தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்!
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்ததின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்களில், இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதிகளைத் தலைவர் சந்திக்கின்றார். சந்திப்பு இரவு பொழுதில் நடக்கின்றது. சிறு துளியும் பதட்டமின்றிக் கண்களில் ஞானத் தீட்சை பெற்றவராய் ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்துடிப்பு.
தலைவரின் உரை ஆரம்பமாகிறது..........
சில வழமையான கருத்துக்களின் பின்னர் .......
"தினையான் குருவி கண்டிருக்கியளோ, வேலிகளில் பூச்செடிகளில் வயல் வெளிகளில், விநாடிக்கு இருமுறை வாலை ஆட்டி சிலிர்ப்பிக்கொண்டு தினைகள் சேகரிக்குமே, தினையான் குருவி.
தினையான் குருவி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான். ஆனால், வெயில், மழை, புயல், பாம்பு, காற்று, இது போன்ற தன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்கின்ற ஏற்பாடுகளை சிறுக, சிறுக ஆனால், கச்சிதமாகவும், பிசிரின்றியும், தன்னம்பிக்கையோடும் செய்யும்.
நீங்களும் தினையான் குருவிபோல இருங்கள்.
போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மை தான் ஆனால், தினையான் குருவிகளைப் போல, எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீளக், கட்டியெழுப்புவோம். எதற்கும் அஞ்சாதீர்கள், நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்த போதும், நமது தளராத மனவுறுதி தான், போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. அதே மனவுறுதியுடன் இருங்கள்.
பாரதி சொன்ன, அக்கினி குஞ்சுகள் போலவும், இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே, என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள், நம்பிக்கை இழக்காதீர்கள், கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத் தாண்டவம் புரியும், சிங்கள பேரினவாதக் காட்டை அழிக்கப், பொந்திடை வைக்கும், சிறு அக்கினி குஞ்சு காணும்.
ஏன், என்றால். உண்மையும் நீதியும் வரலாறும் என்றானாலும் நமது பக்கமாய் தான் இருக்க முடியும். உடலை மட்டும் கொன்று, விடுதலை வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு, ஒரு போதும் அஞ்சாதீர்கள.
தினையான் குருவிகள் போலவும், அக்கினி குஞ்சுகள் போலவும், நீங்கள் இயங்கினீர்களென்றால், விடுதலைப் போராட்டம் நிச்சயம் மீண்டும் துளிர்க்கும்.
பீனிக்ஸ் பறவைகள் போல, அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த் துடிப்புடன் எழுவோம்.
நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல்லாம் அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கின்றோம் என்று சொல்லித் தான் விதைத்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும், எவ்வளவோ இடர்களை தாங்கி எம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.
குறிப்பாக, நெருக்கடியான இன்றைய சூழலிலும் கூட, நம்மோடே உணர்வு கலந்து நிக்கிற மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்து விட்டார்கள். அவர்களின் துயரத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய ஏலுமோ, அனைத்தையும் செய்யுங்கள்.
நம்மிடம் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள், எல்லா வற்றையும் மக்களுக்கு கொடுக்கும்படி தளபதிகளுக்குச் சொல்லி விட்டேன்.
தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமைகள் செய்து அவலம் தந்தவர்கள் பலருண்டு ஆனால், ராஜபக்சே சகோதரர்களைப் போல, கொடுமை செய்தவர் எவருமில்லை. இவர்கள் தேர்தலில் வென்று ஆட்சிக்குவர விடுதலைப் புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றசாட்டு நீங்கள் அறியாதது அல்ல.
பின் நோக்கி பார்க்கையில்.... அக் குற்றச் சாட்டு உண்மைதான், இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் தனது கொடூர மூர்க்கத் தனத்தினால், தமிழ் ஈழத்திற்கான புறசூழலை ராஜபக்சே அரசு உருவாக்கும் என இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால், இந்தியா எமக்கு எதிராய் இத்துணை இறுக்கம் காட்டும் என்றும், ராஜபக்ஷே அரசுக்கு முழுப் பக்கபலமாய் இருக்கும் என்றும், இயக்கம் எதிர் பார்க்கவில்லை.
எமது மக்களின் வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என்பதை இப் போதும் நாம் உணர்ந்திருக்கின்றோம். சிங்கள பேரினவாதம் எத்துணை கபடமும், போலித்தனமும் கொண்டது என்பதை, இந்தியா உணர்ந்து வருத்தபடுகின்ற நாள் நிச்சயம் வரும்.
இப்ப, இங்க நிக்கிற உங்களை மட்டுமல்ல, இயக்கத்தின் எல்லா போராளியையும், என் சொந்த பிள்ளைகளாகத் தான் வளர்த்தேன். பல்லாயிரம் போராளிகளை நாம் இந்த விடுதலைக்கு ஈகம் செய்தோம். அதைவிட, பெரியது எம் மக்கள் செய்த தியாகங்கள் எதையும் நாம் மறக்க முடியாது.
அந்த சகல மக்களினதும் நினைவுகளின், புனித சுமையை உங்க தோளில் தான் நான் நம்பிக்கையோடு வைக்கிறேன். உயிரைக் கொடுக்க அச்சமில்லை என்ற தியாகமும் உறுதியும் தான், போராட்டத்தை வளர்த்தது அதே, உறுதியுடன் முன் செல்லுங்கள், வரலாறு நமக்காக மீண்டும் வரும்.
இரு நூறு வருடங்களுக்கு முன், பண்டாரக வன்னியன் இதே நிலத்தில் தான் விடுதலைப் போர் புரிந்தார், இதே முல்லைத்தீவில் வெள்ளைகாரனுடைய கோட்டையை தகர்த்தார். ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, கற்சிலை மடுவில் வீர காவியமானார். அன்று தரையில் விழுந்த பண்டார வன்னியனின், வாள் மண் முடி கூர் மழுங்கி துருப்பிடித்து இனிமேல், யாரும் பயன்படுத்த முடியாது எனுமளவிற்கு ஆகிக் கிடந்தது.
தமிழனின் வீரத்தை பறைசாற்றிய வீரத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்த அந்த வாளை, இருநூறு ஆண்டுகளாக ஒருவரும் தொடவுமில்லை, ஏறெடுத்துப் பாக்கவுமில்லை.
துருப்பிடித்துக் கூர் மழுங்கிக் கிடந்த அந்த வாளை, இருநூறு ஆண்டுகளுக்குப் பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவுடன் கையிலெடுத்தது.
இலட்சிய உறுதி இடை விடாது பயிற்சி, தியாகம், என நினைத்துப் பார்க்க முடியாத ஈகங்களால், அந்த வாளைப் , பட்டைதீட்டி மேலும், கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக அதை உயர்த்தியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே, அந்த போர்வாள், அது உறையில் கிடக்கவுமில்லை, தரையில் விழவுமில்லை, இனியும் உயர்த்தி பிடித்த படி களமாடுங்கள்.
தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக நான் இதை தருகின்றேன். இனி இது கீழே விழக் கூடாது. துருப்பிடித்துவிடக் கூடாது. அந்த புனித கடமையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
இதே, மண்ணில் 15ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்திக் காட்டிய வரலாறு, மீண்டும் வரும். தினையான் குருவிகளைப் போல, அமைதியான உழைப்பும் அக்கினி குஞ்சுகளை போல, அகத்தே நெருப்பும், சுமந்து தணிந்து போகாத விடுதலைத் தாகத்துடன், இயங்கினீர்களென்டால், புலிகளின் படை மீண்டும் முல்லைதீவில் தரையிறங்கும்.
நான் உங்களோடு தான் இருக்கின்றேன்.
புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்..
தேசியத் தலைவர்