உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன்

உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன்

தன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர்.

உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது.

கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கின்றன. விலங்குகளாக வாழ்ந்த மனிதன், தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளைந்த ஆற்றல்களையும் வைத்து உலகை வெற்றிக் கொள்ளத் துவங்கினான்.

அதனால் தான் நாகரிகள் வளர்ந்தன. நாம் வாழுகின்ற வாழ்க்கை என்பது அப்படியான மனிதனின் கண்டு பிடிப்புக்கள் தான். மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த போது, மனித நாகரிகள் செழிப்படைந்தது. அதனால் தான் உலகின் சில நாகரிகங்கள், பண்பாடுகள் பெரு வளர்ச்சி அடைந்தன. இயற்கைக்கு எதிராகவும் மாறாகவும் மனிதனிடம் ஏற்பட்ட பண்பாடுகள் அவனுக்கு பெரும் பாதகங்களை தான் உருவாக்கின. அவைகள் பெரும்பாலும் அழிவுகளில் முடிந்தன. அதற்கான அறுவடைகளாக பூமி அழிவுகளையும் இடர் பாடுகளையும் தொடர்ச்சியாக எதிர்கொண்டும் வருகின்றது.

இப்போது உலகம் முழுவதும் கொரோனாதான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் ராட்சதனாக, ஒரு பொரும் கொலையாளியாக உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தத் துவங்கியுள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரையில், 110 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இலங்கையில் இரண்டாவது கொரோனா தொற்று நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். அத்துடன் இந்தியாவின் சில மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். கொரோனோ தொற்று சீனாவில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அந்த நாட்டில் நோய் தொற்று விகிதம் குறைவடைந்துள்ளது.

இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட பெருமளவான நாடுகளுக்கும் இத் தொற்று நோய் பரவியிருக்கிறது.

கனேடிய பிரதமரின் இல்லத்திற்கும் கொரோனா தொற்று நுழைந்துவிட்டது அண்மைய செய்தி. பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் தீயைப் போல இந்த நோய் உலக நகரங்களுக்கும் மக்களிடையேயும் பரவி அச்சுறுத்தலை பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

இது வரையில் 4200, பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சுமார் 24, ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனவரி மாதம் இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு, தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் பொது இடங்கள் முடங்கியிருக்கின்றன.

பாடசாலைகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு ஏப்ரல் 20வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் யாழ்ப்பாணம் கொரோனாவின் அச்சுறுத்தலைக் கண்டு போர்க்கால வாழ்வைப் போல அஞ்சுகிறது. இதில் கேலி செய்யவும், கிண்டல் செய்யவும், ஒன்றுமில்லை. உலகமே முடங்கி வரும் நிலையில், எப்படியேனும் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பும் தான் இது.

போர்க் காலத்தில், பதுங்கு குழிகளில் உணவுகளையும், அத்தியாவசியமான பொருட்களையும் நுகர்ந்து சேமித்துக் கொண்டதைப் போலவே இந்த முயற்சியும். போரும் அழிவுகளும் பசியும் பட்டினியும் ஆண்டாண்டாய் தொடர்ந்த நகரத்தின் மக்கள் இப்படி இருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கொள்ளத் தேவையில்லை.

ஈழத்தில் குறிப்பாக போர்க் காலத்தில் பல கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உயிரிழிப்புக்களும் நடந்திருக்கின்றன. ஒட்டுமொத்த இலங்கைத் தீவை சில நோய்கள் அச்சுறுத்தி இருக்கையில், போரால் இடம்பெயர்ந்து காடுகளிலும், மரங்களுக்கு கீழாயும் பதுங்கு குழிகளிலும், வாழ்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர்.

ஆனாலும் அக் காலத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகம், இவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, போர் நடக்காத இலங்கையின் பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புக்களைக் காட்டிலும் குறைவான இழப்புக்களுக்கு  வளி வகுத்தனர்.

மலேரியா, கொலரா, டெங்கு, நெருப்புக் காய்ச்சல் போன்ற பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்ட நிகழ்வுகளை போர்க் காலத்தில் வாழ்ந்த எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போதும் நோயை தடுக்கின்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் மனிதாபிமானமும் தான் அவசியமாக தேவைப்படுகின்றன. ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் கொரோனா பீதியை ஏற்படுத்துவதுடன், மக்களை ஒன்றிணைத்தல் என்ற முதன்மை பணியை செய்யும் ஊடகங்கள், இப்போது மக்களை துண்டாடுகின்ற வேலையை தம்மை அறியாது செய்கின்றன.

இந்த விசயத்தில், விசயத்திலும் முன்னுதாரணமான மாநிலமாக இருக்கிறது கேரளா. கேரளா எல்லா விசயத்திலும் முன்னூதாரணமான மாநிலம் தான்.

அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு, சிறப்பாக சிகிச்சை அளித்து, அவர்களை அதிலிருந்து மீட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. கருணையோடும், அன்போடும் அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதும் அவர்களின் மீட்சிக்கான நம்பிக்கையாக அமைந்திருக்கும் என்பதையும் உணர முடிகின்றது. எனெனில் கொரோனா இந்த உலகை துண்டாடுகின்றது. மனிதர்களுக்கு மனிதர்களை இடைவெளி கொள்ளச் செய்கின்றது. ஒருவருக்கு ஒருவர் விலகச் செய்கின்றது.

கொரோனா நோயில் சிக்கி உயிரிழப்பவர்களின் இறுதி நிமிடங்கள் பற்றி வெளியான சில செய்திகள் மனதை நடுங்கச் செய்கின்றன.

உயிரிழப்பவர்கள், தமது உறவினர்களுடன் வீடியோ அழைப்பில் மாத்திரமே உரையாட முடியும் என்பதும் அவர்களை நேரடியாக பார்த்து விடைபெற முடியாது என்பதும் எவ்வளவு கொடுமையானது?

இப்படியான மனிதமும் கருணையும் இல்லாத விடைபெறல்கள், ஒரு துயரமான இறுதி நிமிடங்கள் இனி இவ் உலகிற்கு வேண்டாம். தொட்டு தழுவி பிரியாத அந்த உயிர்களின் இறுதி அந்தரிப்பு ஒருபோதும் அடங்காது.

மனிதமே இந்த அழிவின் முன்னால் தோற்றுவிட்டது. உலகம் இயங்குவதற்கும், பண்பாடும் வாழ்வும் மேம்படுவதற்கும் அன்புதான் அடிப்படையானது. அன்பை வெளிப்படுத்த முடியாது, இணையர்களை பிரித்து வைக்கின்ற துயரத்தை கொரோனா ஏற்படுத்துகிறது.

அன்பை, உலகை, இருதயங்களை துண்டாடுகின்ற கொரோனா இந்த மானுட உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் ஆனதுதான். ஆனாலும் இந்த நோயிலிருந்து மனித சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், உலகில் இதுபோன்ற கொள்ளை நோய் யுத்தங்களிலிருந்து உலக மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் அன்புதான் கருவி. இது போன்ற அனுபவங்களின் போது மனிதநேயத்தை மேம்படுத்திக் கொள்வதுதான் இப் பூமியையும் அதன் மனிதர்களையும் பாதுகாக்கிற வழி.

நன்றி-தீபச்செல்வன்
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com