முள்ளிவாய்க்காலுக்கு பின்னான அரசியல், ஈழத்தமிழரின் இதுவரையான அரசியல் பயணத்தின் மாபெரும் சரிவு.

மே 18 ஆனந்த விகடன் பேட்டியில் இருந்து.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னான அரசியல்,  ஈழத்தமிழரின் இதுவரையான அரசியல் பயணத்தின் மாபெரும் சரிவு.

மலை உதிர்ந்து மண்ணாகிப் போவது போன்ற சரிவு. ஒருவேளை விடுதலைப் புலிகள் போரில் தோற்று, போராட்டத்தை காப்பாற்றுவது என்ற தீர்மானத்தை எடுத்திருந்தால் இன்றைய கையறு நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

தமிழர்களின் விடுதலை அரசியல் என்ற நீண்ட பயணத்தில் விலை போகாத, அதிகாரத்துக்கு பணியாத தலைமைத்துவம் என்ற விடுதலைப் புலிகளுக்கான பெருமையே அவர்கள் இத்தகைய தீர்மானத்தை எடுக்க தடையாகவும் இருந்தது.

புலிகளுக்கு பின்னான அரசியல் தலைமைத்துவம் உண்மையில் இதுவரையான அரசியல் பயணத்தை அதன் தொடர்ச்சியாக எடுத்து செல்ல தவறிவிட்டன. புலிகள் இனப் பிரச்சனையை உள்நாட்டு விவகாரம் என்ற நிலையிலிருந்து பிராந்திய நிலை கடந்து சர்வதேச அரசியலின் பேசுபொருளாக  மாற்றியிருந்தனர்.

புலிகளுக்குப் பின் வந்த தலைமைத்துவம் புலிகள் -அரசு என்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையை,  சர்வதேச அரங்கில் இணைத் தலைமை நாடுகளின் அனுசரணையில் தொடர்வதாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பும் மக்களின் ஜனநாயக  பிரதிநிதிகள் என்ற தகுதியும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அவர்கள் அதிகார சக்திகளின் தரகு அரசியல் தலைமையாக மாறினார்கள்.

விளைவாக, இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தறிகெட்டு நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன.

விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையின்  மாயை அகற்றி,  உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு   வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்திற்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விமோசன அரசியலுக்கு  தலைமை தாங்க முடியாது.

தக்க அரசியல் இயக்கத்தை கட்டி வளர்க்கவும் முடியாது. அறிவு, அர்ப்பணம், அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத் தந்துவிடவும் முடியாது.

அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட  தலைமைத்துவமாகவும் இருக்க  நியாயம் இல்லை. இவை இறக்குமதி சனநாயக நாசகாரப்  பொறி முறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தரகு தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.

என்றோ ஒரு நாள் இலங்கையின் மக்கள் சமூகங்கள்  இன மோதலின் பின்னாலுள்ள சர்வதேச இழி அரசியலை புரிந்துகொள்ளும், உண்மை உணர்ந்து விழித்துக் கொள்ளும் ஒரு அரசியல் புறநிலை தோன்றலாம்.  வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை. 

அதுவரை தமிழினம் அதிகார சக்திகளின்  அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். தேசிய பிரக்ஞ்ஞை பூர்வமான  ஆன்ம சக்தியை சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக  கண்டிருக்க வேண்டும்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com