குமுதினிப் படகுப் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைகளுடன் 🙏

குமுதினி படகு படுகொலை..!

1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும், நெடுந்தீவிற்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் ரணங்கள், தமிழீழக் கடலில் ஆறாத  ஈரநினைவு நாள் இன்று.

நீதி சாகாது, என்று நம்பும் எங்களுக்கு, நீதி மறுக்கப்பட்ட, அல்லது வழங்கப்படாத, ஒரு துயரமான வரலாற்றுப் பதிவு.

மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்பட்டதாக, 35 ஆண்டுகள் கழிந்த பின்னரும் உள்ள விவகாரம்.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறை முகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட போது, பொது வேலைகள் திணைக் களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப் படகு, அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக் கடலில் வழிமறிக்கப்பட்டது.

இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச் சொல்லி, அதை நிறுத்திய பின்னர் 6 கடற் படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் குமுதினிப் படகில் ஏறினர்.

படகின் பின் புறம் இருந்த பயணிகளை, படகின் முன் பக்கம் செல்லுமாறும் மிரட்டினர், அவர்கள் அனைவரும் சென்று விட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப் பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி, (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.

குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம், கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும், அந்த படகின் நடுப் பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது, செத்தவர்கள் போல் கிடந்த மக்களும் உண்டு.

இச் சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதி செய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

ஒருவர் நுழை வாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தை முதல், வயோதிபர்களை வரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இச் சம்பவத்தில் இறந்தவர் போல் கிடந்த ஒரே, ஒரு படகுப் பணியாளர் மட்டும் உயிர் தப்பிக் கொண்டார்.

இப் படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ். போதனா வைத்திய சாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவ மனையால் சிறிலங்கா காவல் துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக, சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர். உடனடியாக மருத்துவ மனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர்.

உயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவ மனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். இரு பெண்களைத் தவிர, ஏனையோர் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்று விட்டனர்.

படகுப் பயணிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேடித் திரிந்தனர். எதுவித வி சாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற் படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சாட்சிகளை அழித்துக் கொள்வதிலும், தேடிக் கொள்வதிலும் சிறிலங்கா கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வந்தனர்.

போர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40, 50 கடந்தாலும், போர்களை மீளவும் உயிர்பெற்று, பெரும் விளைவுகளையும், பரபரப்புகளையும், ஏற்படுத்தும். அதே போல, விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற் படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும்.

சிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

மனச் சாட்டிகளை உலுப்ப வேண்டும். இதற்கு இதில், உயிர் தப்பி இன்று அச்சம் காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

சாந்தலிங்கம் அவர்களின் வாக்குமூலம்!

குமுதினிப் படகினுள் எம்மினிய உடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேன் என துணிந்து மனித உரிமைச் சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம் அவர்கள்.

தன் அன்பு மனைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும், உற்றவரையும், ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்ட போது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டு விட்டன.

நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது. பச்சைக் குழந்தையைக் கூட மிச்சம் விடாமல் வெறியாடிக் கொன்ற, கொடியவரின் முகத்திரையை நிச்சயம் தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்.

சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு, காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம், 70பது வயது தெய்வானையோடு, 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும், 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர்.

கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர் பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.

ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com