் நாடாளுமன்றத் தேர்தலை என்ன செய்யலாம்? 

1* நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தை பெற முடியும். எனவே போட்டியிட்டு தமிழ் மக்களினுடைய கூட்டுப் பலத்தை காட்டும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

2* தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதிலும் இனப்படுகொலையாளிகளைக் காப்பாறுவதிலும் வெற்றிகரமாகப் பணியாற்றியுள்ளது. தமிழ் மக்களின் திரண்ட தமிழ்த் தேசியச் சத்தியை நிலைநிட்டுவதற்கு ஏற்ற குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கித் தமிழ்த் தேசியத்தின் பேரால் ஒரு புதிய கூட்டுப்பலத்தை மாற்றுத் தலைமை பற்றிப் பேசியோர் உலகிற்குக் காட்ட வேண்டும்.

3* புதிய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனேயே புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். எப்படியாயினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் பேசி எதனையும் சாதிக்க முடியாது. எனவே அவர்கள் செய்யக்கூடிய போராட்ட முறை என்னவெனில் 5 ஆண்டு காலத்திற்கும் கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டிருந்து தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்திய வாறு சிங்கள பேரினவாதத்தை இடைவிடாது சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்துவதாகும். இதைத் தவிர நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு வேறு வேலை கிடையாது.

4* நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடுவதுதான் இவர்களுக்கான பெரும் பணியாகும். சாத்வீக வழியில் தலைநகரிலும் , மற்றும் தமிழ் பகுதிகளிலும் பலவகையான ஜனநாயக வழிப் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது போராடுவதற்கான சட்டபூர்வமான ஒரு முத்திரையாகும். இத்தகைய முத்திரைகளைப் பெற்று போராடுவதற்காகதான் தேர்தலில் நிற்க வேண்டுமே தவிர பதவி நாற்காலிகளில் அமர்ந்திருக்கவும் பணம் பண்ணுவதற்காகவுமல்ல.

ஒரு கூட்டு முன்னணியை பலமாக உருவாக்க வேண்டியது இங்கு பிரதான பணியாகும். தமிழீழ இலட்சியம் என்று கூறிக்கொண்டு யாரும் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் ஈழ விடுதலையை பெறுவதற்கான எந்தொரு வேலைத் திட்டத்தையும் எந்தொரு ஒரு கட்சியோ அல்லது, தலைவரோ நிச்சயமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழீழத்திற்கான நீண்டகால நோக்கை மனதிற் கொண்டு உடனடிக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

1* வடக்கு - கிழக்கை தாயகமாகக் கொண்ட பொது வாக்கெடுப்பின் வாயிலான அரசியற் தீர்வு. 

2* போர்க் குற்றத்திற்கு எதிரான சர்வதேச நீதிமன்ற விசாரணையும் கூடவே காணமல் ஆக்கப்படோருக்கான சர்வதேச நீதிமன்ற விசாரணையும். 

3* தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை. 

4* வடக்கு - கிழக்கில் அனைத்து வகைச் சிங்களக் குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்துதல். 

5* நிவாரண வேலைத் திட்டமாக இளம் யுத்த விதவைகளுக்கான நிதி திரட்டலை தமிழ் தலைவர்கள் மக்கள் மத்தியில் ஆரம்பித்து கிழக்கு மாகாண இளம் விதவைகளை முதன்மைப்படுத்தி பணிகளை மேற்கொள்ளல். முதல் 4 விடயங்ளில் கணிசமான அளவு உடன்பாடு காணபடக்கூடியவர்களோடு கூட்டுச் சேரலாம். 

தமிழீழம் என்ற இலட்சியத்தை ஏற்கமறுக்கும் ஒருவர் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிராகக் களமிறங்கிப் போராடத் தயாரென்றால் அவருடன் கூட்டுச் சேரலாம். அதாவாது சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தாலே தமிழீழத்திற்கான பயணத்தில் அரைவாசிப் பாதையைக் கடந்து விடலாம். இதனைத் தான் குறைந்தபட்ச பொது வேலைத் திட்டம் ( Minimum common working program) என்றழைப்பர்.

ஒரு கூட்டு முன்னணியை அமைப்பதென்றாலே அது மேற்படி குறைந்த பட்ச பொது வேலைத் திட்டத்தின் படிதான் அமைக்க முடியும். ஒருபோதும் முழு இலட்சியத்தோடு கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை. அதாவது கூட்டணி என்றாலே குறைந்தபட்ச உடன்பாடுதான். இது தொடர்பாக மகாத்மா காந்தியின் நிலைப்பாடு பற்றி இந்தியப் பிரதமராய் இருந்த ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில் பின்வமாறு எழுதியுள்ள நடைமுறை அனுபவம் கவனத்திற்குரியது.

 "திட்ட வட்டமாக நடைமுறைச் சாத்தியமற்றதான பெரும் இலட்சியப் பிரகடனங்களை ஏற்றுக் கொள்வதில் காந்திஜிக்கு ஒருபோதும் உடன்பாடு இருக்காது. குறிப்பிட்ட சூழலுக்குப் பொருத்தமான தெளிவான இலட்சியங்களில் தனது முழுக்கவனத்தையும் செலுத்துவதுதான் அவரது வழக்கம்.

"தமிழ் மக்களின் தேசியத் திரட்சியை காட்டவல்ல வகையில் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான திடசித்தத்தையும், ஆளுமையையும், வல்லமையையும் மாற்றுத் தலைமை பற்றிப் பேசுவோரால் செய்துகாட்ட முடியாது போனால் சிங்கள இனவாதம் வெற்றிக் கொடியேற்ற உதவியவர்கள் என்ற வரலாற்று அவப்பெயருக்கு உள்ளாக நேரும்.

ஆங்கிலத்தில் பின்வருமாறு ஒரு கூற்று உண்டு. "Start where you are, use what you have, do what you can." வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றதோ அங்கிருந்துதான் எமது பயணத்துக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.

நிற்கின்ற இடத்திற்கு அப்பால் மன வேகத்தால் ஆயிரம் அடி தூரம் தாண்டிநின்று அடி எடுத்து வைக்க முடியாது . வரப்போகும் இரண்டு ஆண்டு காலம் தமிழ் மக்களின் வாழ்வில் மிகவும் தீர்க்கமான காலகட்டமாய் அமைய உள்ளது. வாழ்வா, அழிவா என்ற இரண்டில் ஒன்று நிகழப் போகும் காலம் அது. ராஜபக்சக்கள் அதிகம் செயல் பூர்வமான தலைவர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளத் தவறக் கூடாது.

ஆதலால் மாற்றுத் தலைமை பற்றிப் பேசிய அனைத்து தலைவர்களும் தமக்கிடையேயான அனைத்து வகைப் பேதங்களையும் தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டு, தனிப்பட்ட சொந்த நலன்களை குறைந்தபட்சம் ஒத்திவைத்துவிட்டு, நடக்கவுள்ள தேர்தலில் தமிழ் மக்களின் ஒன்றுதிரண்ட தேசிய சக்தியை முதன்மைப் படுத்தும் வகையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

அதை உடனடியாகவே சாதித்தும் காட்ட வேண்டும். நெருக்கடியான காலம் . கால அவகாசம் சிறிதும் இல்லை .இந்த வகையில் ஒரு தமிழ்தேசிய பேரலையை மேற்படி தலைவர்கள் எனப்படுவோர் உருவாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றத் தவறுவார்களேயானால் வரலாறு இத்தகையவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

மூத்த அரச அறிவியலாளர்,
 மு.திருநாவுக்கரசு
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com