இலட்சியத்தை அடைய மாற்றுத் தலைவர்களிடையே தந்திரோபாயக் கூட்டு அவசியம்-தி.திபாகரன் M. A

இலட்சியத்தை அடைய மாற்றுத் தலைவர்களிடையே தந்திரோபாயக் கூட்டு அவசியம். தி. திபாகரன் M. A

கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய ஊடகப் பேட்டியினால் வெளியிருந்து கிளம்பிய எதிர்ப்பலையை விட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக்குள்ளிருந்த எதிர்ப்பலை பெரிதாக இருந்ததான தோற்றப்பாடு ஒன்று காண்பிக்கப்பட்டது.

சுமந்திரனைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோசத்துடன் சம்பந்தன் வீட்டிற்குப் படையெடுத்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், செல்வம் அடைக்கலநாதன் எங்கோ பதுங்கிக் கொள்ள, அங்கு நடந்த கூட்டத்தில் 'நான் பதவி விலகமாட்டேன் வேண்டுமென்றால், நீங்கள் என்னைப் பதவி நீக்கம் செய்யுங்கள்" என சுமந்திரன் சொல்ல அனைவரும் எதுவும் பேசாமல் ராஜபக்ச அரசுடன் கூட்டுச்சேர்வது பற்றி பேசிவிட்டு சம்பந்தன் வீட்டிலிருந்து கிழம்பிச் சென்றுவிட்டனர்.

இதிலிருந்து மேற்படி சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியான நாடகமாகவும், அவர்கள் அனைவரும் நல்ல அரசியல் நடிகர்கள் என்பதை இப்போது நிரூபித்து விட்டார்கள்.

இலட்சயத்தை நோக்கிய பயணத்தில் தடைக்கல்லாக இருப்பனவற்றை நீக்குவதங்கு கைக்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளே கொள்கைகளாகும். அந்த வகையில் தமிழரின் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தடைக்கல்லாக இருப்பனவற்றை அகற்றுவது மிக முக்கியமானது.

அத்தடைகளை தனித்து அகற்ற முடியாவிட்டால் ஒத்த கருத்துடையோரை இணைத்துக் கூட்டாக இணைந்து தடைகளை தகர்ப்பது அரசியலில் ஒரு தந்திரமாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால கட்டங்களில் போராட்டத்திற்குத் தடைக்கல்லாக இனங்காணப்பட்டு, துரோகிகள் என மிதவாதிகளால் குறிப்பிடப்பட்ட அல்பிரட் துரையப்பா, தியாகராஜா, போன்றோர் அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதனால் பல தடைக்கற்களாக இருந்தவர்கள் ஒதுங்கி வழிவிட நேர்ந்தது. அவ்வாறே இன்றைய அரசியற் சூழலில் அத்தகைய வன்முறையை இங்கு யாரும் வரவேற்கவில்லை. ஆனால் இவ்வாறு தமிழர் தேசிய அபிலாசைகளை நோக்கிய பயணத்தில் தடைக்கற்களாக இருக்கின்ற அரசியற் தலைவர்களை சனநாயக வழியில் வீழ்த்த மாற்றுத் தலைமை எனப்படுபவர்கள் குறைந்தபட்சம் இவர்கள் அனைவரும் தம்முள்ளே ஒன்றிணைந்து, ஒரு பலமான கூட்டணியை உருவாக்க வேண்டியது தான் இன்றைய வரலாற்றின் தேவையாகும்.

இங்கு மாற்றுத் தலைமைகளாகக் கணிக்கப்படுகின்ற கு.கஜேந்திரகுமாரோ, சி.வி.விக்கினேஸ்வரனோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ, சிவாஜிலிங்கமோ, தனித்துநின்று இன்றைய களச்சூழலில் வெற்றிபெறமுடியாது. எனவே இவர்கள் கூட்டுச் சேர்வதன் மூலம்தான் சிங்களக் கட்சிகளிடம் சோரம் போய்விட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளை வீழ்த்த முடியும்.

இன்று இருக்கின்ற உடனடித் தேவை மாற்றுத் தலைமை எனப்படுபவர்கள் கூட்டுச் சேர்ந்து எதிரியை வீழ்த்த வேண்டும். எதிரியை வீழ்த்திய பின்னர் இவர்கள் தங்களுக்குள் பேரம் பேசுவது இரண்டாம் பட்சமே. அத்தகைய ஒரு கட்டத்தில் ஈழத்தமிழரின் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகப் பெறுமானமிக்கவர்கள் போன்றோர் இணைந்து, உள்ளக விடயங்களை அவரவர்க்குரிய வகிபாகத்தை நிர்ணயிக்க முடியும்.

எனவே, இன்றைய அரசியற் சூழலில் மாற்றுத் தலைமைகளின் உடனடிக்  கொள்கை என்பது தமிழ்த் தேசிய அபிலாசைகளுக்குத் தடையாக இருக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளை வீழ்த்துவது தான்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் தியாகம், அர்ப்பணிப்பு என தமிழ்த் தேசிய அரசியல் பயணித்ததற்கு முரணாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் சொத்துச் சேர்க்கும் கூட்டமொன்று நுழைந்து கேலோச்சுகிறது.

இந்தக் கூட்டம் எப்போதுமே தமிழ் மக்களை ஏமாற்றி பழக்கப்பட்டு விட்டதோடு அதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றுவிட்டது.

சொத்துச் சேர்ப்பதையே இவர்கள் தங்களின் இலட்சியமாகக் கைக்குண்டு விட்டார்கள். அந்த இலட்சியத்தை அடைவதற்கு தமிழ் மக்களின் காவலனாக தம்மை மார்பு தட்டிக் கொள்ளவும், பின் கதவால் பேரினவாதத்துடன் கைகோர்த்து, சமசரமாகவும் அவர்களால் முடிகிறது.

'சூனியத்தை பேய்க்குப் படித்து தாய்க்கு விட்டவன்" என்ற கிராமிய வழக்கு வாக்கியம் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதத்திற்கு எதிராகப் போராடாமல் தன்னினத்தையே விற்றுப் பிழைக்கத் தொடங்கிவிட்டது.

இவ்வாறுதான் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக எழுந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என வகைப்படுத்தி நீதிவிசாரணை எழுகின்ற சூழ்நிலையில் தமிழர்கள் நீதிபெறப் போகிறார்கள் என்ற நிலை இருந்தவேளை எல்லாம் முடிந்துவிட்டது பேரினவாதம் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அம்பலப்படப் போகிறது, என யாவரும் எதிர்பார்த்திருக்க சிங்களப் பேரினவாத ராஜதந்திரம் இவற்றை எல்லாமம் தலைகீழாக மாற்றி நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து தமிழர்களின் வாக்குகளினால் பதவிக்கு வந்தவர்களையே பயன்படுத்தி சர்வதேசக் குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையையும், இலங்கை இராணுவத்தையும் அதற்குப் பொறுப்பான ராஜபக்சக்களையும் காப்பாற்றியிருந்தார்கள்.

இந்த ராஜதந்திர யுத்தியை கூட்டமைப்பினர் புரியாதவர்களல்லர். அவர்கள் புரியாதவனபோ ல் நடித்து தம் சொத்துச் சேர்த்தல் என்ற இலட்சியத்தை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் சேர்த்த சொத்து என்பது தமிழர் தாயகத்தில் சிந்திய குருதியும், சிதைந்த உடல்களும், இழந்த அங்கங்களும், அநாதைக் குழந்தைகளும், விதவைகளுமென, தமிழர் தேசத்தின் கண்ணீரையும், செந்நீரையும் விற்றுப் பெறப்பட்டவையே.

'உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுதலும், அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்" என்பதற்கு இணங்க, வரலாறு இவர்களை என்றே ஒருநாள் தண்டித்தே தீரும்.

இன்று மீண்டும் சொத்துப் சேர்க்கவும், சேர்த்த சொத்தைப் பாதுகாப்பதற்கும், சிங்கள அரசுடன் கூட்டுச் சேரவேண்டிய சூழல் வந்துவிட்டது. இலங்கை அரசினதும், பொலிஸ், புலனாய்வுத் துறை, திறைசேரி ஆகியவற்றின் அனுசரணையின்றி வருமானத்திற்கு மிஞ்சிய சொத்துக்களைச் சேர்க்கவோ, பாதுகாக்கவோ முடியாது. எனவே அரசுடன் கூட்டுச் சேர்ந்தால் தான் இவை சாத்தியமாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கடந்த ஐந்து வருடங்கள் இழுத்தடித்து, எதனையும் சாதிக்காமல், இன்னுமொரு தடவை வாய்ப்புத் தரும்படி மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்கும் படலம் தொடங்கிவிட்டது.

இன்றைய சூழலில் மேற்குலகின் விருப்புக்கு மாறாக ராஜபக்சக்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார்கள்.

உள்நாட்டில் அவர்களால் இலகுவாக எலலாவற்றிலும் வெற்றிபெற முடியும். தேர்தலில் திரட்சிபெற்றிருக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம், ராஜபக்சக்களின் பின்னே அணிவகுத்து நிற்கிறது. எனவே அவர்களுக்கு உள்நாட்டில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. ஆனால், சர்வதேசப் பிரச்சனைகளை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் ராஜபக்சக்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

அந்த வகையில் தான் கடந்த வாரம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சாவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையும், அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளும், ராஜபக்சக்களுடன் இணைந்து தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கான தீர்வைப் பற்றிப் பேசப் போவதாகவும் அறிவித்ததிலிருந்து, எதிர் காலத்தில்  தமிழ்மக்களின் அரசியலில் ஏற்படப்போகும் விபரீத மாற்றங்களை ஊகிக்க முடியும். 

இன்று இலங்கையரசின் தேசிய வருமானத்தில், சம்பளம் பெறும் இராணுவத்தினரை ராஜபக்சக்கள் தமது பொதுசன முன்னணிக் கட்சியின் ஊழியர்கள் போல் மாற்றி அமைத்துள்ளார்கள்.

இப்போது கட்சியின் பிரமுகர்களை விட, களத்தில் செயல் முறைத் தீர்முறைத் தீர்மானம் எடுப்பவர்கள் இராணுவ அதிகாரிகளே. அந்தளவிற்கு இராணுவம் ஆளும் கட்சியாகவும், பாதுகாப்புப் படையாகவும்; செயற்படுவதானது மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. எனவே மகாசங்கம், இராணுவத்தினர், மக்கள் என திரட்சிபெற்ற சிங்கள பெருந்தேசிய மேலாதிக்க வாதத்தால், ராஜபக்சக்கள் அரண் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இன்று எதிர் கொண்டுள்ள பிரச்சனை என்பது சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் இனப்படுகொலை, போர்க் குற்றவிசாரணை, காணாமல் ஆக்கப்பட்டார் என்பவைகளே.

இந்தப் பிரச்சனையில் இருந்து அவர்களைக் காக்க வல்லவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் என்பதை ராஜபக்ச ககளும் ,அதே நேரம் ராஜபக்சேக்களை தம்மால் தான் காப்பாற்ற முடியும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நன்கறிவர்.

இந்தப் பின்னணியில் தான் எதிர் காலத்தில் முன் கதவாலும், பின் கதவாலும், ராஜபக்சக்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான புதிய அரசியல் நாடகம் அரங்கேறப் போகிறது. எனவே தமிழ்மக்களின் அரசியலில் ஏற்பட்டிருக்கும் அரசியற் புற்றுநோய்க் கட்டியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றாமல், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது.

இந்தத் தருணத்தில், தமிழ்மக்கள் தமது வாக்கை மருந்தாகப் பயன்படுத்தி இந்த புற்றுநோய்க் கட்டியை அகற்ற வேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக இந்த மாற்றுத் தலைமைகள் எனப்படுவோர் தம்முள் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டுப் பலத்தை முன்னிறுத்த வேண்டும். இதுவே தமிழ்த் தேசிய இலட்சியத்தை நோக்கிய பயணப் பாதையில் உடனடி அரசியற் கொள்கையாக இருக்கவேண்டும். இந்த கொள்கை முடிவின் கீழ் அனைத்து தமிழர் நலன்சார் சக்திகள் ஒன்றுதிரளவேண்டும்.

இங்கு, குறுகிய வாதப் பிரதி வாதங்களை விட்டு, தேசிய நலனை கருத்திற் கொண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், ஓரணியில் கீழ் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பின் கீழ் தேர்தலுக்கு முன்னும் கூட்டுச் சேரலாம், தேர்தல் முடிந்த பின்னும் கூட்டுச் சேர்ந்து ஆசனங்களை மீள்பங்கீடு செய்ய இடமுண்டு.

இன்றிருக்கின்ற அரசியல் யாப்பு எமக்குப் பாதகமாக இருக்கின்ற போதும், அதிலுள்ள ஓட்டைகளை எமக்குச் சாதகமாக பயன்படுத்த முடியும்.

அவ்வாறில்லாமல் மாற்றுத் தலைமைகள் தமக்குள்ளே பிரிந்து பிளவுபட்டு முட்டி மோதிக் கொண்டிருந்தால் தமிழ்த் தேசிய அபிலாசைகளின் பொது எதிரிகளாகிய சிங்களப் பௌத்த பெருந் தேசிய வாதத்திற்கும், அதற்கு முண்டு கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் வெற்றிக்கு வழிசமைத்து ஈற்றில் எதிரிகளின் காலில் தாமும் வீழ்ந்து, தமிழ் மக்களையும் வீழ்த்தி, எதிரிக்குச் சேவகம் செய்யும் துர்ப்பாக்கியத்தையே வரலாறு பதிவு செய்யும்.

தி.திபாகரன், M.A
1:45
30/05/202
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com