திரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா

தாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டவர். உங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியோ, ஏன் இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் உருவானது எதற்காக என்பது பற்றியோ போதிய விளக்கமோ அறிவோ இல்லை என்பதை உங்களது சமீபத்திய நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினரான காலத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்வதிலும்,நாடாளு மன்றத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதிலும் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வந்துள்ளீர்கள் யூ.என்.பி க்கு முண்டு கொடுப்பீர்கள். அடுத்து ராஜபக்சேவுக்கு முதுகு சொறிவீர்கள். இவற்றைத்தான் நீங்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போன்றும் உங்கள் பதில்கள் அமைந்துள்ளன.

தமிழரசுக் கட்சியின் வரலாறு, தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவைகளைப் பற்றிய வரலாறுகளை முதலில் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து வயதிலிருந்து கொழும்பில் சிங்களவர்களோடு கட்டிப் புரண்டு வாழ்ந்த உங்களுக்கு றோயல் கல்லூரியில் கற்ற உங்களுக்கு எங்களது உரிமைப் போராட்டங்கள் பற்றியோ, அவை ஏன் ஆரம்பிக்கப்பட்டன என்பது பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொழும்புத் தமிழ் உயர் குழாமில் வாழ்ந்த உங்களுக்கு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்பா 1958 இல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்செயல்கள், இனப்படுகொலை என்பன நிகழ்த்தப் பட்டன்? அதன் பின்பு 77,83 இனப்படு கொலைகளின் போது கூட நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் மேட்டுக்குடிச் சிங்களவர்களின் பாதுகாப்பில் இருந்திருக்கலாம்.

முதலில் ஆயுதப்போராட்டம் ஏன் உருவானது என்பதை ஒழுங்காக தெரிந்துகொள்ள முயலுங்கள். சிங்களத்தலைமைகளோடு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு அவைகளெல்லாம் கிழித் தெறியப்பட்ட போதுதான் தென்னிலங்கையில் நிகழ்ந்த வன் செயல்கள் தமிழீழப் பகுதிகளுக் குள்ளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அகிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்று, சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்ட போதுதான் வேறு வழியின்றி சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஆயுதங்களிலிருந்து, தமிழ் மக்களைப் பாது காப்பதற்காகத் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் எந்தத் தொடங்கினர்.

உங்கள் நேர்காணலில் நீங்கள் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே உங்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சி என அனைத்துத் தரப்பிலிருந்தும் உங்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியது.

செல்வம் அடைக்கல நாதனுக்கு நீங்கள் அளித்த பதிலில் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகள் பற்றி ஏதோ குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஆம்! ஆரம்பத்தில் ஒவ்வொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கொலைகளைச் செய்தனர். மறுப்பதற்கு இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கமும் சிங்களப் பொலிசார் மற்றும் விடுதலைக்கு குந்தகம் விளைந்த வர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இவை அனைத்தும் அனைவர்க்கும் தெரிந்திருந்தும் தமிழ் மக்களின் எதிர்கால  நலனைக் கருத்தில் கொண்டே பழைய கசப்புணர்வுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் 2001 இல் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதைத் தொடர்ந்து 2004 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மக்கள் பெருமளவில் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 22 பேர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

2010இல் பின்கதவு வழியாக யார் மூலமாகவோ தமிழரசுக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தத் தேசியக் கூட்டமைப்பில் கொலை காரர்கள் இருக்கின்றார்கள் என்பது உங்கள் கண்களில் படவில்லையா?

கடந்த 10 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சியினரோடும் இணைந்து செயற்பட்டபோது அவர்கள் கொலை காரர்களாக உங்களுக்குத் தோன்ற வில்லையா? சம்பந்தன் அவர்கள் என்னோடு கலந்து பேசி எனது ஆலோசனையைக் பெற்ற பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்வார் என்று கூறினீர்களே, அந்த சம்பந்தன் அவர்களே நீங்கள் தெரிவித்த கருத்து உங்களது தனிப்பட்ட கருத்து-சொந்தக் கருத்து. அதைக் கூட்டமைப்பின் கருத்தாகவோ தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது ஒரு விடயத்தை நீங்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது கொலை காரக் கட்சிகள் அங்கம் வகிக்கும், கொலைகார தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பில் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்காத, ஏற்றுக் கொள்ளாத, அகிம்சையின் பிறப்பிடமான புத்தரின் மறு அவதாரமான நீங்கள் அங்கம் வகிப்பது உங்கள் கொள்கைக்கே முரணானதாகும்.

தொடர்ந்தும் நீங்கள் அந்த அமைப்பில் இருக்கக் கூடாது. நீங்கள் இப்பொழுது செய்யக் கூடியது உங்களுக்கு அருகிலுள்ள மெதடிஸ்த தேவாலயத்திற்குச் சென்று இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த பாபச் செயலுக்காக பாவமன்னிப்புப் பெற்றுக் கொள்ளுங்கள்.

5 வயதிலிருந்து சிறு பராயத்திலிருந்து சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்ந்த உங்களுக்கு பல நூற்றுக் கணக்கில் சிங்கள நண்பர்கள் இருப்பார்கள். சிகப்புச் சட்டை போட்டுக் ஜே.வி.பி சகோதர்களோடு ஊர்வலம் போன உங்களுக்கு அவர்களோடு கூட சேர்ந்து செயற்பட முடியும்.

72 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சிங்கக் கொடியையும்,சிங்கள தேசிய கீதத்தையும் ஏற்றுக் கொண்ட நீங்கள் சிங்கள மக்களோடு ஐக்கியமாகி சிங்கள- முஸ்லீம்- தமிழ் மக்கள் வாழ்வதற்கு வசதியாக புதிதாக 'சிங்கள- தெமள- முஸ்லீம்' சந்தானய என்ற பெயரில் ஒரு கட்சியை உருவாக்குங்கள்.

ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் உங்கள் பின்னால் அணி திரண்டு வர ஆயத்தமாக இருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் ஒரே தவலவரென மார்தட்டிக் சொன்னீர்களோ அவரே உங்களுக்கு எதிராக கருத்தைச் சொல்லிவிட்டு பிறகு அவரின் தலைமையின் கீழ் நீங்கள் தொடர்ந்தும் இயங்குவது உங்கள் தன்மானத்திற்கு இழுக்காகும்.

அவர்கள் உங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பதாக மானஸ்தர் நீங்கள் விலகிச் செல்வீர்கள் என் நம்புகின்றேன்.

ஜெயவேவா!
-தேவர் அண்ணா.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com