புலிகளின் வீட்டுக்குள் இருந்து புலிகளுக்கே கல்லெறியும் சுமந்திரன்!

புலிகளின் வீட்டுக்குள் இருந்து புலிகளுக்கே கல்லெறியும் சுமந்திரன்! 

தேர்தல் வந்தால் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் புகழந்து பேசுவதும், தேர்தல் முடிந்த பின்னர், புலிகளைப் பற்றி ‘இல்லாதது பொல்லாதது’ பேசுவதும் தமிழ் தலைவர்கள் சிலர் கையாளுகின்ற உத்தி.

அதைப் போலவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள சில உறுப்பினர்கள் புலிகளைப் பற்றி இகழும்போது சில உறுப்பினர்கள் புலிகளைப் பற்றி புகழ்ந்து எதிர்ப்புக்களையும் ஆதரவுகளையும் சமன் செய்து அரசியல் செய்கின்றனர்.

தமிழ் மக்களிடம் வாக்கை பெற்று பதவிகளைப் பெற்றுள்ள இதுபோன்ற உறுப்பினர்கள், தேர்தலுக்கு முன் ஒரு கருத்து, பின்னொரு கருத்தாகவும், இரட்டை நிலைப்பாடுகளையும் வகிக்கும்போது, இலங்கை அரசானது எமை கறிவேப்பிலையாக பாவிப்பதும், வடக்கொரு கதை தெற்கொரு கதையாக இரட்டை நிலைப்பாடு எடுப்பதும் கேள்விக்கு உட்படுத்த முடியாத விடயங்கள் ஆகின்றன. அத்துடன் அதைக் குறித்து கேள்வி எழுப்ப எமது தலைவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

எமது தலைவர்கள் முதலில், தமது கட்சி எது? தமது அடையாளம் என்ன? தாம் எந்த மக்களின் பிரதிநிதிகள், தாம் எந்த அடையாளத்தின் – அரசியலின் தொடர்ச்சி என்பவற்றை குறித்து சிந்திக்க வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் பேசிய ஒரு பேச்சு, அவரது குறித்த நிலைப்பாடுகள் தொடர்பிலும் இடித்துரைத்து சில கேள்விகளை முன் வைக்கின்ற தேவையை உணர்த்திற்று.

விடுதலைப் புலிகள், சகோதர இயக்கங்களை அழித்து ஜனநாயகப் படுகொலையை புரிந்துதான், தனி இயக்கமாக உருவாகினார்கள் என்று திரு. சுமந்திரன் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல, இது இன்றைய பேச்சு. இவரின் சதா பேச்சும் தொழிலும் இதேதான்.

முன்பு ஒருமுறை போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்தது என சொன்னால், விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றும் வரலாறு தெரியாமல் ஒப்பீடு செய்து, முஸ்லீம்கள்கூட சுமத்ததாக குற்றத்தை சுமத்தினார் சுமந்திரன்.

அதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கம்மீது இலங்கை அரசாங்கம், சுமத்துகின்ற பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமந்திரனும் சுமத்துகின்றார். ஏறத்தாள அரசின் குரலாகவே. பிறகு, இன்னொரு பிரபாகரன் தேவையா இல்லையா என்பதை தென்னிலங்கை தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் வந்து நடத்துகின்ற கூட்டங்களில் பேசுகின்றார். இதுவும் சில சிங்கள அரசியல்வாதிகள் தெற்கிலும் வடக்கிலும் மாறி மாறி காட்டுகின்ற முகத்திற்கு ஒப்பான செயலாகும்.

இதைப் போல இன்னொரு சமயத்தில் இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணை நடத்துகின்ற அதேவேளையில் புலிகள் இழைத்த போர்க் குற்றங்கள்மீதும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் குரலாகவே ஒலித்தது சுமந்திரனின் குரல்.

உண்மையில் இப்படி துரோகத்தின் குரலாகவே சுமந்திரன் ஒலித்தது என்பதை மாற்றுக் கருத்தின்றி எவரும் கூறுவர். அத்துடன் இது புனர்வாழ்வு சிறை தாண்டிய போராளிகளை காட்டிக் கொடுக்கின்ற செயலுமாகும்.

எல்லாம் நிற்க. விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பதவி சுகத்தை மாத்திரம் அனுபவித்த நீங்கள், இனப்படுகொலைக்கு உள்ளான, கண்ணீர் சிந்தும் இந்த இனத்திற்காக ஒரு துளி தியாகத்தையாவது புரிந்தீர்களா?

பதவி, சலுகை, பணம் என உங்களை பற்றி மாத்திரம் சிந்திக்கும், அதற்காக வாழும் நீங்கள் விடுதலைப் புலிகள் பற்றி பேச தகுதி உடையவர்களா?
அந்த வீர மறவர்களை, மானப் புலிகளைப் பற்றி பேச நீங்கள் யார்?

தமிழ் இனத்திற்காக, உயிர், உடமை, வாழ்வு, இன்பம், இளமை என யாவற்றையும் துறந்து இன விடுதலைக்காக பெரும் சாத்தியங்களை மலைகளாய் குவித்த விடுதலைப் போராளிகள் பற்றி பேசவும் விமர்சனம் என்ற பெயரில் காட்டிக் கொடுக்கவும் யார் உங்களுக்கு அதிகாரமளித்தது?

விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு வீட்டுக்குள் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கே கல்லெறிவது, உங்களுக்கு நீங்களே சவக்குழியை கிண்டும் செயலன்றி வேறில்லை.

புலிகளின் அடையாளத்துடன் அவர்களின் கைகாட்டல்களினால் ஆசனங்களை வென்று, அதில் கிடைத்த வட்டியாக, தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, விடுதலைப் புலிகளைப் பற்றி தேர்தல் காலத்தில் பேசி உறுப்பினராகிய திரு.சுமந்திரன் அவர்களே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தாமல், விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல், அவர்கள் யாரோ, நாங்கள் யாரோ என பகிரங்கமாக விலகி வரும் தேர்தலில் வெல்ல முடியுமா? அந்த திராணி உங்களிடம் உள்ளதா?
இதையெல்லாம் செய்கிற, பேசுகின்ற நேர்மை உங்களிடம் இல்லையே?

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று சொல்லிவிட்டு எந்த விதமான குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் தொடர்ந்து பதவி சுகம் அனுபவிக்கும் உங்களுக்கு ஒப்பற்ற தியாகங்களை செய்து, உலகையே மலைக்க வைத்த விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேச என்ன அருகதை இருக்கிறது?

சூடு சுரணையற்ற ஈனத்தனமானவர்களே இப்படியான அற்ப பேச்சுக்களையும் செயல்களையும் செய்வார்கள். திரு சுமந்திரன் புலிகளை இகழ்வதும், திரு சிறீதரன் புலிகளை புகழ்வதும் என்ன மாதிரியான அரசியல்? இதுவொரு அரசியல் விபச்சாரமல்லவா?

நீங்கள் தேர்தல் மேடைகளில் ஒரு முகமும், அதற்குப் பிறகு வேறு முகமும் காட்டுவதும் தெற்கில் ஒரு கதையும், வடக்கில் ஒரு கதையும் கதைப்பதன் மூலமாயும் தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு தமிழர்களை ஏமாற்றும் வித்தையை கற்றுக் கொடுக்கிறீர்கள்.

காலம், இடம், பொருள், ஏவல் அறியாத சுமந்திரனின் புலிக் காய்ச்சல் இனத்தை அழிக்கும். இன அழிப்பைக் காட்டிலும் கொடியது. சுமந்திரனை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்து அவருக்கு ஓய்வை வழங்காவிட்டால், தமிழர்கள் இன்னுமின்னும் பின்னோக்சிச் செல்வதும் அழிவுகளை சந்திப்பதும் உறுதி.

நன்றி - தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.
(02.03.2020)
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com