சுமந்திரன், ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்கவில்லை என கூறுவது அவரது உரிமை! அதேவேளை....

சுமந்திரன், ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்கவில்லை என கூறுவது அவரது உரிமை..........!  அதனை நான் ஏற்கின்றேன். அதே போல், ஆயுதப் போராட்டம் எம் மீது திணிக்கப்பட்டதே தவிர, நாம் விரும்பி ஏற்றதல்ல என கூறுவது எனது உரிமை......!  இதனை சொல்வதற்கு எனக்கு நியாயமான அரசியல் காரணம் உண்டு, ஏன், எனில் அவர் தமிழர்களை பிரநிதித்துவபடுத்தும் அரசியல் வாதி என்ற வகையில், தனது கரங்கள் இரத்த கறைபடியாத சுத்தமான கரங்கள் என்று, முன்னாள் போராட்ட இயக்கங்களில் இருந்து வந்த அரசியல் தலைவர்களை நோக்கி சொல்லுவது வழக்கம்.

அவர் மட்டுமல்ல, 2010 க்கு முன்னர், தாமுண்டு தம், குடும்பம் உண்டு என வாழ்ந்து விட்டு, நடந்த போராட்டம் பற்றிய பிரஞ்சை எதுவுமற்று வாழ்ந்து விட்டு, தமது ஓய்வு காலத்தில் புதிதாக அரசியல் பேச ஆரம்பித்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து தான் பதில் கூறுகின்றேன், ஆயுத போராட்டம் எம் மீது திணிக்கப்பட்டதே தவிர, நாம் விரும்பி ஏற்றதல்ல என.

எமது ஆயுத போராட்டம் தவறு என்றால் உலகில் பல நாடுகளில், அடக்கு முறைகளுக்கும், இன வெறிக்கும் எதிராக நடந்த ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் தவறு என்றாகிவிடும். ஏன் ஹிட்டலர், முசோலினி போன்றவர்களுக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டு படைகள் போராடியதும் தவறு என்றாகிவிடும். 

அடுத்து தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என கூறியது, விடுதலை புலிகளின் ஆசீர்வாதத்துடன் (கவனிக்க ஆசீர்வாதம்) உருவாக்கப்பட்ட தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு கூறுவது, நிட்சயம் எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை புரிந்து இருக்க வேண்டும்.

ஏன், எனில் சரியோ? தவறோ? ஐம்பதினாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளின்  போராளிகள் இறந்திருக்கின்றனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என, குறைந்தது ஐந்து லட்சம் பேர்களாவது இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை விடுதலை புலிகள் என்பது மிகவும் உணர்சி பூர்வமான விடயம். வாக்கு தேர்தல் அரசியலில் நிற்கும் ஒருவருக்கும் அவரது கட்சிக்கும் ஐந்து லட்சம் என்பது மிகப் பெரிய வாக்கு வங்கி.

பேட்டியாளர் எப்படியும் கேள்விகள் கேட்பார், எனவே பேட்டியாளர் அப்படி கேட்டுவிட்டார் என பேட்டியாளர் மீது குறை கூறமுடியாது. பதில் கொடுக்கும் அரசியல்வாதி எப்படி, தனது வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ளும் அதேசமயம், ஆயுத போராட்டம் தொடர்பான தனது உள் மனக்  கிடக்கை, நெளிவு சுழிவுகளுடன் சொல்வது என்பதிலேயே அவரது திறமை தங்கியுள்ளது.

அவரை தொடர்ந்து அவதானித்து வருகின்றவன் என்ற வகையில், அந்த பேட்டிக்கான அவரது பதில்கள் என்பது, சமீபத்தில் பிரதமர் மகிந்த அவர்களை சந்தித்ததும், இதுவரை யுஎன்பியுடன் இணைந்து மகிந்தவை எதிர்த்த நிலைப்பாட்டில் இருந்து மாறி ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டதே அல்லாமல், வேறு எதுவும் இல்லை.

சிக்கல் வரும் என்று தெரிந்தும், புலிகளுக்கு எதிரான கருத்தை சொல்வதன் மூலம் மகிந்தவினதும், அவருக்கு ஆதரவளித்த சிங்கள மக்களினதும் மனதினில் இடம் பிடிக்கவே முயன்றிருக்கின்றார். அதனால் அவருக்கும் அவர் கட்சிக்கும் எதிர் காலத்தில் பல லாபங்கள் உண்டு. அடுத்து எனது சில நண்பர்கள் , சுமந்திரன், தான் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என கூறுவது அவரது நேர்மையை காட்டுகின்றது என்று சிலாகிக்கின்றார்கள். இதேபோல், அத்தனை அவதூறுகள், சேறடிப்புக்கள், பழிசொற்கள் அத்தனைக்கும் மத்தியில், ஆயுதப் போராட்டத்தில் நாங்களும் பங்குதார்ர்களாக இருந்தோம் என்று கூறும் எம்மை போன்றவர்களின் நேர்மையை சிலாகிப்பீர்களா?

புலிகள் வலுவாக இருந்த காலத்தில், மேற்கு நாடுகளுக்கு தமது நலன்களை தமிழர்கள் மத்தியில் பிரதானப்படுத்துவதற்கு பாலசிங்கம் அவர்களே சிறந்த தேர்வாக இருந்தது. புலிகளுக்கு பின்னர் அந்த நாடுகளின் தேர்வு சுமந்திரனாகவே இருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு வரைபை கொண்டு வந்த போதும்,
2015,ல் மகிந்தவை வீழ்த்தி நல்லாட்சி அரசை உருவாக்க முற்பட்ட போதும், சுமந்திரனுக்கு போர்குற்ற விசாரனைகள் எந்த போக்கில் செல்லும் என்பது A- Z தெளிவாகவே தெரியும்.

2014, வடமாகாண சபை தேர்தலுக்கானதும், 2015 பாராளுமன்ற தேர்தலுக்குமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தெளிவாக போர்குற்ற விசாரனைகள் பற்றியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு உழைப்போம் என்றும் தெரிவித்து இருந்தது. அதனை வரைந்தவர்களில் முக்கியமான ஒரு நபர் சுமந்திரன். ஆனால், இரு தேர்தல்களும் முடிந்து மகிந்த அகற்றப்பட்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்ட பின்னர் போர்குற்றம் தொடர்பான அவரது பேச்சு நேர் எதிராக மாறிவிட்டது.

ஐநா மனித உரிமை சபையில் இலங்கை தொடர்பான போர் குற்ற விசாரனைகள் எந்த வகையில் செல்லும் என A-Z நன்கு தெரிந்த சுமந்திரன் உண்மை நிலையை 2015 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களிடம் கூறியிருப்பாரேயானால் அவரை நேர்மையானவர் என நான் கூறுவேன். அப்படி அவர்கள் உண்மையை கூறியிருந்தாலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்திருப்பார்கள். காரணம் 2010 ஜனாதிபதி தேர்தலில் முள்ளிவாய்கால் அவலத்துக்கு காரணமான மும் மூர்திகளில் ஒருவரான சரத் பொன்சேகா. அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு கொடுத்த காரணத்துக்காக தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.

ஆகையால் போர்குற்றம் தொடர்பாக நடைமுறை சாத்தியமான உண்மை நிலையை தமிழ்மக்களுக்கு கூறியிருந்தாலும், 2015 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் த.தே. கூட்டமைப்புக்கே வாக்களித்திருப்பார்கள். சிலசமயம் ஒரு ஆசனம் குறைவாக வந்திருக்கலாம். மக்களின் வாக்குக்களை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, வெற்றி பெற்ற பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக செயற்படுவதும், வியாக்கியானங்கள் கொடுப்பதும் ஓர் நேர்மையான அரசியல் வாதிக்கு அழகல்ல.

இது மக்களின் அடிப்படை ஐனநாயக உரிமை மீறல். இந்த ஒரு காரணத்துக்காகவே நான் சுமந்திரனை கடுமையாக எதிர்கின்றேன், மற்றப்படி தற்போதைய கால சூழலுக்கு ஏற்றபடி, ஆட்சியாளர்களுடன் இணங்கி செயற்படுவதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதிலும் தமிழ்க் கட்சிகள் இருபெரும் சிங்கள கட்சிகளுக்கு இடையில் தம்மை சமதூரத்தில் வைத்து காரியமாற்ற வேண்டும். வைத்தால் குடும்பி அடித்தால் மொட்டை என்ற நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு எதையும் பெற்று கொடுக்காது .

அன்பே இறைவன்,
-யோவதியார்.
12.05.2020.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com