தமிழ் மக்களுக்கு இப்போது யார் தேவை?


2009இல் யுத்தம் பேரழிவுகளுடன் முடிவுற்ற போது, அன்றைய சூழலில் கூட்டமைப்பு ஒரு மரக்கட்டை போன்றுதான் காட்சியளித்தது. நமது மக்களும் அதனைப் பற்றிக் கொண்டனர்.

அந்த மரக்கட்டை தங்களை கரைசேர்த்துவிடும் என்று மக்கள் நம்பியதிலும் தவறில்லை. அந்த நம்பிக்கையில்தான் 2010 தேர்தலில் கூட்டமைப்பின் கதையை நம்பி, யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவிற்கு நமது மக்கள் வாக்களித்தனர். அதே ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கண்ணை மூடிக் கொண்டு, வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தனர். ஆனால் நமது மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஏதாவது நடந்ததா?

2015இல் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த வேண்டும் – நாங்கள் புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவோம் – அரசியல் தீர்வை தருவோம்- எங்களை நம்புங்கள் – என்னும் கோசங்களுடன் மீண்டும் கூட்டமைப்பு உங்கள் கதவுகளை தட்டியது. நீங்களும் வழமைபோல் கண்ணை முடிக் கொண்டு நம்பினீர்கள். நீங்கள் நம்பியது நடந்ததா?

பழைய குருடி கதவை திறடி என்பது போல, மீண்டும் தென்னிலங்கையில் இரண்டு சிங்கள கட்சிகளும் மல்லுக் கட்டின. கூட்டமைப்பு தேவையில்லாமல் சிங்களச் சண்டைக்குள் மூக்கை நுழைத்து, மீண்டும் தமிழ் மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்தது. இதனால் புதிய அரசியல் யாப்பு – அரசியல் தீர்வு – காணாமல் போனோருக்கான தீர்வு அனைத்தும் புஸ்வானமாகியது. ஆனால் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு கிடைக்க வேண்டிய சகல வசதிகளும் கிடைத்தது.

சம்பந்தனுக்கு கொழும்பில் வீடு கிடைத்தது. சில தலைவர்களின் பிள்ளைகளுக்கு உயர் பதவிகள் கிடைத்தன. ஆனால் கண்ணை முடிக்கொண்டு நம்பிய நமது மக்களுக்கு என்ன கிடைத்தது?

இப்போது மீண்டும் ஒரு தேர்தல்!

தமிழ் மக்களுக்கு முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று, வழமைபோல் கண்ணை மூடிக்கொண்டு, வழமைபோலவே (பழக்கதோசம்) கூட்டமைப்பை நம்பி வாக்களித்துவிட்டு – மீண்டும் ஏமாறுவது. இரண்டு, கடந்தகால அனுபவங்களை அலசி ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிப்பது.

இந்த இரண்டில் நீங்கள் எதனை தெரிவு செய்யப் போகின்றீர்கள்? வழமைபோல் ஏமாறப் போகின்றோம் – என்று எவரேனும் கூறினால் அவர்களுக்கு எவராலும் உதவ முடியாது ஆனால், சிந்தித்து செயற்படப் போகின்றோம் – எங்களாலும் சிந்திக்க முடியும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் உதவ முடியும். அவர்கள் தொடர்பில் தான் இந்தக் கட்டுரை கரிசனை கொள்கின்றது.

இம்முறை வாக்களிப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் தங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான் – அதாவது, இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானவர்கள் யார்?

இன்றைய சூழில் எப்படியானவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்?

இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். 2010இல் வாக்களித்தோம், 2015இல் வாக்களித்தோம் ஆனால் எதுவும் நடக்கவில்லை – அவ்வாறாயின் மீண்டும் தோல்வியடைந்தவர்களுக்கும் – ஏமாற்றியவர்களுக்கும் வாக்களிப்பதில் என்ன பயன்? இரண்டு தடவைகள் நாடாளுமன்றம் சென்று செய்ய முடியாமல் போனதை, இனி எவ்வாறு அவர்களால் செய்ய முடியும்?

சிங்கள மக்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் எந்தளவிற்கு முதிர்ச்சியுடனும் புத்திசாலித்தனத்துடனும் சிந்திக்கின்றனர்! அரைகுறையாக படித்த சில தமிழர்கள், ஒரு காலத்தில், சிங்கள மக்களை மூடர்கள் என்று பரிகசித்தனர் ஆனால் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் யார் உண்மையில் மூடர்கள் – அவர்களா அல்லது நாங்களா?

சிங்கள மக்கள், 2015இல் மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் ஆனால், அவர் தலைமைக்கு தகுதியற்றவர் என்று உணர்ந்தவுடன், தங்களை மாற்றிக் கொண்டனர். கோட்டபாயவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். தங்களுக்கு ஒரு உறுதியான தலைவர் தேவையென்று சிங்கள மக்கள் சிந்தித்ததன் விளைவுதான் கோட்டபாயவினால் தனித்து சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றிபெற முடிந்தது.

மறுபுறமாக நீங்கள் தெரிவு செய்தவர்களை உற்றுப் பாருங்கள் – ஆகக் குறைந்தது, அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் உறுதியாகப் பேசக் கூட முடியவில்லை. இப்படியானவர்களையா இம்முறையும் நாடாளுமன்றம் அனுப்பப் போகின்றீர்கள்!

2010இல் நமது மக்களால் இது தொடர்பில் சிந்திக்க முடியாமல் இருந்தது உண்மை, காரணம் ஒரு பேரழிவு. 2015இல் சிந்திப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் அடுத்தது யார் என்னும் கேள்வி இருந்தது ஆனால் இம்முறை நிலைமை அப்படியில்லை. உங்களுக்கு முன்னால் தெரிவுகள் உண்டு.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனியாயங்களுக்கு நீதி வேண்டும் என்று தொடர்ச்சியாக உரத்துப் பேசிவரும் நீதியரசர் விக்கினேஸ்வரன் இம்முறை உங்களுக்கு முன்னால் ஒரு தெரிவாக இருக்கின்றார். அவரோடு ஒரு அணியினர் உங்களின் முன்னால் இருக்கின்றனர். அவர்களில் சிறந்தவர்களை நீங்கள் தெரிவு செய்யலாம்.

விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் சென்றால் உடனே தமிழ் மக்களின் வாழ்வில் பாலாறு, தேனாறு ஓடுமென்று இந்தக் கட்டுரை வாதிடவில்லை.

போலியான நம்பிக்கைகளை கொடுப்பது எனது நோக்கமல்ல. ஆனால் விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வதில் ஒரு முக்கியத்துவம் உண்டு.

அது தொடர்பில் தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அந்த முக்கியத்துவம் மற்றவர்களுக்கில்லை ஏனெனில் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. அவ்வாறான ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது அது உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் உண்ணிப்பாக நோக்கப்படும். தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக, இதுவரை ஒரு நீதியரசர் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை. அந்த வரலாற்றை உருவாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பம் இப்போது தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது.

அதே போன்று, கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களின் போதும், கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தது போலில்லாமல், இன்றைய சூழலில் யார் எங்களுக்குத் தேவையென்னும் தெளிவான புரிதலுடன், விசாரிப்புக்களுடன் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம், தமிழ் மக்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

சிங்கள மக்கள் தங்களுக்கு ஒரு உறுதியான தலைவரை பெற்றிருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் உறுதியற்ற, ஆளுமையற்ற, ஒழுங்காக தமிழர்தம் வாதங்களை முன்வைக்கத் தெரியாதவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் அது பெரும் அனர்த்தமாகும். அது அனர்த்தம் மட்டுமல்ல அரசியல் அதர்மமும் கூட.

தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே அதர்மம் புரிந்துவிடக் கூடாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் காலத்தை தவற விட்டுவிட்டு, பின்னர் கவலைப்படுவதில் பயனில்லை.

இந்தத் தேர்தல் ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட வேண்டும். இல்லாவிட்டால் இனிவரப் போகும் காலத்தில் இலங்கைத் தீவில், தமிழ் அரசியல் என்று ஒன்று இருக்கப் போவதில்லை.

-கரிகாலன்
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com